இந்தியா பாதுகாப்பாகயிருந்தால் இலங்கையும் பாதுகாப்பாகயிருக்கும் – இந்திய உயர்ஸ்தானிகர்

இந்தியா பாதுகாப்பாகயிருந்தால் இலங்கையும் பாதுகாப்பாகயிருக்கும் என இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே தெரிவித்துள்ளார்.

இலங்கை எதிர்கொண்ட முன்னொருபோதும் இல்லாத நெருக்கடியின் போது வேகமாக வலுவான விதத்தில் செயற்பட்டபோது இந்தியா வேறு ஒரு நெருக்கடி விடயத்தில் நடந்துகொள்ளவில்லை எந்த நாட்டிற்கும் உதவவில்லை என இந்திய உயர்ஸ்தானிகர் தெரிவித்துள்ளார்.

இந்தியா இலங்கைக்கு உதவுவதற்காக சர்வதேச அளவிலும உள்நாட்டிலும் தனது பங்களிப்பை வழங்கியது என குறிப்பிட்டுள்ள அவர் இந்தியாவின் தலைமைத்துவம் வலுவான இந்திய இலங்கை உறவுகள் குறித்து தெளிவாகவும் அர்ப்பணிப்புடனும் உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

சீனா கப்பல்கள் கொழும்பிற்கு வருவது குறித்த இந்தியாவின் கரிசனைகள் குறித்த கேள்விக்கு பதிலளித்துள்ள அவர் இந்தியாவும் இலங்கையும் இந்து சமுத்திரத்தில் உள்ளன கடற்பயண சுதந்திரத்தை உறுதி செய்வது இரு நாடுகளினதும்கூட்டு பொறுப்பு கடப்பாடு எனவும் தெரிவித்துள்ளார்.

உருவாகின்ற கடல்சார் சவால்களிற்கு இணைந்து தீர்வை காணவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பும் ஸ்திரதன்மையும் காணப்பட்டால் அமைதியும் வளமும் காணப்படும் எனவும் தெரிவித்துள்ள உயர்ஸ்தானிகர் எங்கள் நாடுகள் அமைந்துள்ள பகுதியில் பாதுகாப்பை உறுதி செய்வது எங்களின் கூட்டு பொறுப்பாகும் இந்த அர்த்தத்தில் இலங்கையினதும் இந்தியாவினதும் பாதுகாப்பு பிரிக்க முடியாதது பரஸ்பரம் ஒன்றிணைந்தது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Posted in Uncategorized

ஈழ தமிழர்களை ஒரு போதும் இந்தியா கைவிடப்போவதில்லை; டெல்லியின் முக்கிய அதிகாரிகள் விக்கினேஸ்வரனிடம் தெரிவிப்பு

டில்லியில் நடைபெற்ற இந்திய மத்திய அரசின் அதிகாரிகள் மற்றும் புத்திஜீவிகள் உள்ளிட்ட பல்வேறுபட்ட சந்திப்புக்களின்போது, இந்தியா தமிழர்களை ஒருபோதும் கைவிடாது என்ற இறுக்கமான நிலைப்பாடுகள் வெளிப்படுத்தப்பட்டுள்ளதாக தமிழ் மக்கள் கூட்டணியின் பொதுச்செயலாளரும், யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

அத்துடன், குறித்த தரப்பினர் வடக்கு, கிழக்கில் உள்ள ஒவ்வொரு தமிழ்த் தலைவர்கள் பற்றியும் ஆழமான புரிதலைக் கொண்டிருந்தமை வியப்பளித்ததாக தெரிவித்த விக்னேஸ்வரன், இந்தியாவின் தேசிய பாதுகாப்பு தொடர்பில் அத்தரப்பினர் அதீதமான கரிசனைகளை வெளிப்படுத்தியதாகவும் குறிப்பிட்டார்.

புலம்பெயர் தமிழ் அமைப்புக்களின் ஏற்பாட்டில் அண்மையில் டில்லிக்கான விஜயமொன்றை வடக்கு, கிழக்கை மையப்படுத்திய அரசியல் தலைவர்கள்ர, சிவில் பிரதிநிதிகள், சமயத்தலைவர்கள் உள்ளிட்ட குழுவினர் மேற்கொண்டிருந்த நிலையில் அந்த விஜயம் சம்பந்தமாக கருத்து வெளியிடும்போதே சி.வி.விக்னேஸ்வரன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தமிழ் மக்களுக்கு தயாகத்தில் நடைபெற்ற அவலங்கள் சம்பந்தமாக நூலொன்றை வெளியிடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் ஏற்பாட்டாளர்கள் என்னை அழைத்திருந்தார்கள். அத்துடன் டில்லியில் முக்கிய சில தரப்பினரையும் சந்திப்பதற்கும் கோரியிருந்தார். அதேபோன்று டில்லி பல்கலைக்கழகத்திலும் தமிழ் மக்களின் விடயங்கள் சம்பந்தமாக உரையாற்றுமாறும் கோரியிருந்தார்கள்.

ஏற்கனவே நான் அகமதாபாத்தில் சட்டத்தரணிகள் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் பங்குபற்றிபோது தமிழர்களின் பிரச்சினைகள் சம்பந்தமாக அவர்களுக்கு போதுமான தெளிவான நிலைமைகள் இன்மையை நான் அவதானித்திருந்தேன்.

