அரசமைப்பில் இருக்கும் 13ஆவது திருத்தத்தை அமுல்படுத்தும் போது ஏன் பிரச்சினைகள் எழுகின்றன? சஜித் கேள்வி

“எமது சட்டப் புத்தகத்திலேயே இருக்கின்ற அரசமைப்பின் 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துகின்றபோது ஏன் பிரச்சினைகள் வருகின்றன?” – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாஸ கேள்வி எழுப்பினார்.

“எனவே, மக்கள் ஓரணியில் திரண்டு இனங்களுக்கும் மதங்களுக்கும் இடையில் நம்பிக்கையைக் கட்டியெழுப்ப வேண்டியது மிக மிக அவசியம்” – என்றும் வலியுறுத்திய அவர், “கமராக்களுக்காக அல்லாமல் மனதளவில் அத்தகைய மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும” – என்றும் சுட்டிக்காட்டினார்.

அரசமைப்பின் 13 ஆவது திருத்தத்துக்கு எதிராக தென்னிலங்கையில் மீண்டும் எழுந்துள்ள எதிர்ப்புக்கள் தொடர்பில் கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“அரசமைப்பின் 13 ஆவது திருத்தம் என்பது எமது சட்டப் புத்தகத்தில் இன்று அல்லது நேற்று வந்த ஒன்றல்ல. இந்த 13 ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துகின்றபோது ஏன் பிரச்சினைகள் வருகின்றன.?

நாட்டிலுள் இனங்களும் மதங்களும் ஏனைய இனங்களையும் மதங்களையும் மதிப்பதில்லை. அதுவே இதற்கான பிரதான காரணமாக உள்ளது.

ஆகவே, சற்று சிந்தித்துப் பாருங்கள். சிங்கள மொழி பேசும் எமது சிங்கள மக்கள், தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் தொடர்பில் நம்பிக்கையின்றிச் செயற்படுகின்றனர்.

அதே போன்றே தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் சிங்கள மற்றும் முஸ்லிம் மக்கள் தொடர்பில் நம்பிக்கையின்றி செயற்படுகின்றனர்.

அவ்வாறே முஸ்லிம் மக்களும் சிங்கள மற்றும் தமிழ் மக்கள் தொடர்பில் நம்பிக்கையின்றிச் செயற்படுகின்றனர்.

இவ்வாறு ஒவ்வொருவரும் நம்பிக்கையற்ற நிலையிலேயே இருக்கின்றனர். இதுவே இங்குள்ள பாரிய பிரச்சினையாகும்.