வரவு செலவுத் திட்டத்தில் மக்களின் கருத்துக்கள் உள்வாங்கப்படவில்லை – சாந்த தேவராஜன்

தொழில்நுட்ப வல்லுனர்களை செவிமடுப்பதற்கு பதில் இலங்கை அதன் மக்கள் என்ன சொல்கின்றார்கள் என்பதை செவிமடுக்கவேண்டும் என உலக வங்கியின் முன்னாள் தலைமை பொருளாதார நிபுணர் பேராசிரியர் சாந்த தேவராஜன் தெரிவித்துள்ளார்.

பொதுமக்களின் கருத்துக்களிற்கு செவிமடுக்காத பட்சத்தில் தேசிய பொருளாதாரத்தின் உண்மையான பிரச்சினைகளிற்கு தீர்வை காணமுடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டு மக்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளிற்கு தீர்வை காண்பதற்காக தொடர்ந்து வந்த ஆட்சியாளர்கள் ஆலோசனை குழுக்களை அமைப்பதிலும் செயலணிகளை அமைப்பதிலும் கவனம் செலுத்தினார்கள் ஆனால் இந்த நடவடிக்கைகள் மக்கள் எதிர்கொண்டுள்ள உண்மையான பிரச்சினைகளிற்கு தீர்வை காண்பதற்கு உதவவில்லை சவால்களிற்கு தீர்வை காண்பதற்கு உதவவில்லை என தெரிவித்துள்ள அவர் மக்களின் குரல்கள் புறக்கணிக்கப்பட்டமையே இதற்கு காரணம் எனவும் தெரிவித்துள்ளார்.

நீண்ட காலமாக பொருளாதார பிரச்சினை இலங்கையில் தொழில்நுட்ப பிரச்சினையாக பார்க்கப்படுகின்றது திறமைசாலிகளை தெரிவு செய்து அவர்களை ஒரு அறையில் இருக்கiவைத்தால் அவர்கள் மிகச்சிறந்த பொருளாதார கொள்கைகளை வகுப்பார்கள் என்ற சிந்தனை காணப்படுகின்றது எனவும் குறிப்பிட்டுள்ள சாந்ததேவராஜன் இதுவே பிரச்சினை எனவும் தெரிவித்துள்ளார்.

மக்களை உண்மையில் செவிமடுக்கும் கொள்கை உருவாக்கல் நடைமுறைகள் அவசியம் மக்கள் முக்கியமான சில விடயங்களை தெரிவிக்கின்றார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தொழில்நுட்ப வல்லுனர்களின் கொள்கை தீர்மானங்களை நடைமுறைப்படுத்த முயல்வதன் காரணமாக யதார்த்தத்தையும் பொதுமக்களின் உண்மையான பிரச்சினைகளையும் தொடர்புபடுத்த முடியாத புரிந்துகொள்ள முடியாத நிலையில் உள்ளனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உலக வங்கி சர்வதேச நாணயநிதியம் போன்றவற்றுடன் கலந்தாலோசனைகளை மேற்கொள்வது அவசியம் அதேவேளை பொதுமக்களை கலந்தாலோசிப்பதும் அவசியம் ஆனால் அவ்வாறான நடவடிக்கைகளில் எவரும் ஈடுபடப்போவதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

2023 வரவு செலவுதிட்டம் மக்களின் மக்களின் கருத்துக்கள் புறக்கணிக்கப்பட்டமைக்கான சிறந்த உதாரணம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எதிர்கால அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் உலக வங்கி பிரதிநிதிகளுடன் விசேட கலந்துரையாடல்

இலங்கையின் எதிர்கால அபிவிருத்தி திட்டங்கள் மற்றும் கொள்கைகள் தொடர்பாக உலக வங்கி பிரதிநிதிகளுடனான கலந்துரையாடல், தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம ஆகியோரின் தலைமையில் வியாழக்கிழமை (நவ.17) நிதியமைச்சில் நடைபெற்றது.

உலக வங்கியின் இலங்கைக்கான பணிப்பாளர் பாரிஸ் ஹடட்- ஸ்வோஸ் உள்ளிட்ட குழுவினருடன் நடைபெற்ற இக்கலந்துரையாடலில் நாட்டின் எதிர்கால அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் கொள்கைகள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டன.

அரச நிதிக் கண்காணிப்பு மற்றும் கடன் முகாமைத்துவத்தை மேம்படுத்தல், வரி நிர்வாகக் கொள்கையை மேம்படுத்தல், இறையாண்மை நிதித்துறையின் தொடர்பு மற்றும் கட்டமைப்பு ரீதியில் இடர் குறைப்பு, வலுசக்தித் துறையின் செயல்திறனை மேம்படுத்தல் மற்றும் காபன் வெளியேற்றத்தைக் குறைத்தல், கொள்கை நிச்சயமற்ற தன்மையைக் குறைத்தல் மற்றும் பொருளாதார போட்டித்தன்மையை அதிகரித்தல், அரச தொழில் முயற்சிகளை மறுசீரமைத்தல், தனியார் மூலதனத்தை நடைமுறைப்படுத்துவதன் மூலம் பிரோட்பேண்ட் சந்தையில் போட்டித் தன்மையை அதிகரித்தல், சமூக பாதுகாப்பு நிறுவனங்களைப் பலப்படுத்தல் மற்றும் விநியோகக் கட்டமைப்பை இலக்காகக் கொள்ளுதல் ஆகிய 8 துறைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதுடன் அது குறித்த ஆலோசனைகளும் முன்வைக்கப்பட்டன.

ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, ஜனாதிபதியின் சிரேஷ்ட பொருளாதார ஆலோசகர் கலாநிதி ஆர்.எச்.எஸ்.சமரதுங்க, நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன, மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க மற்றும் துறைசார் நிறுவனங்களின் அரச அதிகாரிகளும் இக்கலந்துரையாடலில் பங்குபற்றினர்.

அதன் பின்னர், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்த உலக வங்கியின் இலங்கைக்கான பணிப்பாளர் பாரிஸ் ஹடட்- ஸ்வோஸ் உள்ளிட்ட பிரதிநிதிகள் குழு, ஜனாதிபதிக்கு இவ்விடயங்கள் குறித்து விளக்கமளித்தமை குறிப்பிடத்தக்கது.