X-PRESS PEARL கப்பலில் பாரிய எண்ணெய் கசிவு ஏற்பட்டுள்ளமையை செய்மதி படங்களில் காணக்கூடியதாக உள்ளதென பிரித்தானியாவின் Sky News செய்தி சேவை தெரிவித்துள்ளது.
எனினும் கப்பலில் எண்ணெய் கசிவு ஏற்படவில்லை என இலங்கை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
X-PRESS PEARL கப்பலில் தீ பற்றிய நாள் முதல் எண்ணெய் கசிவு அல்லது கழிவுகள் கலப்பதால் இலங்கை கடலுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து நியூஸ்ஃபெஸ்ட் தொடர்ந்தும் கேள்வி எழுப்பி வருகின்றது.
இந்த கேள்விக்கு சமுத்திர பாதுகாப்பு அதிகார சபை உள்ளிட்ட அதிகாரிகளிடமிருந்து உரிய பதில் கிடைக்கவில்லை.
பிரித்தானியாவின் Sky News செய்திச் சேவை Planet Labs எனும் செய்மதி நிழற்பட சேவையிலிருந்து அண்மையில் பெற்றுக்கொண்ட சில நிழற்படங்களை பிரசுரித்து கப்பலில் பாரியளவில் எண்ணெய் கசிந்துள்ளதாக இன்று செய்தி வெளியிட்டது.
வௌ்ளி நிறத்தில் செய்மதி நிழற்படத்தில் காணப்படுகின்ற இந்த படலம் 100 மீட்டருக்கு மேல் பரவியுள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது இலங்கையின் சமுத்திர சுற்றுச்சூழலுக்கு ஏற்பட்ட மிகப்பெரிய அழிவு என Sky News தெரிவித்துள்ளது.
இந்நிலையில், எண்ணெய் கசிவு ஏற்படவில்லை. நிறம் மாறிய நீர் மற்றும் நீரில் ஏற்பட்டுள்ள சிறு மாற்றங்களே செய்மதி மூலம் அடையாளம் காணப்படுகின்றது. இலங்கை விமானப் படை பதிவு செய்துள்ள நிழற்படங்களை நோக்குமிடத்து, கப்பலை சூழ நீரின் நிறம் மாறியுள்ளதை அவதானிக்க முடிகிறது. கொள்கலன் கழுவிச் செல்லப்படுவதாலேயே நீரின் நிறம் மாறியுள்ளது என மேற்கு அவுஸ்திரேலிய பல்கலைக்கழகத்தின் சமுத்திரவியல் விஞ்ஞானி பேராசிரியர் சரித்த பட்டியாரச்சி தெரிவித்தார்.
இந்நிலையில், கப்பல் மூழ்குவதற்கு காரணமான விடயங்கள் தொடர்பிலும் கவனம் திரும்பியுள்ளது.
சிங்கப்பூரில் தயாரிக்கப்பட்ட X-PRESS PEARL கொள்கலன் போக்குவரத்து கப்பலை 2021 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதத்தில் சிங்கப்பூரின் X-Press Feeders நிறுவனம் சேவையில் இணைத்தது.
சிங்கப்பூர் கொடியுடன் கப்பல் சிங்கபூர், கொழும்பு, இந்தியா, கட்டார் மற்றும் துபாய் ஆகிய துறைமுகங்களுக்கு இடையே கொள்கலன் போக்குவரத்திற்காக பயன்படுத்தப்பட்டிருந்தது.
கப்பலில் நைட்ரிக் அமிலக் கசிவு ஏற்பட்டுள்ளதை கப்பல் பணியாளர்கள் மே மாதம் 11 ஆம் திகதி முதற்தடவையாக அறிந்தனர்.
அந்த சந்தர்ப்பத்தில் கப்பல் துபாயின் ஜபெல் அலியில் இருந்து கட்டாரின் ஹமாத் துறைமுகம் நோக்கி பயணித்துக் கொண்டிருந்தது.
கசிவு ஏற்பட்ட கொள்கலனை இறக்கி மீள ஏற்றுவது தொடர்பில் கப்பல் பணியாளர்கள் ஹமாத் துறைமுகத்திடம் கோரிக்கை முன்வைத்தாலும் நோன்புப் பெருநாள் காரணமாக துறைமுகத்தில் மட்டுப்படுத்தப்பட்டளவு ஊழியர்கள் கடமையாற்றியதால் அந்த கோரிக்கையை நிறைவேற்ற முடியாது என துறைமுக அதிகாரிகள் கப்பலுக்கு அறிவித்துள்ளனர்.
இந்தியாவின் ஹசீரா துறைமுகத்தில் அந்த கொள்கலனை இறக்குமாறு ஹமாட் துறைமுக பிரதிநிதிகள் கப்பலுக்கு அறிவித்திருந்ததாகவும் தெரியவருகிறது.
