தமிழ் மக்களுக்கான தீர்வு பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குவதன் ஊடாவே அமையும்

பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு எதிராக தமிழ் மக்கள் ஒன்றிணைந்து போராடுவதன் ஊடாக வடக்கில் காணிப்பிரச்சனை, இராணுவ மாயக்கல் பிரச்சனை, மற்றும் வடக்கு மாகாணத்தில் உள்ள தமிழ் மக்களின் ஏனைய பிரச்சனைகள் தீர்ப்பதற்காக முதற்படியாக அமையுமென அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் எற்பாட்டாளர் வசந்த முதலிகே யாழில் தெரிவித்துள்ளார்.

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் எற்பாட்டில், பயங்கரவாத தடைச்சட்டத்தினை உடனடியாக நீக்க வேண்டும், மக்கள் சக்தியினை கட்டியெழுப்புதல் தொடர்பான பொதுக்கருத்தரங்கு இன்று யாழில் இடம்பெற்றபோது வசந்த முதலிகே இவ்வாறு தெரிவித்திருந்தார்.

வடக்கின் பிரச்சனையினை அறியும் தெற்கு மனிதர்களும், தெற்கின் பிரச்சனையினை அறியும் வடக்கு மனிதர்களும் உருவாக்கப்பட வேண்டும். அதுவே அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் நிலைப்பாடு. அதற்கான முதற்கட்டமாகவே கருத்தரங்கு யாழில் இடம்பெற்றுள்ளது.

பயங்கரவாதத்தடைச்சட்டம் நீக்கவேண்டும், அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும் என்பதே ஆணித்தரமான எமது நிலைப்பாடு.தற்போது அரசாங்கம் புதிதாக சட்டம் ஒன்றினை உருவாக்கியுள்ளனர் அதில் பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் ஒன்றினை கொண்டுள்ளனர்.

அதில் போராட்டங்களின் போது சமூக ஊடங்களின் மூலம் அரசுக்கு எதிராக செயற்பட முடியாது என்பதை கொண்டுவந்துள்ளனர் என தெரிவித்தார்.

உருவாக்கிய நியதி சட்டங்களை ஆளுநர் இரத்து செய்யவேண்டும்; மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு

வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா உருவாக்கிய இரண்டு நியதிச் சட்டங்களையும் மே 24ஆம் திகதிக்கு முன்பாக இரத்துச் செய்ய வேண்டும் என்று மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று உத்தரவு பிறப்பித்தது.

இதேசமயம், மாகாண நியதிச் சட்டத்தை உருவாக்கும் அதிகாரம் ஆளுநருக்கு கிடையாது என்று வடக்கு மாகாண ஆளுநருக்கு எழுத்துமூலம் சட்ட மா அதிபரால் அறிவிக்கப்பட்டதாக அவரின் பிரதிநிதி நேற்று நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா கடந்த ஆண்டு ஒக்ரோபர் 27ஆம் திகதி வாழ்வாதார முகாமைத்துவ முதலாம் இலக்க நியதி சட்டம், சுற்றுலா அலுவலக நியதிச் சட்டம் என்ற இரு நியதிச்சட்டங்களை உருவாக்கி வர்த்தமானி மூலம் அறிவிப்பு செய்தார். வடக்கு மாகாண சபை இயங்குநிலையில் இல்லாத நிலையில் வடக்கு ஆளுநர் இந்த நியதிச் சட்டங்களை உருவாக்கி அறிவித்திருந்தார்.

இந்நிலையில், ஆளுநருக்கு நியதிச் சட்டம் உருவாக்கும் அதிகாரம் இல்லை. இவ்வாறு அவர் செய்தமை சட்ட விரோதமானது என்று தெரிவித்து வடக்கு மாகாண சபையின் அவைத்தலைவர் சீ. வீ. கே. சிவஞானம் வழக்கு தாக்கல் செய்திருந்தார். அவரின் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணியும் எம். பியுமான எம். ஏ. சுமந்திரன் நீதிமன்றில் முன்னிலையாகி வாதாடினார்.

நேற்று வெள்ளிக்கிழமை இந்த வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டது. இதன்போது, மன்றில் முன்னிலையான சட்டமா அதிபரின் பிரதிநிதி, “நியதிச் சட்டத்தை உருவாக்கும் அதிகாரம் ஆளுநருக்கு கிடையாது என்று சட்ட மா அதிபர் மூலம் வடக்கு ஆளுநருக்கு தெரியப்படுத்தப்பட்டது. இந்த நியதி சட்டங்களை நடைமுறைப்படுத்தமாட்டார் என்று எழுத்துமூலம் ஆளுநர் சட்டமா அதிபருக்கு உறுதியளித்துள்ளார். இதன் அடிப்படையில் இந்த வழக்கை தொடர்ந்து விசாரிக்காமல் நிறைவுக்கு கொண்டுவர வேண்டும் என்று நீதியரசரை கோரினார்.

ஆளுநரின் உறுதியளிப்பை ஏற்று வழக்கை கைவிட முடியாது. ஆளுநர் தனது நிலைப்பாட்டை நீதிமன்றத்துக்கு நேரடியாக வெளிப்படுத்தினால் மட்டுமே அதனை ஏற்று வழக்கை கைவிடலாம் என்று வழக்காளி தரப்பில் வாதாடிய சட்டத்தரணி தெரிவித்தார். இதையடுத்து நீதியரசர், அடுத்த வழக்கு விசாரணையின்போது – மே 24ஆம் திகதிக்கு முன்பாக, வடக்கு ஆளுநர் தான் அறிவித்த இரு நியதி சட்டங்களையும் இரத்து செய்து வர்த்தமானி மூலம் அறிவித்து நீதிமன்றத்துக்கு தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு, வழக்கை மே 24ஆம் திகதிக்கு ஒத்தி வைத்தார்.