ஜூலை மாதம் மின்சார கட்டணம் குறைந்தபட்சம் 23 சதவீதத்தால் குறைக்கப்படும் – கஞ்சன விஜேசேகர

எரிபொருள்,நிலக்கரி ஆகியவற்றின் விலை குறைப்பின் நிவாரணத்தை மின் பாவனையாளர்களுக்கு நிச்சயம் வழங்குவோம்.

எதிர்வரும் ஜூலை மாதம் மின்சார கட்டணம் குறைந்தபட்சம் 23 சதவீதத்தால் குறைக்கப்படும். சுயாதீன ஆணைக்குழுவின் தலைவரை பதவி நீக்கவில்லை. ஆணைக்குழுவின் சுயாதீனத்தன்மையை அரசியல் நோக்கத்துக்காக பயன்படுத்திய ஜனக ரத்நாயக்க என்ற நபரை பதவி நீக்க தீர்மானித்தோம் என மின்சாரத்துறை மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (24) இடம்பெற்ற பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்கவை பதவி நீக்கும் பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்கவின் தகைமை தொடர்பில் கோப் குழுவில் கேள்வி எழுப்பிய பேராசிரியர் சரித ஹேரத் தற்போது அவருக்கு சார்பாக கருத்துரைப்பது வேடிக்கையாக உள்ளது. ஐந்து பிரதான குற்றச்சாட்டுக்களை முன்னிலைப்படுத்தி ஜனக ரத்நாயக்கவை பதவி நீக்க தீர்மானித்தோம்.

சுயாதீன ஆணைக்குழுவின் தலைவரை பதவி நீக்கும் நோக்கம் எமக்கு கிடையாது. குறுகிய அரசியல் நோக்கத்துக்காக செயற்பட்டு மின்சார கட்டமைப்பை நெருக்கடிக்குள்ளாக்கிய தலைவரையே பதவி நீக்க தீர்மானித்தோம்.

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்கவுக்கு  எதிராக கடந்த பெப்ரவரி மாதம்  10 ஆம் திகதி மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை அடிப்படையாக கொண்டு முதலிரு குற்றச்சாட்டுக்களை உள்ளடக்கினோம்.

‘பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் தனிப்பட்ட நிலைப்பாட்டை முன்னிலைப்படுத்தி பொதுமக்களின் நல திட்டங்களுக்கு முரணாக செயற்படுகிறார்’என  மேன்முறையீட்டு நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

ஜனக ரத்நாயக்கவை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவராக நியமிக்கும் போது கடந்த அரசியலமைப்பு சபையில் ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் கபீர் ஹசீம் இரண்டு முறை எதிர்ப்பு தெரிவித்தார். இருப்பினும் அவரது எதிர்ப்பை தொடர்ந்து இவர் தலைவராக நியமிக்கப்பட்டார்.

மின்சார சபையுடன் கொடுக்கல் வாங்களில் ஈடுபடும் நபர் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் அல்லது உறுப்பினராக தெரிவு செய்யப்பட கூடாது என பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு சட்டத்தில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜனக ரத்நாயக்க மின்சார விநியோக கட்டமைப்புடனான தொழிற்துறையில் தொடர்பு கொண்டுள்ளார்.இது தொடர்பான தகவல்களை அவர் அரசியலமைப்பு சபைக்கு சமர்ப்பிக்கவில்லை.ஆகவே ஜனக ரத்நாயக்க அரசியலமைப்பு சபையை தவறாக  வழி நடத்தியுள்ளார்.

நடைமுறைக்கு சாத்தியமான வகையில் மின்கட்டணத்தை திருத்தம் செய்யும் யோசனையை முன்வைக்கும் அதிகாரம் மின்சார சபைக்கு உண்டு,முறையாக வழிமுறைகளுக்கு அமைய மின்கட்டண அதிகரிப்புக்கு பொதுப் பயன்பாட்டுகள் ஆணைக்குழு அனுமதி வழங்க வேண்டும்.