அதனடிப்படையில் வட இந்தியர்கள் மற்றும் அதிகாரிகள் புத்திஜீவிகள் மத்தியில் எமது விடயங்களை வெளிப்படுத்துவதற்கான ஒரு சந்தர்ப்பம் கிடைக்குமெனக் கருத்தி அந்த அழைப்பினை ஏற்றுச்சென்றிருந்தேன்.

இதன்போது வடக்கு, கிழக்கில் இருந்து இந்நாள் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் மதத்தலைவர்கள், சிவில் அமைப்பின் பிரதிநிதிகள், புலம்பெயர் தமிழ் அமைப்பின் செயற்பாட்டாளர்கள் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.

இந்நிலையில், நடைபெற்ற சந்திப்புக்களின்போதும், கலந்துரையாடல்களுக்கும், உரையாற்றுவதற்கும் கிடைத்த தளங்களிலும் எமது நிலைப்பாடுகளையும், எமது மக்கள் முகங்கொடுக்கும் பிரச்சினைகளையும் மிகத் தெளிவாக எடுத்துரைத்தேன்.

குறிப்பாக, எமது மக்கள் நிம்மதியாக வாழ்க்கையொன்றை முன்னெடுப்பதாக இருந்தால் இனப்பிரச்சினைக்கான நிரந்தரமான தீர்வொன்று கூட்டு சமஷ்டி அடிப்படையில் தான் ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தினோம்.

அதேநேரம் 13ஆவது திருத்தச்சட்டத்தினை ஒற்றையாட்சிக்குள் அமுலாக்குவதால் அதிகார பரவலாக்கம் நடைபெறுவதாக காண்பிக்கப்பட்டாலும், தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் அதிகாரப் பகிர்வினையே எதிர்பார்த்துள்ளனர். அதற்காகவே தொடர்ச்சியாக ஆணை வழங்கியும் வந்துள்ளார்கள் என்பதை சுட்டிக்காட்டினேன்.

மேலும், இருநாடுகளுக்கு இடையில் நடைபெற்ற சர்வதேச ஒப்பந்தம் என்ற அடிப்படையில் இந்திய இலங்கை ஒப்பந்தம் இன்னமும் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படாதுள்ளதோடு அதில் இலங்கை அரசாங்கம் எவ்விதமான மெத்தனப்போக்கை பின்பற்றுகின்றது என்பதையும் வெளிப்படுத்தினேன்.

அதுமட்டுமன்றி, சர்வஜனவாக்கெடுப்பு ஒன்று நடத்துவதற்கான தேவையையும் குறிப்பிட்டதோடு, சிங்களப் பெரும்பான்மை, பௌத்த மதவாதம் உள்ளிட்டவற்றின் பெயரால் நடைபெறுகின்ற ஆக்கிரமிப்புக்களையும் சுட்டிக்காட்டினேன்.

இதேநேரம், எமக்கும் மத்திய அரசாங்கத்தின் முக்கிய அதிகாரிகள் மற்றும் புத்திஜீவகளுன் நடைபெற்ற சந்திப்பு மிகவும் முக்கியமானது. எனினும் அவர்களின் பெயர்களை நான் வெளிப்படுத்த விரும்பவில்லை.

ஆனால், இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி உள்ளிட்ட முக்கிய தலைவர்களுக்கு எம்மால் சொல்லப்பட வேண்டிய செய்தியை அவர்களிடத்தில் பகிர்ந்துகொண்டுள்ளேன். அதேநேரம், அவர்களுடனான சந்திப்பின்போது, அவர்கள் வடக்கு, கிழக்கு தமிழ்த் தலைவர்கள் ஒவ்வொருவர் தொடர்பாகவும் ஆழமான முறையில் அறிந்து வைத்திருக்கின்றமையை இட்டு நான் ஆச்சரியமடைந்தேன்.

அதுமட்டுமன்றி, அவர்கள் தமிழ் மக்கள் தற்போது முகங்கொடுத்து வருகின்ற அனைத்துப் பிரச்சினைகள் தொடர்பிலும் முழுமையான தகவல்களைக் கொண்டுள்ளனர். இந்நிலையில், அவர்கள் முக்கியமான மூன்று விடயங்களை என்னுடன் பகிர்ந்து கொண்டனர்.

அதில் முதலாவதாக, இந்தியா தமிழர்களை எப்போதும் கைவிடாது என்ற உறுதிப்பாட்டை வெளிப்படுத்தினார்கள். இரண்டாவதாக, இந்தியாவின் தேசிய பாதுகாப்பில் அதிகமான கவனம் கொண்டிருப்பதோடு அந்த விடத்தில் வடக்கு, கிழக்கு தமிழர்களின் வகிபாகம் முக்கியமானது என்றும் குறிப்பிட்டனர்.

மூன்றாவதாக, வடக்கு, கிழக்கு மக்கள் முகங்கொடுக்கும் அனைத்துப் பிரச்சினைகளையும், பிரதிநிதிகளின் நிலைப்பாடுகளையும் தெளிவாக புரிந்து கொண்டுள்ளமையை வெளிப்படுத்தினார்கள். அதனடிப்படையில், அடுத்துவரும் காலத்தில் முக்கியமான சில நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படலாம் என்ற நம்பிக்கை எனக்கு ஏற்பட்டுள்ளது என்றார்.

