ஆராய்ச்சி கப்பல்களுக்கு இலங்கை தடைவிதித்துள்ளமை குறித்து சீனா தனது கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளது.
இலங்கை ஜனவரி மூன்றாம் திகதி முதல் சீன ஆராய்ச்சிகப்பல்கள் இலங்கையின் விசேட பொருளாதார வலயத்தில் ஆராய்ச்சியில் ஈடுபடுவதற்கு தடைவிதித்துள்ளமை குறித்தே சீனா தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளது.
வெளிநாட்டு ஆராய்;ச்சிக்கப்பல்கள் இவ்வாறான ஆராய்ச்சிகளில் ஈடுபடுவதற்கு இலங்கை ஒருவருடகால தடையை விதித்துள்ளது.
சீனாவின் ஜியாங் யாங் கொங் 3 என்ற ஆராய்ச்சி கப்பல் தென் இந்திய கடற்பரப்பில் ஆராய்ச்சியில் ஈடுபடுவதற்கு திட்டமிட்டிருந்த நிலையிலேயே இலங்கை இந்த தடையை அறிவித்தது.
குறிப்பிட்ட கப்பல் சீனாவின் இயற்கை வள அமைச்சிற்கு உரியது என தகவல்கள் வெளியாகியுள்ளன.
தனது அயலில் ஆராய்ச்சிகள் இடம்பெறுவது குறித்த பாதுகாப்புகரிசனையை இந்;தியா வெளியிட்ட நிலையிலேயே இலங்கை இந்த தடையை விதித்திருந்தது.
இந்திய ஊடகங்கள் இதனை சீனாவிற்கு விழுந்த அடி என குறிப்பிட்டிருந்தன .
எனினும் சீன அதிகாரிகள் இலங்கையின் இந்த முடிவால் கடும் அதிருப்தியடைந்துள்ளனர்,இன்னுமொரு நாட்டின் அழுத்தத்தினால் இலங்கை இவ்வாறான முடிவை எடுத்தமை குறித்து தங்கள் அதிருப்தியை வெளியிட்டுள்ளனர்.