கடந்த  டிசெம்பர் மாதம் முதல் மின்கட்டணத்தை அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்ததற்கு ஜனக ரத்நாயக்க அனுமதி வழங்கவில்லை.ஆணைக்குழுவின் ஏனைய உறுப்பினர்கள்  மின்கட்டண அதிகரிப்புக்கு இணக்கம் தெரிவித்த போது இவர் மாத்திரம் தனிப்பட்ட காரணிகளுக்காக மின்கட்டண  அதிகரிப்புக்கு இணக்கம் தெரிவிக்கவில்லை.

யாரை மின்சாரத்துறை அமைச்சராக நியமிக்க வேண்டும் என்று குறிப்பிடும் அதிகாரம் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கு கிடையாது.அரசாங்கத்தின் பரிந்துரைகளுக்கு அமையவே பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு செயற்பட வேண்டும்.

2014 ஆம் ஆண்டு முதல் நடைமுறைக்கு சாத்தியமான வகையில் மின்கட்டணத்தை திருத்தம் செய்யும் யோசனைகளை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு முன்வைக்கவில்லை.இதனால் மின்சார சபையும் திறைசேரியும் பாதிக்கப்பட்டது.

மின்கட்டமைப்பு துறையில் பாரிய கேள்வி காணப்பட்ட காரணத்தால் ஒரே கட்டமாக மின்கட்டணம் அதிகரிக்கப்பட்டதால் ஒட்டுமொத்த மின்பாவனையாளர்களும் பாதிக்கப்பட்டார்கள். இந்த குற்றச்சாட்டுக்களை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவருக்கு எதிராக முன்வைத்துள்ளோம்.

சர்வதேச நாணய நிதியத்தின் பரிந்துரைக்கு அமைய மின்சார கட்டணத்தை அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்த பின்னணியில் ஜனக ரத்நாயக்க அதற்கு இடமளிக்கவில்லை.

கடந்த டிசெம்பர் மாதம் மின்கட்டணம் அதிகரிக்கப்படாத காரணத்தால் ஜனவரி,பெப்ரவரி ஆகிய இரு மாதங்களில் மாத்திரம் மின்சார சபை 32 பில்லியன் ரூபா நட்டத்தை எதிர்கொண்டது.ஜனக ரத்நாயக்கவின் தனிப்பட்ட செயற்பாடுகளினால் இந்த இழப்பு ஏற்பட்டது.இந்த தொகையை மீள பெற்றுக்கொள்ள எதிர்வரும் காலங்களில் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

எரிபொருள்,நிலக்கரி ஆகியவற்றின் விலை குறைப்பின் பயனை மக்களுக்கு வழங்குவோம் என்று குறிப்பிட்டுள்ளோம்.மின்கட்டணத்தை 3 சதவீதத்தால் குறைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக ஜனக ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளமை முற்றிலும் பொய்யானது.

0-30 வரையான மின்னலகுக்கான கட்டணத்தை எதிர்வரும் ஜூலை லை மாதம் குறைந்தபட்சம் 23 சதவீதத்தாலும்,31-60 வரையான மின்னலகுக்கான கட்டணத்தை 09 சதவீதத்தாலும் குறைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. மின்பாவனையாளர்களுக்கு நிச்சயம் நிவாரணம் வழங்குவோம்.

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு பொறுப்பற்ற வகையில் செயற்பட கூடாது.ஆகவே ஆணைக்குழு ஒரு தரப்புக்கு பொறுப்புக் கூற வேண்டும் என்ற வகையில் புதிய சட்ட திருத்தங்களை கொண்டு வரவுள்ளோம். ஆகவே சுயாதீன ஆணைக்குழுவின் தலைவரை பதவி நீக்கவில்லை.குறுகிய அரசியல் நோக்கத்துடன் செயற்பட்ட ஜனக ரத்நாயக்க என்பதை பதவி நீக்க தீர்மானித்தோம் என்றார்.