அந்த கப்பல் மே மாதம் 15 ஆம் திகதி ஹசீரா துறைமுகத்தை நெருங்கியது. இதன்போது அமிலக் கசிவு ஏற்பட்டுள்ள கொள்கலனை இறக்குவதற்கான அனுமதி கோரப்பட்டுள்ளது. நிழற்படங்களுடன் கூடிய விரிவான அறிக்கையுடன் ஹசீரா துறைமுக பிரதிநிதி அமிலக் கசிவு தொடர்பான தகவல்களை பெற்றுக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தகவல்களை ஆராய்ந்ததன் பின்னர் கொள்கலன் ஹசீரா துறைமுகத்தில் இறக்கப்பட்டால் துறைமுகத்திற்கு பாதிப்பு ஏற்படலாம் என துறைமுக பிரதிநிதி கப்பலுக்கும் கப்பல் நிறுவனத்திற்கும் அறிவித்ததாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கமைய, மே மாதம் 15 ஆம் திகதி கப்பல் ஹசீரா துறைமுகத்தில் இருந்து புறப்பட்டுள்ளதுடன், கொள்கலனில் இருந்து கசியும் இரசாயனத்தின் அளவு தொடர்பாக அவ்வப்போது கெப்டன் கப்பல் நிறுவனத்தை தெளிவுபடுத்தியுள்ளார்.
மே மாதம் 15 ஆம் திகதி ஹசீரா துறைமுகத்தில் இருந்து புறப்பட்டதன் பின்னர் கெப்டன் அனுப்பிய அறிவிப்பில், மணித்தியாலத்திற்கு 500 மில்லி லிட்டருக்கும் ஒரு லிட்டருக்கும் இடையிலான நைட்ரிக் அமிலம் கொள்கலனில் இருந்து கசிவதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதனிடையே, இந்து சமுத்திர பிராந்தியத்தில் ஏற்பட்ட சூறாவளி காரணமாக, பாதையை விட்டு விலகி கப்பல் ஆபிரிக்காவின் திசைக்கு செலுத்தப்பட்டு பின்னர் கொழும்பு துறைமுகத்தை நோக்கி செலுத்தப்பட்டுள்ளது.
இதன்போது, கெப்டன் துறைமுக நிறுவனத்திற்கு வழங்கிய அறிவிப்பில் மணித்தியாலத்திற்கு 0.5 லிட்டர் அமிலம் கசிவதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.
கப்பல் இலங்கையை அண்மித்த சந்தர்ப்பத்தில் கப்பலின் தாய் நிறுவன பிரதிநிதி இலங்கையிலுள்ள பிரதிநிதிக்கு கசிவு ஏற்பட்டுள்ள கொள்கலன் தொடர்பாக மின்னஞ்சல் ஒன்றை அனுப்பியுள்ளார்.
மே மாதம் 19 ஆம் திகதி காலை 10.37-க்கு கப்பலின் கெப்டன் இலங்கையிலுள்ள பிரதிநிதிக்கு பிரதியிட்டு தாய் நிறுவனத்திற்கு அனுப்பிய மின்னஞ்சலில், பிரச்சினைக்குரிய கொள்கலனை கொழும்பு துறைமுகத்தில் அப்புறப்படுத்த வேண்டும் என அறிவித்திருந்தமை தெரியவந்துள்ளது.
அதே நாள் மாலை 4.45-க்கு கப்பலின் கெப்டன், அமிலக் கசிவு ஏற்பட்டுள்ள கொள்கலன் தொடர்பிலான பிரச்சினை குறித்து பரிமாறிய மின்னஞ்சல் தகவல்கள் அடங்கிய வலையமைப்பில் உள்நாட்டு முகவரையும் இணைத்துள்ளமை தெரியவந்துள்ளது.
ஹார்பர் மாஸ்டர் அலுவலகம் மூடப்பட்டுள்ளதால், மறுநாள் காலை வேளையில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை தொடர்பில் அறிவிப்பதாக 19 ஆம் திகதி மாலை 4.57-க்கு கப்பலின் உள்நாட்டு பிரதிநிதி அதற்கு பதிலளித்துள்ளார்.
அன்றைய தினம் நள்ளிரவு வேளையில் கப்பல் கொழும்பு வெளிப்புற துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டதை அடுத்து சில மணித்தியாலங்களில், அதாவது 20 ஆம் திகதி அதிகாலை 2 மணியளவில் கப்பலிருந்து புகை வெளியேறுவதாக கெப்டன் துறைமுகத்திற்கு ரேடியோ செய்தியை அனுப்பியுள்ளார்.