Posted in Uncategorized

எட்கா ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தைகளை மார்ச்சில் நிறைவு செய்ய உடன்பாடு

உத்தேச இந்திய – இலங்கை பொருளாதார மற்றும் தொழிநுட்ப ஒத்துழைப்புக்களுக்கான ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தைகளை 2024 மார்ச்சில் நிறைவு செய்ய இருதரப்பு இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.

முன்மொழியப்பட்டுள்ள இந்திய – இலங்கை பொருளாதார மற்றும் தொழிநுட்ப ஒத்துழைப்புக்களுக்கான ஒப்பந்தத்தின் (எட்கா) 12 ஆவது சுற்றுக் கலந்துரையாடல் கடந்த ஒக்டோபர் 30 முதல் நவம்பர் 1 வரை கொழும்பில் இடம்பெற்றுள்ளது.

அதில் ஏற்புடைய பல துறைகள் தொடர்பாக இருதரப்பு செயற்பாட்டுக் குழு உடன்பாடுகளை எட்டியுள்ளது.

குறித்த உத்தேச ஒப்பந்தத்தின் 13 ஆவது சுற்றுக் கலந்துரையாடலை 2024.01.08 தொடக்கம் 2024.01.10 ஆம் திகதி வரை இந்தியாவில் நடாத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

2024 மார்ச் மாதமாகும் போது தொழிநுட்ப மட்டத்திலான கலந்துரையாடல்களை நிறைவு செய்வதற்கும் இருதரப்பினரும் உடன்பட்டுள்ளனர். 12 ஆவது சுற்றுக் கலந்துரையாடல் தொடர்பாக ஜனாதிபதி சமர்ப்பித்த தகவல்கள் அமைச்சரவையின் கவனத்தில் கொள்ளப்பட்டது.

கோயில்களை அழித்து அமைக்கப்படும் பௌத்த விகாரைகள்; இந்திய அரசாங்கம் தலையிடவேண்டும் – திருமாவளவன் வலியுறுத்து

இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பழங்கால இந்து ஆலயங்களை அழித்து பௌத்த விகாரைகள், மடாலயங்களை அமைக்கும் முயற்சியை தடுப்பதற்கு பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான மத்திய அரசு தலையிட வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் எம்.பியுமான தொல். திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

உலக அளவில் இந்துக்கள் மற்றும் கோயில்களின் பாதுகாவலராக பாரதிய ஜனதா கட்சி காட்டிக் கொள்கிறது. ஆனால், இலங்கையில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பழம்பெரும் கோயில் அழிக்கப்படுகின்றன. இந்துக்களின் கலாசார அடையாளங்கள் பௌத்த அடையாளங்களாக மாற்றப்படுகின்றன. இந்த விடயத்தில் பா. ஜ. க. மத்திய அரசு மௌனம் காக்கிறது. இதேநேரம், புதுடில்லி சென்றுள்ள விக்னேஸ்வரன் எம். பி., குறைந்தது ஆயிரத்து 800 ஆலயங்களை இலங்கையின் அரச இயந்திரங்கள் அழித்துள்ளன என்று சுட்டிக்காட்டியுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது

Posted in Uncategorized

காங்கேசன்துறை துறைமுகத்தைப் பார்வையிட்டார் இந்திய தூதுவர்

யாழ்ப்பாணம் வருகை தந்த இலங்கைக்கான இந்திய தூதுவர் கோபால் பால்கே இன்று புதன் கிழமை காங்கேசன்துறைமுகப் பகுதிகளை பார்வையிட்டார்.

காங்கேசன் துறை நாகப்பட்டினம் கப்பல் சேவை ஆரம்பிக்கப்பட்ட நிலையில் அதன் கட்டுமானங்கள் மற்றும் தேவைகள் குறித்து இதன் போது யாழ் இந்திய துணை தூதரக அதிகாரிகள் தூதுவருக்கு விளக்கமளித்தனர்.

இலங்கை – இந்திய ஒப்பந்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு சிவில் புலம்பெயர் தரப்பினர் டில்லியில் கூட்டாக வலியுறுத்தல்

வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் மக்களுக்கான அதிகாரங்களும் நிர்வாக கட்டமைப்பும் இல்லாத நிலையில் இந்திய இலங்கை ஒப்பந்தத்தினை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு இந்தியா அதியுச்சமான தலையீட்டைச் செய்ய வேண்டுமென வடக்கு கிழக்கு அரசியல் சிவில் புலம்பெயர் தரப்பினர் கூட்டாக இந்தியத் தலைநகர் புதுடில்லியில் வலியுறுத்தியுள்ளனர்.

அத்துடன் தமிழர்களுக்கான அர்த்தமுள்ள நிரந்தர தீர்வினை வழங்குவதற்கான சர்வஜன வாக்கெடுப்பைச் செய்யவதற்கு இந்தியா வகிபாகமளிக்க வேண்டும் என்றும் மாகாண சபைகளுக்கான தேர்தல் நடத்தப்படாதுள்ளமையால் தற்காலிக ஏற்பாடாக இடைக்கால நிர்வாக சபையை ஸ்தாபிப்பதற்கு நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டுமெனவும் அவர்கள் வலியுறுத்தினார்கள்.

