மின் கட்டண அதிகரிப்பு விவகாரத்தில் அமைச்சரவைக்கு கூட எம்மை மீறி செயற்பட முடியாது. இதற்காக சட்டமா அதிபரையோ , நீதிமன்றதையோ நாட வேண்டிய அவசியமும் இல்லை.
சட்டத்தின் பிரகாரம் இறுதி தீர்மானம் எடுக்கும் அதிகாரம் தமக்கே காணப்படுவதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் கேட்போர் கூடத்தில் வியாழக்கிழமை (டிச.05) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பொது முகாமையாளரின் மின் கட்டண திருத்த யோசனையே அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
எனினும் அதிஷ்டவசமாக அமைச்சரவை அது தொடர்பான தீர்மானத்தை ஒரு வாரத்திற்கு காலம் தாழ்த்தியுள்ளது. அமைச்சரவை அந்த யோசனையை அங்கீகரிக்காது. மாறாக அமைச்சரவை அதற்கு அங்கீகாரமளித்தாலும் , பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அதனை ஏற்காது.
கடந்த மாதம் மின் உற்பத்திக்காக நிலக்கரிக்கு பதிலாக எரிபொருள் பயன்படுத்தப்பட்டமையினால் 13 பில்லியன் நஷ்டம் ஏற்பட்டது.
எனவே உரிய நேரத்தில் நிலக்கரியை இறக்குமதி செய்வதற்கு முன்னுரிமையளிக்க வேண்டும். தொழிற்துறைகளின் வீழ்ச்சிக்கு மத்தியில் மின்கட்டணத்தை அதிகரிப்பது எந்த விதத்திலும் நியாயமானதல்ல.
இது தொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசனைப் பெறுவதற்கு எவ்வித அவசியமும் இல்லை. ஆணைக்குழுவிற்கு எதனை செய்ய முடியும் , எதனை செய்ய முடியாது என்பது சட்டத்தில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே எமக்கு நீதிமன்றத்தை நாட வேண்டிய தேவையும் கிடையாது. இறுதி தீர்மானத்தை எடுக்கும் அதிகாரம் எமக்கிருக்கிறது. அதனை முகாமைத்துவம் செய்யும் இயலுமையும் எமக்கு காணப்படுகிறது.
முன்வைக்கப்பட்டுள்ள யோசனைக்கமைய 180, 300 அலகுகளை விட அதிக மின்சாரத்தை உபயோகிப்பவர்களுக்கு கட்டணம் அதிகரிக்கப்படவில்லை. மாறாக நிலையான கட்டணங்களே அதிகரிக்கப்பட்டுள்ளன. பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் இல்லாத மக்களிடமிருந்து மேலும் மேலும் சுரண்டுவதற்கு எம்மால் இடமளிக்க முடியாது.
எம்மை மீறி அமைச்சரவையினாலும் இவ்விடயத்தில் தீர்மானங்களை எடுக்க முடியாது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கான சட்டத்தினை தயாரித்தார் என்பதற்காக அவரால் அதற்கு உரிமை கோர முடியாது.
இது மக்களின் சட்டமாகும். ஆணைக்குழு உறுப்பினர்களான எம்மால் அரசியல் செய்ய முடியாது. அதே போன்று அரசியலில் ஈடுபடுபவர்களுக்கு ஆணைக்குழுவின் உறுப்பினர்களாக இருக்க முடியாது.
மின் கட்டணங்களில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டுமெனில் அதனை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கு மாத்திரமே செய்ய முடியும். எம்மை மீறி கட்டண திருத்தங்களை மேற்கொள்வதாயின் ஆணைக்குழு தொடர்பான சட்டங்களில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும் என்றார்.