எவ்வாறாயினும், இலங்கை அதிகாரிகள் கூறும் வகையில் கப்பலின் பிரச்சினை தொடர்பபாக கொழும்பு துறைமுக ஹார்பர் மாஸ்டர், 20 ஆம் திகதி முற்பகல் 10.19-க்கே மின்னஞ்சல் ஊடாக அறிந்துள்ளார்.
மின்னஞ்சல் ஊடாக இலங்கை பிரதிநிதிக்கு அறிவிக்கப்பட்டிருந்த நிலையிலும், ரேடியோ தகவல் ஊடாக துறைமுகம் அறிந்திருந்தும் கப்பலின் அழிவை குறைத்துக்கொள்வதற்கு அல்லது கட்டுப்படுத்துவதற்கு சந்தர்ப்பம் இருக்கவில்லையா?
இது தொடர்பாக CID-யினர் விசாரணை நடத்துவதுடன் அவர்கள் அவ்வப்போது நீதிமன்றத்திற்கும் அறிக்கையிடுகின்றனர்.
கப்பலில் ஏற்பட்ட தீயினால் சமுத்திர சூழலுக்கு ஏற்பட்ட பாதிப்பிற்காக நட்டஈடு பெறுவதற்கு இலங்கை எடுத்துள்ள நடவடிக்கை இன்னமும் சிக்கலானது.
கப்பலின் உரிமையாளர்களான X-Press Feeders நிறுவனம், சர்வதேச எரிபொருள் போக்குவரத்து கப்பல் உரிமையாளர்களின் சங்கம் மற்றும் OSR லிமிட்டட் ஆகிய நிறுவனங்களையும் இலங்கை அதிகாரிகளுடன் இணைத்து பாதிப்புகளை மதிப்பீடு செய்வதற்காக நியமித்துள்ளது.
இந்த நியமனத்தை இலங்கை அதிகாரிகளின்றி சிங்கப்பூர் நிறுவனமே மேற்கொண்டுள்ளது.
இலங்கையின் சமூத்திர சுற்றுச்சூழலை நிர்வகிப்பதற்கான சட்ட அதிகாரம் MEPA என்றழைக்கப்படுகின்ற சமுத்திர சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகார சபைக்கே உள்ளது.
அவ்வாறெனில், கப்பலினால் ஏற்பட்ட சுற்றுச்சூழல் பாதிப்பை மதிப்பீடு செய்வதற்காக சர்வதேச நிறுவனங்களை நியமிக்கும் உரிமையும் MEPA நிறுவனத்திற்கேயுள்ளது.
எனினும், இலங்கை சார்பாக இந்த நடவடிக்கைகள் தொடர்பிலான பொறுப்பு வேறு நிறுவனத்திடம் கையளிக்கப்பட்டுள்ளதை காண முடியவில்லை.
X-PRESS PEARL கப்பலின் உரிமையாளர்கள் இந்த விபத்து தொடர்பில் தமது பிரதிநிதிகளையே நியமிக்க சந்தர்ப்பம் வழங்கியதன் மூலம் இலங்கை கோழிப் பண்ணையை நரியிடம் ஒப்படைப்பதற்கு நிகரான செயலை புரிகின்றது அல்லவா?
எரிபொருள் போக்குவரத்து கப்பல் உரிமையாளர்கள் சங்கம் மற்றும் OSR லிமிட்டட் ஆகியன கப்பல் உரிமையாளர்கள் மற்றும் எரிபொருள் நிறுவனங்களின் தேவைகளுக்காகவே ஸ்தாபிக்கப்பட்டுள்ளன.
அவ்வாறெனில், இலங்கை கடலின் பாதுகாப்பு தொடர்பில் அவர்களுக்கு பொறுப்புள்ளதா என்ற சிக்கலும் எழுகிறது.
இந்த நிறுவனங்களின் பணிப்பாளர் சபைகளில் கப்பல் நிறுவன உரிமையாளர்கள், காப்புறுதி நிறுனங்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய ஏனைய நிறுவன உரிமையாளர்களே அங்கம் வகிக்கின்றனர்.
இதற்கமைய, X-PRESS PEARL கப்பலின் உரிமையாளர்களே இவர்களை நியமித்துள்ளமை கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டிய விடயமல்லவா?
இதனிடையே, சமூத்திர சுற்றுச்சூழல் தொடர்ந்தும் அழிவை சந்தித்து வருகிறது. இன்றும் சில பகுதிகளில் கப்பலில் இருந்து கடலில் கலந்த பொருட்கள் கரையொதுங்கின.
யார் எவ்வாறு பொறுப்புக் கூற வேண்டியிருந்தாலும், யார் எவ்வாறு அனுகூலங்களைப் பெற்றாலும் எமது பெறுமதி மிக்க இயற்கை வளமே அழிவடைகின்றது.