இந்திய தலைநகர் புதுடில்லியில் உள்ள ஊடக மையத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (28) நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவுஸ்திரேலிய தமிழ் காங்கிரஸின் தலைவர் கிருஸ்ணபிள்ளை இளங்கோ அமெரிக்க தமிழர் ஐக்கிய அரசியல் செயல்குழுவின் செயலாளர் கலாநிதி. தமோதரம்பிள்ளை சிவராஜ் ஐக்கிய அமெரிக்காவின் தமிழ் செயற்குழுவின் செயலாளர் சுந்தர் குப்புசுவாமி, உலக சமூக சேவை மையத்தின் அறங்காவலர் ஆர்.சி.கதிரவன் தழிழ் மக்கள் கூட்டணியின் பொதுச்செயலாளரும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் இலங்கை தமிழரசுக்கட்சியின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான ஞானமுத்து சிறிநேசன் எம்.கே.சிவாஜிலிங்கம் மற்றும் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகளான துரைசாமி தவசிலிங்கம் வேலன் சுவமிகள் ஆகியோரும் பங்கேற்றிருந்தனர்.

குறித்த குழுவினர் சார்பில் விக்னேஸ்வரன் ஊடகங்களுக்குகருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்

நாங்கள் இங்கு மூன்று விடயங்களை பிரதானமாக கூறுவதற்கு கடமைப்பட்டுள்ளோம். முதலாவதாக பூகோள ரீதியாக தாக்கம் செலுத்துகின்ற விடயமாகும்.

இலங்கையில் பெரும்பான்மை சிங்கள மக்களும் அவர்கள் வாழும் பகுதிகளும் சீனா சார்பு நிலையில் செயற்பட்டு வருகின்றார்கள்.

ஆனால் வடக்கு கிழக்கு மாகாணங்கள் இந்தியாவின் தென் பகுதிக்கு அருகாமையில் உள்ளன. அத்தோடு கலாசார சமய மொழி உள்ளிட்ட பல்வேறு விடயங்களிலும் இந்தியாவுடன் மிக நெருக்கமான தொடர்புகளைக் கொண்டுள்ளது.

அந்தவகையில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் உள்ள பெரும்பான்மையானவர்கள் எங்களது கடவுள் இந்தியா எம்மை ஆதரவாக பார்த்துக்கொள்ளும் என்ற நிலைப்பாட்டில் நம்பிக்கையுடன் இருக்கின்றார்.

அதுமட்டுமன்றி இந்த நம்பிக்கையானது எமது பாதுகாப்பையும் இந்தியாவின் தென்பிராந்திய தேசிய பாதுகாப்பையும் உறுதி செய்வதாக உள்ளது. அதனடிப்படையில் இந்த விடயம் பூகோள ரீதியாக முக்கியமானதாகும்.

இரண்டாவதாக சிங்கள பௌத்த திட்டமிட்ட ஆக்கிரமிப்புக்களுக்கு நாம் நேரடியான சாட்சியாளர்களாக இருக்கின்றோம். பிரித்தானிய காலனித்தத்துவம் முடிவுக்கு வந்தது. அதன்பின்னர் இலங்கை அரசியலமைப்புச் சட்டத்தின் 21ஆவது பிரிவில் சிறுபான்மை மக்கள் பாகுபாட்டுக்கு உட்படுத்தப்படக் கூடாது என்று கூறப்பட்டுள்ளது.

அவ்வாறு இருக்கதக்கதாக முதலில் இந்திய தமிழர்களின் பிரஜாவுரையை பறித்து அவர்களை நாடு கடத்தினார்கள். அதன் பின்னர் சிங்களம் மட்டும் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அதற்கு அடுத்தபடியாக இனக்கலவரங்கள் அரங்கேற்றப்பட்டு தமிழ் மக்கள் நாட்டிலிருந்து வெளியேறும் நிலைக்கு வலிந்து தள்ளப்பட்டார்கள். இதனால் தற்போது மில்லியன் கணக்கான தமிழ் மக்கள் வெளிநாடுகளில் புலம்பெயர்ந்து வாழும் நிலைமைகள் உருவாகியுள்ளன.

தொடர்ந்து எமது இளைஞர்கள் யுவதிகள் பல்கலைக்கழகங்களில் உள்நுழைவதை கட்டுப்படுத்தும் வகையில் தரப்படுத்தல் முறைமை அறிமுகப்படுத்தப்பட்டது. அத்தோடு இலங்கை அரசாங்கத்தின் மிலேச்சத்தனமான செயற்பாடுகள் தொடர்ந்ததன் காரணமாக இளைஞர்கள் ஆயுதங்களை கையிலெடுத்தார்கள். விடுதலை இயக்கங்கள் தோற்றம் பெற்றன. இவ்வாறு ஆரம்பிக்கப்பட்ட ஆயுத ரீதியான போராட்டம் கடந்த முப்பது ஆண்டுகளாக நடைபெற்றிருந்தது.

