அரச துறை மறுசீரமைப்புக்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்காக நியூசிலாந்தின் நிபுணர்கள் குழுவொன்று விரைவில் நாட்டுக்கு விஜயம் செய்யவுள்ளது.
இலங்கைக்கான நியூசிலாந்து உயர்ஸ்தானிகர் மைக்கல் எபல்டன் நேற்று புதன்கிழமை பிரதமர் தினேஷ் குணவர்தனவை அலரிமாளிகையில் சந்தித்து கலந்துரையாடினார். இதன் போதே இவ்விடயம் தொடர்பில் தெரிவிக்கப்பட்டது.
இலங்கையுடன் மேற்கொள்ளப்பட்டுள்ள இருதரப்பு பொருளாதார ஒத்துழைப்புக்களை மேலும் மேம்படுத்துமாறும் , கொழும்பு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் ஒத்துழைப்புக்களை அதிகரிக்குமாறும் பிரதமர் தினேஷ் குணவர்தன இதன் போது கோரிக்கை விடுத்துள்ளார்.
மஹரகம இலங்கை பல் மருத்துவக் கல்லூரிக்கு நியூசிலாந்து அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட மானியத்தை நினைவு கூர்ந்த பிரதமர், அதற்கு வழங்கப்படும் வசதிகளை அதிகரிக்குமாறும் கோரிக்கை விடுத்தார். உயர்ஸ்தானிகர் அதனை ஏற்றுக்கொண்டதுடன், பல் மருத்துவப் கல்லூரியை மீண்டும் கண்காணித்து ஆதரவளிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் அரசதுறை சீர்திருத்த வேலைத்திட்டங்களுக்கு நிபுணத்துவம் வழங்க நியூசிலாந்து தயாராக இருப்பதாக உயர்ஸ்தானிகர் குறிப்பிட்டார். நியூசிலாந்தின் முன்னாள் பொதுச் சேவை ஆணையாளர் தலைமையிலான குழுவொன்று விரைவில் இலங்கை வரவுள்ளமை தொடர்பிலும் அவர் குறிப்பிட்டார்.
காலாவதியான காணி கட்டளைச் சட்டத்தை திருத்தவும் திட்டமிட்டுள்ளதோடு , பழங்குடியின மக்களின் காணி உரிமைப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு நியூசிலாந்து அரசாங்கத்துடன் அனுபவங்களைப் பரிமாறிக் கொள்ள வேண்டியதன் அவசியத்தையும் காலாவதியான காணிச் சட்டத்தை திருத்தியமைப்பதன் முக்கியத்துவத்தையும் பிரதமர் இதன் போது தெளிவுபடுத்தியுள்ளார்.
தற்போதைய பொருளாதார சவால்களை சமாளிப்பதற்கான இலங்கையின் நடவடிக்கைகள், கடன் மறுசீரமைப்பு, வர்த்தகம் மற்றும் முதலீடு, தேர்தல் சட்ட திருத்தம் குறித்தும் இதன் போது கலந்துரையாடப்பட்டுள்ளது.