ஜூலை மாதம் மின்சார கட்டணம் குறைந்தபட்சம் 23 சதவீதத்தால் குறைக்கப்படும் – கஞ்சன விஜேசேகர

எரிபொருள்,நிலக்கரி ஆகியவற்றின் விலை குறைப்பின் நிவாரணத்தை மின் பாவனையாளர்களுக்கு நிச்சயம் வழங்குவோம்.

எதிர்வரும் ஜூலை மாதம் மின்சார கட்டணம் குறைந்தபட்சம் 23 சதவீதத்தால் குறைக்கப்படும். சுயாதீன ஆணைக்குழுவின் தலைவரை பதவி நீக்கவில்லை. ஆணைக்குழுவின் சுயாதீனத்தன்மையை அரசியல் நோக்கத்துக்காக பயன்படுத்திய ஜனக ரத்நாயக்க என்ற நபரை பதவி நீக்க தீர்மானித்தோம் என மின்சாரத்துறை மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (24) இடம்பெற்ற பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்கவை பதவி நீக்கும் பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்கவின் தகைமை தொடர்பில் கோப் குழுவில் கேள்வி எழுப்பிய பேராசிரியர் சரித ஹேரத் தற்போது அவருக்கு சார்பாக கருத்துரைப்பது வேடிக்கையாக உள்ளது. ஐந்து பிரதான குற்றச்சாட்டுக்களை முன்னிலைப்படுத்தி ஜனக ரத்நாயக்கவை பதவி நீக்க தீர்மானித்தோம்.

சுயாதீன ஆணைக்குழுவின் தலைவரை பதவி நீக்கும் நோக்கம் எமக்கு கிடையாது. குறுகிய அரசியல் நோக்கத்துக்காக செயற்பட்டு மின்சார கட்டமைப்பை நெருக்கடிக்குள்ளாக்கிய தலைவரையே பதவி நீக்க தீர்மானித்தோம்.

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்கவுக்கு  எதிராக கடந்த பெப்ரவரி மாதம்  10 ஆம் திகதி மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை அடிப்படையாக கொண்டு முதலிரு குற்றச்சாட்டுக்களை உள்ளடக்கினோம்.

‘பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் தனிப்பட்ட நிலைப்பாட்டை முன்னிலைப்படுத்தி பொதுமக்களின் நல திட்டங்களுக்கு முரணாக செயற்படுகிறார்’என  மேன்முறையீட்டு நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

ஜனக ரத்நாயக்கவை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவராக நியமிக்கும் போது கடந்த அரசியலமைப்பு சபையில் ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் கபீர் ஹசீம் இரண்டு முறை எதிர்ப்பு தெரிவித்தார். இருப்பினும் அவரது எதிர்ப்பை தொடர்ந்து இவர் தலைவராக நியமிக்கப்பட்டார்.

மின்சார சபையுடன் கொடுக்கல் வாங்களில் ஈடுபடும் நபர் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் அல்லது உறுப்பினராக தெரிவு செய்யப்பட கூடாது என பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு சட்டத்தில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜனக ரத்நாயக்க மின்சார விநியோக கட்டமைப்புடனான தொழிற்துறையில் தொடர்பு கொண்டுள்ளார்.இது தொடர்பான தகவல்களை அவர் அரசியலமைப்பு சபைக்கு சமர்ப்பிக்கவில்லை.ஆகவே ஜனக ரத்நாயக்க அரசியலமைப்பு சபையை தவறாக  வழி நடத்தியுள்ளார்.

நடைமுறைக்கு சாத்தியமான வகையில் மின்கட்டணத்தை திருத்தம் செய்யும் யோசனையை முன்வைக்கும் அதிகாரம் மின்சார சபைக்கு உண்டு,முறையாக வழிமுறைகளுக்கு அமைய மின்கட்டண அதிகரிப்புக்கு பொதுப் பயன்பாட்டுகள் ஆணைக்குழு அனுமதி வழங்க வேண்டும்.