ஆயுதப்போராட்டம் நிறைவுக்கு வந்ததன் பின்னரும் தமிழர்களின் பூர்வீகப் பகுதிகளை ஆக்கிரமிப்புச் செய்து சிங்கள குடியேற்றங்களை மேற்கொள்ளுதல் பௌத்த மதம் சார்ந்த நிர்மாணங்களை மேற்கொள்ளுதல் என்று திட்டமிட்ட ஆக்கிரமிப்புக்களை முன்னெடுத்து அரசாங்கம் கொள்கை ரீதியாக முன்னெடுத்து வருகின்றது.

அரசாங்கம் தொடர்ச்சியாக தமிழர்களை ஓரங்கட்டும் செயற்பாட்டை பல்வேறு வழிகளில் முன்னெடுத்து வருகின்றது. உதாரணமாக கூறுவதாக இருந்தால் போர் நிறைவுக்கு வந்ததன் பின்னரும் இராணுவத்துக்கான ஆட்சேர்ப்புக்கள் நடைபெறுகின்றன. பாரியளவான நிதி ஒதுக்கீடுகள் வரவு செலவுத்திட்டத்தில் மேற்கொள்ளப்படுவதோடு தொடர்ச்சியாக அந்த ஒதுக்கீடு அதிகரிக்கப்படுகின்றது.

இவ்வாறான நிலைமைகளால் வடக்கு கிழக்கில் நிலைகொண்டுள்ள படைகள் தமிழர்களின் பகுதிகளை ஆக்கிரமிப்புச் செய்கின்ற செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றது. புலனாய்வாளர்களின் பிரசன்னங்கள் பாதுகாப்பு கெடுபிடிகள் உள்ளிட்டவையும் நீடிக்கின்ன.

அதேபோன்று வடக்கு கிழக்கு கடற்றொழிலாளர்கள் பிற பகுதிகளில் இருந்து படைகளின் உதவிகளுடன் இதேபோன்று பௌத்த தேரர்கள் தமது விரிவாக்கங்களைச் செய்து வருகின்றார்கள். ஆயிரக்கணக்கான இந்துக் கோவில்கள் அழிக்கப்பட்டுள்ளன.

இந்துக்களின் தொல்பொருள் பகுதிகள் சிங்கள பௌத்தர்களுக்குச் சொந்தமானவையாக அடையாளப்படுத்தப்பட்டு வருகின்றன. இந்தச் செயற்பாடுகளை பௌத்த தேரர்கள் முன்னெடுக்கின்றார்கள். அவர்கள் மிகவும் சக்தி வாய்ந்தவர்களாக காணப்படுகின்றார்கள். அவர்களை கட்டுப்படுத்தவதற்கு யாருக்கும் அதிகரங்கள் காணப்படவில்லை. அதேபோன்று ஆக்கிரமிப்புச் செயற்பாடுகளில் ரூடவ்டுபடுகின்ற தரப்புக்கள் இதுவரையில் தண்டனைக்கு உட்படுத்தப்படாத நிலைமைகளும் நீடிக்கின்றன.

மூன்றாவதான விடயம் தமிழர்களுக்கச் சொந்தமான நிலங்களை ஆக்கிரமிப்பதும் அபகரிப்பதாகும். 1978ஆம் ஆண்டு இலங்கையின் மிகப்பெரும் நதியான மகாவலி நீர் வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு கொண்டுவரப்பட்டு நீர்ப்பாசன நடவடிக்கைகளுக்கு பயன்படுத்துவதற்கு வாய்ப்பளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதனால் நாம் மகிழ்ச்சி அடைந்தாலும் மகாவலி அதிகாரசபை ஸ்தாபிக்கப்பட்ட செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டாலும் தற்போது வரையில் ஒருதுளி நீர் கூட வடக்கு மாகாணத்துக்க கொண்டுவரவில்லை. அவ்வாறு கொண்டுவருவதற்கு சாதமான நிலைமைகள் இல்லை என்று எமது பொறியியலாளர்கள் உறுதிப்படுத்தியும் உள்ளனர்.

இவ்வாறான நிலையில் மகாவலி திட்டத்தின் பெயரால் அடையாளப்படுத்தப்பட்ட பகுதிகளில் தென்னிலங்கையில் இருந்து சிங்கள மக்கள் வரவழைக்கப்பட்டு குடியேற்றப்பட்டு வருகின்றார்கள். இந்த நிலைமைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. அத்துடன் அரச திணைக்களங்களும் ஆக்கிரமிப்புச் செயற்பாடுகளுக்கும் ஆபகரிப்புச் நடவடிக்கைகளுக்கும் துணையாக உள்ளன.

இவ்விதமான பிரச்சினைகள் சமகாலத்தில் தீவிரமடைவதால் நாம் பல்வேறு நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்து வருகின்றோம். ஆகவே இந்த விடயங்கள் உடனடியாக நிறுத்தப்பட்டு தமிழ் மக்களின் பூர்வீகமான பகுதிகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதோடு அவர்களுக்கான நீதி நிலைநாட்டப்பட வேண்டியதும் அவசியமாகின்றது.

