10கோடி நட்டஈடு செலுத்தும் அளவிற்கான பணம் இல்லை – மைத்திரி

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில், 10 கோடி ரூபா நட்டஈடு செலுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ள போதிலும், அதனை செலுத்தும் அளவிற்கான சொத்து தம்மிடம் இல்லை என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

வெயாங்கொடை பகுதியில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் இடம்பெற்ற போது, தாம் சிங்கப்பூரில் இருந்ததாக தெரிவித்தார்.

இந்த தாக்குதல் குறித்து பாதுகாப்பு அதிகாரிகளுக்கு போதியளவு புலனாய்வு தகவல்கள் கிடைக்கப்பெற்றிருந்தும், அதனை தம்மிடம் எவரும் வெளிப்படுத்தியிருக்கவில்லை. இதனையே நான் சாட்சியமாகவும் வழங்கியிருக்கின்றேன்.

88 பக்கங்களை கொண்ட தீர்ப்பு அறிக்கையின் எந்தவொரு இடத்திலும், அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற தகவல்கள் ஜனாதிபதி தெரிவிக்கப்பட்டதாக குறிப்பிடப்படவில்லை.
அவ்வாறெனில் தமக்கு ஏன், உயர் நீதிமன்றில் குறித்த தீர்ப்பு வழங்கப்பட வேண்டும் என மக்கள் நினைக்கலாம்.

குறித்த தீர்ப்பில், ஜனாதிபதியினால் தெரிவு செய்யப்படும் அதிகாரிகள் தவறிழைக்கு சந்தர்ப்பத்தில், அதற்கு ஜனாதிபதியே பொறுப்பானவராவார்.

அதனடிப்படையில் காவல்துறை மா அதிபர் மற்றும் பாதுகாப்பு செயலாளர் ஆகியோரை நியமிக்கும் பொறுப்பு ஜனாதிபதிக்குரியதாகும்.

அவர்கள் தமது பொறுப்பை சரிவர நிறைவேற்றாமை காரணமாகவே தமக்கு குறித்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

அதற்காக விதிக்கப்பட்ட 10 கோடி ரூபா அபராதத்தை செலுத்தும் அளவிற்கான சொத்து தம்மிடம் இல்லை.அதனை எவ்வாறு செலுத்துவது என்பது குறித்தும் ஆலோசித்து வருகின்றேன்.

தமக்கு எவ்வாறான தடங்கல் ஏற்படினும் எனது சேவையை முன்னெடுப்பதற்கு தயராக இருப்பதாகவும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஐ.எஸ் அமைப்புடன் தொடர்புடைய ஒருவர் காத்தான்குடியில் கைது

ஐ.எஸ் அமைப்புடன் தொடர்பில் இருந்தார் என்றக் குற்றச்சாட்டின் கீழ், இந்தியாவில் அண்மையில் கைது செய்யப்பட்டவருடன் தொடர்பில் இருந்த ஒருவர் காத்தான்குடியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

30 வயதுடைய ஒருவரே பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் சந்தேகத்தின் பேரில், திங்கட்கிழமை (02) இரவு கைது செய்துள்ளதாக பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் தற்கொலைதாரியான சஹ்ரான் ஹசீமுடன் தொடர்பில் இருந்தனர் என்றக் குற்றச்சாட்டின் பேரில், ஜ.எஸ். அமைப்பைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டனர்.

2022 ஓக்டோபர் மாதத்தில் இந்தியா கோயம் புத்தூரில் இடம்பெற்ற குண்டுவெடிப்பு சந்தேக நபர்களுடன் தொடர்பு கொண்டிருந்ததாகக் கூறப்படும் ஷேக் ஹிதாயத்துல்லா மற்றும் இந்தியாவில் பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்தும் திட்டங்களில் பங்கேற்றதாகக் கூறப்படும் சனோபர் அலி ஆகியோரே டிசெம்பர் 29 ஆம் திகதி இந்தியாவில் கைது செய்யப்பட்டனர்..

இந்த சந்தேகநபர்கள் 2022 பெப்ரவரியில் ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் வனப்பகுதியின் ஆசனூர் மற்றும் கடம்பூர் பகுதிகளில் உள்ள வனப்பகுதியின் உட்பகுதியில் சதித்திட்டத்தில் ஈடுபட்டதுடன் இலங்கையில் 2019 ஏப்ரல் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரியான சஹ்ரான் ஹசீமுடன் தொடர்பில் இருந்துள்ளமையும் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட ஜ.எஸ். அமைப்பைச் சேர்ந்தவருடன் காத்தான்குடியைச் சேர்ந்த 30 வயதுடையவர் முகநூலில் தொடர்புகளை பேணிவந்துள்ளதாக இந்திய உளவுத்துறை விசாரணையின் தெரியவந்ததையடுத்து இலங்கை உளவுத்துறைக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்பிரகாரம் காத்தான்குடியிலுள்ள அவரது வீட்டில் வைத்து விசாரணைக்காக பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார் என்றும் பொலிஸ் அதிகாரி தெரிவித்தார்.