ஜனவரியில் நடைமுறைக்கு வரவுள்ள புதிய வரிகள் காரணமாக இலங்கையின் பாரிய நிறுவனங்களை சேர்ந்தவர்கள் செலவுகளை குறைப்பதற்கும் அல்லது வெளிநாடுகளிற்கு புலம்பெயர்வதற்கும் சிந்திக்கின்றனர் என எக்கனமி நெக்ஸ்ட் தெரிவித்துள்ளது.
கடும் வருமானவரிகள் ஜனவரி முதல் நடைமுறைக்கு வரவுள்ளதால் இலங்கையின் பாரிய நிறுவனங்களை சேர்ந்த மில்லியன் கணக்கானவர்கள் செலவுகளையும் முதலீடுகளையும் குறைக்கவேண்டிய நிலையில் உள்ளனர்.
இலங்கை அரசாங்கம் வங்குரோத்து நிலையை அறிவித்து பத்துமாதங்களிற்கு பின்னர் புதிய வரிகள் நடைமுறைக்கு வரவுள்ளன.
எனினும் புதிய வரிகள் வருமானம் உழைப்பவர்களின் நுகர்வுதிறன் மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தப்போகின்றன, குறிப்பாக ஏற்கனவே கடன்பட்டவர்கள் வீடுகளிற்காக வங்கிகளில் கடன் பட்டவர்கள் நுண்கடன்களை பெற்றவர்கள் அதிகளவு பாதிப்பை எதிர்கொள்ளவுள்ளனர்.
மாதாந்தம் 150,00 ரூபாயை உழைக்கும் இலங்கையர் ஒருவர் தனது தனது வருமானத்தில் 2.3 வீதத்தினை செலுத்தவேண்டும் ஆனால் ஒரு மில்லியன் உழைப்பவர் 28.7 வீதத்தினை செலுத்தவேண்டும்.
எப்படி செலவுகளை குறைப்பது என தெரியவில்லை என்கின்றார் வங்கி துறையை சேர்ந்த 52 வயது நபர்.
இவர் ஏற்கனவே தனது வாகனங்களிற்கான லீசிங் மற்றும் வீட்டு கடன் போன்றவற்றை செலுத்தவேண்டிய நிலையில் காணப்படுகின்றார்.
நான் இரு கடன்களையும் பெற்றவேளை வட்டிவீதம் குறைவாக காணப்பட்டது என்னால் மாதம் ஒரு இலட்சம் ரூபாயை சேமிக்க முடிந்தது என தெரிவித்த அவர் தற்போது பணவீக்கம் எரிபொருள் விலை அதிகரிப்பு போன்றவற்றால் எதனையும் சேமிக்க முடியாத நிலையில் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
தற்போது நான் மலிவான பொருட்களிற்கு மாறிவிட்டேன் என மூன்று பிள்ளைகளின் தந்தையான அவர் தெரிவித்தார்.
இவரை போன்ற பல தனியார் துறை ஊழியர்கள் ( ஏற்கனவே வருமான வரி செலுத்துபவர்கள் ) புதிய வரி குறித்து ஏமாற்றம் வெளியிட்டனர்.
தனியார் துறையை சேர்ந்த பலர் தாங்கள் வரிகளை செலுத்த தயார் என குறிப்பிட்ட அதேவேளை வெளிப்படைத்தன்மையின்மை அரசாங்கத்தின் பண விரயம் பொறுப்பற்ற அரசியல் தீர்மானங்கள் போன்றவை இந்த வரிகள் அவசியமற்றவை என்ற உணர்வை ஏற்படுத்துகின்றது என தெரிவித்தனர்.
ஊதிப்பெருப்பிக்கப்பட்டுள்ள அரசசேவை குறித்தும் தனியார் துறையினர் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.
அரசியல் ரீதியில் நியமிக்கப்பட்ட வினைத்திறன் அற்ற அரசசேவையை தொடர்ந்தும் காப்பாற்றுவதற்கு அரசசேவையை சேர்ந்தவர்கள் தங்கள் சக்தியை வீணடிக்கின்றனர் இது எப்படி நியாயமான விடயமாகும் என வாகனங்கள் திருத்தும் நிலையத்தை சேர்ந்த சுனில் என்பவர் கேள்வி எழுப்பினார்.
எனது ஊழியர்கள் மோசமான காலநிலைக்கு மத்தியிலும்மேலதிக நேரம் வேலை பார்த்து சம்பாதிக்கின்றனர் காலையிலிருந்து நள்ளிரவு வரை வேலைபார்க்கின்றனர் என குறிப்பிட்ட அவர் அரசியல் ரீதியில் நியமிக்கப்பட்ட அரசாங்க ஊழியர்களிற்கு வருமானம் வழங்குவதற்காக தனியார் துறையை சேர்ந்தவர்கள் மீது அரசாங்கம் எப்படி வரி சுமையை செலுத்த முடியும் எனகேள்வி எழுப்பினார்.