தமிழர்கள் தமது பூர்வீக நிலங்களில் பாதுகாக்கப்படுவதும் அவர்களுக்கான நீதி நிலைநாட்டப்படுவதும் உறுதி செய்யப்பட வேண்டுமாக இருந்தால் அதற்கான வகிபாகத்தை இந்தியாவாலேயே மேற்கொள்ள முடியும். இவ்விதமான நிலைமைகள் மூன்று தசாப்தத்துக்கு முன்னதாகவே காணப்பட்டமையை உணர்ந்த காரணத்தினால் தான் இந்தியா இலங்கையுடன் ஒப்பந்தத்தினை மேற்கொண்டது.

அந்த ஒப்பந்தம் தற்போது வரையில் நடைமுறைப்படுத்தப்படவில்லை. வடக்கு கிழக்கு தமிழர்கள் தற்போது பாதுகாப்பற்ற நிலைமையை உணர்ந்துள்ளார்கள். அவர்களின் விடயங்களில் கரிசனைகளைக் கொள்வதற்கு சரியானதொரு நிறுவனக் கட்டமைப்பு காணப்படவில்லை. ஆகவே இந்திய இலங்கை ஒப்பந்தம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.

அதேநேரம் 13ஆவது திருத்தச்சட்டம் வடக்கு கிழக்கு தமிழ் மக்களுக்கான நிரந்தரமான தீர்வாக அமையாது விட்டாலும் தமிழர்களின் கையில் சிறுஅதிகாரத்தை அளிக்கும் வகையிலான மாகாண சபைக் கட்டமைப்பை உருவாக்கியுள்ளது.

ஆனால் கடந்த ஐந்து வருடங்களாக மாகாண சபைகளுக்கான தேர்தல் நடத்தப்படவில்லை. அதனடிப்படையில் இந்தியா தமிழர்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகளும் சிக்கலான சூழல்களும் நன்றாகவே அறிந்துள்ளது. ஆகவே அதற்கான அர்த்தபூர்வமான தீர்வினை வழங்குவதற்கான சர்வஜன வாக்கெடுப்பை நடத்துவதில் இந்தியாவின் வகிபாகம் மிகவும் முக்கியமானது.

மேலும் தொடர்ச்சியாக மாகாண சபைகளுக்கான தேர்தல் நடத்தப்படாமையில் தமிழர்களுக்கான நிர்வாகக் கட்டமைப்பொன்று காணப்படாதுள்ள நிலையில் தற்காலிக ஏற்பாடாக இடைகால நிர்வாக சபையொன்றை ஸ்தாபிப்தற்கும் இந்தியாவின் வகிபாகம் முக்கியமானதாகின்றது.

அதுமட்டுமன்றி இந்தியா இலங்கையுடன் 1987ஆம் ஆண்டு மேற்கொண்ட ஒப்பந்தத்தினை முழுமையாக நடைமுறைப்படுத்துவன் ஊடாக இந்தியா தனது தென்பிராந்தியத்தின் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதோடு வடக்கு கிழக்கு தமிழர்களின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்திக்கொடுக்க முடியும் என்றார்.

இலங்கையின் பிரச்சினையை தமிழ்நாடு அரசுகள் புரிந்து கொள்ளத் தவறிவிட்டன – முத்தையா முரளிதரன்

இலங்கை உள்நாட்டுப் போரின் போது இந்தியா, குறிப்பாக தமிழ்நாட்டு அரசுகள் இனக் கலவரத்தைப் புரிந்து கொள்ளத் தவறிவிட்டன என்று புகழ்பெற்ற சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

கோவாவில் நடைபெற்ற இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் (IFFI) அவரது வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட ஸ்போர்ட்ஸ் பயோபிக் திரைப்படமான ‘A Legendary 800 – Against All Odds’ குறித்த மாஸ்டர் கிளாஸ் அமர்வின் போது அவர் இதை பேசினார்.

‘இலங்கையில் உள்ள பிரச்சனையை… இந்தியா ஒருபோதும் புரிந்து கொள்ளவில்லை. இது உண்மை. அதைச் சொல்ல எனக்குப் பயமில்லை… இந்தியா என்றால் மத்திய அரசை நான் சொல்லவில்லை,

தமிழக அரசுக்கு அங்குள்ள உண்மையான பிரச்சனை என்னவென்று புரியவில்லை. ஏனெனில் இலங்கையில் இது மிகவும் வித்தியாசமானது. இலங்கையில் தமிழ் சமூகத்தில், பல துணைக்குழுக்கள் உள்ளன. இது அனைத்தும் இணைக்கப்பட்டுள்ளது, ஆனால் அரசியல் ரீதியாக பிரிக்கப்பட்டுள்ளது.

எனது தாத்தா தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். 1920களில் தேயிலைத் தோட்டங்களுக்கு வேலைக்காக இலங்கை சென்றார். ஆங்கிலேயர்கள் எங்களை வலுக்கட்டாயமாக அங்கு அழைத்துச் சென்றனர். அதனால்தான் இலங்கையில் எங்கள் தலைமுறை உருவானது. நாங்கள் அனைவரும் மத்திய மலைநாட்டில் வளர்ந்தோம். நாங்கள் இந்திய வம்சாவளி தமிழர்கள் என்று அழைக்கப்படுகிறோம். அவர்கள் இலங்கைத் தமிழர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள்… அவர்கள் பேசும் விதம், ஸ்லாங் வேறு, ஆனால் மொழி ஒன்றுதான்.