கடந்த  டிசெம்பர் மாதம் முதல் மின்கட்டணத்தை அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்ததற்கு ஜனக ரத்நாயக்க அனுமதி வழங்கவில்லை.ஆணைக்குழுவின் ஏனைய உறுப்பினர்கள்  மின்கட்டண அதிகரிப்புக்கு இணக்கம் தெரிவித்த போது இவர் மாத்திரம் தனிப்பட்ட காரணிகளுக்காக மின்கட்டண  அதிகரிப்புக்கு இணக்கம் தெரிவிக்கவில்லை.

யாரை மின்சாரத்துறை அமைச்சராக நியமிக்க வேண்டும் என்று குறிப்பிடும் அதிகாரம் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கு கிடையாது.அரசாங்கத்தின் பரிந்துரைகளுக்கு அமையவே பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு செயற்பட வேண்டும்.

2014 ஆம் ஆண்டு முதல் நடைமுறைக்கு சாத்தியமான வகையில் மின்கட்டணத்தை திருத்தம் செய்யும் யோசனைகளை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு முன்வைக்கவில்லை.இதனால் மின்சார சபையும் திறைசேரியும் பாதிக்கப்பட்டது.

மின்கட்டமைப்பு துறையில் பாரிய கேள்வி காணப்பட்ட காரணத்தால் ஒரே கட்டமாக மின்கட்டணம் அதிகரிக்கப்பட்டதால் ஒட்டுமொத்த மின்பாவனையாளர்களும் பாதிக்கப்பட்டார்கள். இந்த குற்றச்சாட்டுக்களை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவருக்கு எதிராக முன்வைத்துள்ளோம்.

சர்வதேச நாணய நிதியத்தின் பரிந்துரைக்கு அமைய மின்சார கட்டணத்தை அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்த பின்னணியில் ஜனக ரத்நாயக்க அதற்கு இடமளிக்கவில்லை.

கடந்த டிசெம்பர் மாதம் மின்கட்டணம் அதிகரிக்கப்படாத காரணத்தால் ஜனவரி,பெப்ரவரி ஆகிய இரு மாதங்களில் மாத்திரம் மின்சார சபை 32 பில்லியன் ரூபா நட்டத்தை எதிர்கொண்டது.ஜனக ரத்நாயக்கவின் தனிப்பட்ட செயற்பாடுகளினால் இந்த இழப்பு ஏற்பட்டது.இந்த தொகையை மீள பெற்றுக்கொள்ள எதிர்வரும் காலங்களில் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

எரிபொருள்,நிலக்கரி ஆகியவற்றின் விலை குறைப்பின் பயனை மக்களுக்கு வழங்குவோம் என்று குறிப்பிட்டுள்ளோம்.மின்கட்டணத்தை 3 சதவீதத்தால் குறைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக ஜனக ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளமை முற்றிலும் பொய்யானது.

0-30 வரையான மின்னலகுக்கான கட்டணத்தை எதிர்வரும் ஜூலை லை மாதம் குறைந்தபட்சம் 23 சதவீதத்தாலும்,31-60 வரையான மின்னலகுக்கான கட்டணத்தை 09 சதவீதத்தாலும் குறைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. மின்பாவனையாளர்களுக்கு நிச்சயம் நிவாரணம் வழங்குவோம்.

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு பொறுப்பற்ற வகையில் செயற்பட கூடாது.ஆகவே ஆணைக்குழு ஒரு தரப்புக்கு பொறுப்புக் கூற வேண்டும் என்ற வகையில் புதிய சட்ட திருத்தங்களை கொண்டு வரவுள்ளோம். ஆகவே சுயாதீன ஆணைக்குழுவின் தலைவரை பதவி நீக்கவில்லை.குறுகிய அரசியல் நோக்கத்துடன் செயற்பட்ட ஜனக ரத்நாயக்க என்பதை பதவி நீக்க தீர்மானித்தோம் என்றார்.

