இந்திய பிரதமர் வலியுறுத்திய 13ம் திருத்தச்சட்டம் தொடர்பில் கட்சித் தலைவர்களுடன் கலந்துரையாடப்படும் – ஜீவன்

இந்தியப் பிரதமாரால் வலியுறுத்தப்பட்ட 13 ஆவது திருத்தச்சட்டம் தொடர்பாக அனைத்துக் கட்சித் தலைவர்களுடனும் விரிவாகக் கலந்துரையாடப்படும் என அமைச்சர் ஜீவன் தொண்டமான் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி குழாமினர் இந்தியாவிற்கான விஜயத்தை முடித்துக் கொண்டு நேற்றிரவு நாடு திரும்பியிருந்தனர்.

இதன்போது விமான நிலையத்தில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தபோதே அமைச்சர் ஜீவன் தொண்டமான் மேற்கண்டவாறு தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“எதிர்வரும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தினை கூட்டுவதற்கு ஜனாதிபதி தீர்மானித்துள்ளார். இதன்போது இந்தியப் பிரதமாரால் வலியுறுத்தப்பட்ட 13 ஆவது திருத்தச்சட்டம் தொடர்பாக அனைத்துக் கட்சித் தலைவர்களுடனும் விரிவாகக் கலந்துரையாடப்படும்.

அதன்பின்னர் 13 ஆவது திருத்தச்சட்டம் தொடர்பான விடயங்களை முன்னெடுத்துச் செல்வது குறித்து தீர்மானிக்கப்படும்.

அதேபோல் பல முக்கிய ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன. குறிப்பாக திருகோணமலையை பொருளாதார ரீதியில் வலுப்படுத்தும் செயற்திட்டங்களை முன்னெடுப்பது மற்றும் வலுசக்தி திட்டங்கள் ஆகியவற்றிற்கு இந்தியா தனது முழுமையான பங்களிப்பினை வழங்கியிருக்கின்றது.

எனவே எதிர்காலத்தில் இந்தியாவுடன் இணைந்து பல்வேறு துறைகளில் அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுப்பதற்கு திட்டமிட்டுள்ளோம். எமது இந்தியப் பயணம் வெற்றியளித்துள்ளது.

குறிப்பாக மலையக சமூகம் 200 வருடங்களைக் கடந்து பயணித்துக் கொண்டிருக்கின்றது. எமது இந்தியப் பயணத்தின்போது 13 ஆவது அரசியலமைப்புத் திருத்தம் விசேடமாக நாட்டினது பொருளாதார நெருக்கடி மற்றும் மலையக மக்களது வாழ்வாதாரம் உள்ளிட்ட பல்வேறுபட்ட விடயங்கள் விரிவாகக் கலந்துரையாடப்பட்டன.

அதனடிப்படையில் கிட்டத்தட்ட மூவாயிரம் மில்லியன் ரூபாவினை மலையகத்தினது வீட்டுத்திட்டம் மற்றும் கல்வி உள்ளிட்ட பல்வேறு வாழ்வாதாரப் பிரச்சினைகளுக்காக ஒதுக்குவதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்துள்ளார்.

விசேடமாக மலையகத்தின் கல்வி மற்றும் சுகாதாரப் பிரச்சினைகளுக்காக இந்த நிதி பயன்படுத்துவதற்கு நாம் நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளோம்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.