எனவே சிலர் ஒரு பகுதியை பிரித்து ஒரு தனி நாட்டை உருவாக்க விரும்பினர். மத்திய பிராந்தியத்தில் நாங்கள் தனி நாடு விரும்பவில்லை. நாங்கள் அனைவருடனும் இணக்கமாக வாழ விரும்பினோம்.

இந்தியாவில் உள்ள ஒரு சில அரசியல்வாதிகள் தனது நாட்டில் உள்ள பிரச்சினையை புரிந்து கொள்ளவில்லை.

போர் மற்றும் என்ன நடந்தது என்பது பற்றி நான் எதுவும் கூறாததாலும், நான் அரசாங்கத்திற்கு ஆதரவாக பார்க்கப்பட்டதாலும்… 5-10 சதவீத அரசியல்வாதிகள் நான் இனத்திற்கு துரோகி என்று நினைக்கிறார்கள்’. இவ்வாறு முத்தையா முரளிதரன் பேசினார்.

இப்படத்தில் விஜய் சேதுபதி முதலில் நடிக்க ஒப்புக்கொண்டதை அடுத்து நடந்த போராட்டங்கள் குறித்து படத்தின் இயக்குனர் எம்.எஸ்.ஸ்ரீபதி பேசுகையில், சேதுபதியை நடிக்க வைப்பது பிரச்சனையாகிவிடும் என்று தாங்கள் எதிர்பார்க்கவில்லை, என்றார்.‘ஒரு விளையாட்டு வீரரைப் பற்றிய ஒரு ஊக்கமளிக்கும் திரைப்படத்தை நாங்கள் எடுக்கிறோம் என்று நினைத்தோம். ஆனால் மக்கள் சினிமாவை சினிமாவாக பார்க்கவில்லை. அதை ஒரு வகையான பிரச்சாரம் என்று நினைக்கிறார்கள்… மேலும் பல அரசியலும் படங்களுக்குள் சிக்கிக் கொள்கிறது. அரசியல் மற்றும் திரைப்படங்களைப் பற்றி பேசுவதில் தவறில்லை, ஆனால் உங்களால் முடிந்ததைச் செய்ய முடியாமல் இருப்பது உங்களை மூச்சுத் திணறச் செய்வது போன்றது.

எனவே, நாங்கள் ஒரு முடிவை எடுக்க வேண்டியிருந்தது. விஜய் சேதுபதி ஒருபோதும் விலக விரும்பவில்லை, ஆனால் பிறகு அவர்தான் ஏன் இவ்வளவு வம்புகளை உருவாக்க வேண்டும் என்றார்? அதனால் வேறு நடிகரைத் தேடினோம்’, என்று ஸ்ரீபதி கூறினார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியின் போது நடுவரால் சக்கிங் என்று புகார் அளிக்கப்பட்ட சம்பவத்தை நினைவு கூர்ந்த முரளிதரன்,

1995 இல், நான் சிக்கலில் இருந்தபோது – நான் சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவன், இலங்கைக்காக விளையாடினேன், அப்போது தமிழ்ப் போர் உச்சத்தில் இருந்தது. மதம் அல்லது எதையும் பார்க்காமல் இந்தியாவைப் போலவே இலங்கையும் எனக்கு ஆதரவளித்தது.2009 ஆம் ஆண்டு பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தின் போது லாகூரில் இலங்கை கிரிக்கெட் அணி பயணித்த பேருந்து மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலையும் முரளிதரன் நினைவு கூர்ந்தார்.

’அது பயங்கரமாக இருந்தது. நாங்கள் வாத்துகளைப் போல உட்கார்ந்து இருந்தோம். எங்கள் பேருந்தில் இருந்த பாதுகாப்புப் பணியாளர்களிடம் ஆயுதங்கள் எதுவும் இல்லை’… என்றார்.

இந்திய உயர்ஸ்தானிகர் பாக்லே வடக்கிற்கு மூன்று நாள் விஜயம்

இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே புதன்கிழமை மூன்று நாள் விஜயமாக வடக்கு மகாணத்திற்குச் செல்லவுள்ளார்.

இந்த விஜயத்தின் முதன் நாளான நாளையதினம் மதவாச்சியில் பாடசாலைகளுக்கான உதவித்திட்டங்களை கையளிக்கவுள்ளதோடு, அதனையடுத்து மன்னார் பியர் பகுதிக்கும், பின்னர் திருக்கேதீச்வரர் ஆலயத்துக்கும் செல்லவுள்ளார்.

தொடர்ந்து முதன்நாளின் இறுதி நிகழ்வாக இரவு நேர விருந்துபசாரத்துடன் வடக்கு மாகாண அரசியல்தரப்பினரைச் சந்தித்து உரையாடவுள்ளார்.

இரண்டாவது மற்றும் மூன்றாம் நாளான 30ஆம் மற்றும் முதலாம் திகதிகளில் நயினாதீவுக்குக்கான விஜயமொன்றை அவர் மேற்கொள்ளவுள்ளதோடு நயினை நாகபூசனி அம்மன் ஆலயத்துக்கும், நாகவகாரைக்கும் விஜயம் செய்து வழிபாடுகளில் ஈடுபடவுள்ளார்.