பால்மா விலையை மேலும் குறைக்க நடவடிக்கை

எதிர்காலத்தில் பால்மாவின் விலைகளை மேலும் குறைப்பதற்கு நாட்டிலுள்ள பிரதான பால் மா இறக்குமதி நிறுவனங்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாக வர்த்தக அமைச்சர் நளீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

அந்த நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் நேற்றைய தினம் இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்த இணக்கத்தை வெளிப்படுத்தியதாக முகநூலிலில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதுதொடர்பான அறிக்கை விரைவில் வர்த்தக அமைச்சுக்கு அனுப்பப்பட உள்ளதாக வர்த்தக அமைச்சர் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

லங்கா சதொசவில் 10 அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைப்பு

லங்கா சதொசவில் 10 வகையான அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன.

இன்று முதல் அமுலாகும் வகையில்,  பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாக லங்கா சதொச வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய,
செத்தல் மிளகாய் ஒரு கிலோவின் விலை 120 ரூபாவினால் குறைக்கப்பட்டு 1380 ரூபாவிற்கும்
வௌ்ளைப்பூண்டு ஒரு கிலோவின் விலை 25 ரூபாவினால் குறைக்கப்பட்டு 450 ரூபாவிற்கும்
நெத்தலி ஒரு கிலோவின் விலை 25 ரூபாவினால் குறைக்கப்பட்டு 1100 ரூபாவிற்கும்
விற்கப்படுகின்றன.

இதேவேளை,
கடலை ஒரு கிலோவின் புதிய விலை 555 ரூபாவாகவும்
உள்நாட்டு சம்பாவின் புதிய விலை 199 ரூபாவாகவும்
425 கிராம் டின் மீனின் புதிய விலை 520 ரூபாவாகவும்
பெரிய வெங்காயம் ஒரு கிலோவின் புதிய விலை 119 ரூபாவாகவும்
உள்நாட்டு உருளைக்கிழங்கு ஒரு கிலோவின் புதிய விலை 270 ரூபாவாகவும்
வௌ்ளை சீனி ஒரு கிலோவின் புதிய விலை 210 ரூபாவாகவும்
கடலைப் பருப்பு ஒரு கிலோவின் புதிய விலை 298 ரூபாவாகவும்

அறிவிக்கப்பட்டுள்ளது.

Posted in Uncategorized

அத்தியாவசிய உணவுப் பொருட்கள் சிலவற்றின் விலைகள் குறைப்பு

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி வலுவடைந்ததன் காரணமாக, இறக்குமதி செய்யப்படும் உணவுப் பொருட்களின் மொத்த விலை சுமார் 10% வரை வீழ்ச்சியடைந்துள்ளது.

இதன்படி, சீனி, பருப்பு மற்றும் வெங்காயத்தின் மொத்த விலை கிலோகிராம் ஒன்றுக்கு 30 ரூபாயினால் குறைந்துள்ளதாக வர்த்தகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

ஒரு கிலோ கோதுமை மாவின் விலை இன்று (புதன்கிழமை) முதல் குறைக்கப்படும் என செரண்டிப் மற்றும் பிறிமா நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

அதன்படி ஒரு கிலோ கோதுமை மாவின் விலை 15 ரூபாயால் குறிக்கப்படும் என இரு நிறுவனங்களும் அறிவித்துள்ளன.

ஒரு இறாத்தல் பாணின் விலை 10 ரூபாயால் குறைக்கப்படும் என பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அத்தியவசிய பொருட்களின் விலை குறைப்பு

லங்கா சதொசவில் 5 அத்தியவசிய பொருட்களின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் இவ்வாறு பொருட்களின் விலை குறைக்கப்பட்டுள்ளது.

200 ரூபாயினால் குறைக்கப்பட்ட நெத்தலியின் புதிய விலை 1300 ரூபாய்,

96 ரூபாயினால் குறைக்கப்பட்ட கோதுமை மாவின் புதிய விலை 279 ரூபாய்,

22 ரூபாயினால் குறைக்கப்பட்ட வெள்ளை சீனியின் புதிய விலை 238 ரூபாய்,

105 ரூபாயினால் குறைக்கப்பட்ட டின் மீனின் புதிய விலை 585 ரூபாய்,

17 ரூபாயினால் குறைக்கப்பட்ட சிவப்பு பருப்பின் புதிய விலை 398 ரூபாய்

என தெரிவிக்கப்பட்டுள்ளது.