தொடர்ந்து , யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் நூறு பேருக்கான புலமைப்பரிசில்களை கையளிக்கும் நிகழ்வுகளில் பங்கேற்கவுள்ளதோடு, தெரிவு செய்யப்பட்ட கடற்றொழிலாளர்களுக்கு உதவிப்பொருட்களையும் கையளிக்கவுள்ளார்.

இதனைவிடவும், மதத்தலைவர்கள் மற்றும் சிவில் சமூகப் பிரதிநிதிகளையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, டிசம்பர் மாதத்துடன் உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே இலங்கைக்கான கடமைகளை பூர்த்தி செய்யவுள்ளதோடு அதனையடுத்து அவர் அவுஸ்ரேலியாவுக்கான உயர்ஸ்தானிகராக நியமனம் பெற்றுள்ளார்.இந்நிலையில், உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேயின் வடக்கிற்கான இந்த விஜயமானது பரியாவிடையளிப்பதாகவும், தனது காலத்தில் கிடைக்கப்பெற்ற ஒத்துழைப்புக்களுக்கு நன்றிகளை செலுத்தும் முகமாகவும் இடம்பெறவுள்ளது.

முன்னதாக, இந்திய வெளிவிவகார அமைச்சானது, பெல்ஜியத்தில் தூதுவராக கடமையாற்றி வரும் சந்தோஷ் ஜாவை இலங்கைக்கான தனது நாட்டின் புதிய உயர்ஸ்தானிகராக பெயரிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

யாழ். விமான நிலையத்தினூடாக நாடு திரும்பினார் இந்திய நிதியமைச்சர்

மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வந்த இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தை முடித்துக்கொண்டு இன்று வெள்ளிக்கிழமை (03) யாழ் விமான நிலையத்தின் ஊடாக இந்தியாவிற்குப் பயணமானார்.

 

யாழ்ப்பாணத்தில் நடைபெறும் புதிய தொழில்நுட்பம் மற்றும் தயாரிப்பு வர்த்தக கண்காட்சியை இந்திய நிதியமைச்சர் பார்வையிட்டார்.

வடமாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம். சார்ள்ஸும் இந் நிகழ்வில் கலந்துகொண்டு நிதியமைச்சரை சந்தித்தார்.

 

அதன் பின்னர் யாழ். நூலகம் மற்றும் நல்லூர் ஆலயத்திற்கு விஜயம் செய்த இந்திய நிதியமைச்சர் பின்னர் இந்திய ஸ்டேட் வங்கியின் (SBI) யாழ்ப்பாண கிளையின் திறப்பு விழாவில் கலந்து கொண்டார்.

பின்னர் யாழ்ப்பாணம் கலாசார மண்டபத்தில் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றிய வடமாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம். சார்ள்ஸ்,

‘அன்றிலிருந்து இன்றுவரை இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் நெருங்கிய உறவு இருந்ததையும், நாட்டின் தேவைக்காக அவர்கள் ஒருவரையொருவர் பல்வேறு வழிகளில் ஆதரித்ததையும் மரியாதையுடன் நினைவுகூர வேண்டும்’ என்று கூறினார்.

மேலும் ‘வடக்கிலும் இந்த நாட்டிலும் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக வீடமைப்புத் திட்டங்கள் உள்ளிட்ட அபிவிருத்தித் திட்டங்களுக்கு இந்திய அரசாங்கம் வழங்கிய பங்களிப்புக்காகவும் குறிப்பாக இந்த மாகாணத்தின் அபிவிருத்திக்காகவும் நன்றி தெரிவிக்க வேண்டும்’ என்றார்.

 

அத்துடன், எமது நாட்டுக்கு சர்வதேச நிதி உதவிகளை பெற்றுக் கொடுப்பதற்கு இந்திய அரசாங்கம் பூரண ஆதரவை வழங்கியதை நினைவுகூர்ந்த ஆளுநர், இந்திய நிதியமைச்சரின் வருகை இந்த நாட்டிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான நெருக்கத்தை மேலும் வளர்க்க உதவும் எனவும் தெரிவித்தார்.

இந்த நிகழ்வுகளில் இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய உள்ளிட்ட குழுவினரும் கலந்துகொண்டனர்.

நல்லூர்க் கந்தனை தரிசித்தார் நிர்மலா சீதாராமன்

மூன்று நாட்கள் விஐயம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தந்துள்ள இந்தியாவின் நிதி அமைச்சர் ‘நிர்மலா சீதாராமன்‘ இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.

இதன்போது இந்திய தூதுவர் கோபால் பாக்லே, இலங்கை வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய, யாழ்ப்பாணத்திற்கான இந்திய துணைத் தூதுவர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன், யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் அ.சிவபாலசுந்தரன், யாழ் மாநகர சபை ஆணையாளர் இ.த.ஜெயசீலன் உள்ளிட்ட பலரும் உடன் சென்றிருந்தனர்.

இந்நிலையில் நல்லூர் கந்தசுவாமி கோயிலுக்கு வருகைதந்த அவர், அங்கு இடம்பெற்ற விசேட பூஜை வழிபாடுகளில்  கலந்து கொண்டிருந்ததோடு,அங்கு கூடியிருந்த சிறுவர் சிறுமியர்களுடன் கலந்துரையாடி புகைப்படங்கள் எடுத்துக் கொண்டார்.