இந்தியாவிற்கு அருகில் ஒரு கிளர்ச்சியா?

யதீந்திரா?
ராஜபக்சக்களை அதிகாரத்திலிருந்து அகற்றுதல் என்னும் இலக்குடன் ஆரம்பிக்கப்பட்ட தென்னிலங்கை கிளர்ச்சியானது, சற்றும் எதிர்பாராத வகையில் உத்வேகத்துடன் தொடர்கின்றது. கிளர்சியாளர்களின் முதலாவது இலக்கு நிறைவேறிவிட்டது. ராஜபக்சக்களின் ராம்ராஜ்யத்தை சரித்துவிட்டனர். கோட்டபாயவின் வெளியேற்றத்துடன் ராஜபக்சக்களின் ஆட்டம் முடிவுக்கு வந்துவிட்டது. ஆனாலும் கிளர்ச்சியாளர்கள் தொடர்ந்தும் முன்னேறிக் கொண்டிருக்கின்றனர். முதலில் கோட்டபாய ராஜபக்சவை இலக்கு வைத்து கிளர்ச்சியை ஒருங்கிணைத்தவர்கள் தற்போது, ரணில் விக்கிரமசிங்கவை இலக்கு வைத்து கிளர்ச்சியை தீவிரப்படுத்திவருகின்றனர். இதன் ஆரம்பக்கட்டமாகவே பிரதமர் அலுவலகத்தை தங்களது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தனர். தற்போது அவற்றிலிருந்து வெளியேறியிருந்தாலும் கூட, தங்களால் எவ்வேiளையிலும் அரசாங்கத்தை முடக்க முடியுமென்பதே அவர்கள் கூறமுற்படும் செய்தியாகும். அவர்களின் அடுத்த இலக்கு நாடாளுமன்றமாகும்.

விடயங்களை தொகுத்து நோக்கினால், கிளர்சியாளர்களின் இலக்கு ராஜபக்ச ஆட்சியாளர்களை அகற்றுவது மட்டும்தானா அல்லது இலங்கைத் தீவின் அதிகாரத்தை முழுமையாக கைப்பற்றுவதா – என்னும் கேள்வி எழுகின்றது? ஏனெனில் கிளர்சியாளர்களால் முன்வைக்கப்பட்டிருக்கும் நிபந்தனைகள் பல நடைமுறைக்கு சாத்தியமானவைகள் அல்ல. மாறாக, தற்போதுள்ள அரசியல் கட்டமைப்புக்கள் மூலம் நடைமுறைப்படுத்த முடியாதவை. இதனை தெரியாமல் முன்வைக்கின்றனரா அல்லது அரசியல் கிளர்ச்சியை தொடர்வதற்கான ஒரு உபாயமாக முன்வைக்கின்றனரா?

சிறிலங்காவின் அரசியல் வரலாற்றில் தென்னிலங்கை இரண்டு ஆயுத கிளர்ச்சிகளை கண்டிருக்கின்றது. 1971 மற்றும் 1989இல் ஜே.பி.வி இரண்டு முறை அதிகாரத்தை கைப்பற்றுவதற்கான கிளர்ச்சியில் ஈடுபட்டிருந்தது. 1971 கிளர்ச்சியை அடக்குவதற்கு அப்போதைய சிறிலங்காவின் தலைவர், சிறிமாவோ பண்டாரநாயக்க, இந்தியாவின் உதவியை நாடியிருந்தார். இந்தியாவின் உதவி இல்லாவிட்டால் ஜே.வி.பி கிளர்சியாளர்களை இராணுவ ரீதியில் அடக்க முடியாமல் போயிருக்கும். தோல்வியடைந்த ஜே.வி.பியினர் மீளவும் 1989இல், அதிகாரத்தை கைப்பற்றுவதற்கான கிளர்ச்சியை முன்னெடுத்திருந்தனர். இதன் போது, இந்திய எதிர்ப்பே ஜே.வி.பியின் பிரதான இலக்காக இருந்தது. இரண்டு கிளர்ச்சிகளின் போதும் மோசமான தோல்வியை சந்தித்த, ஜே.வி.பி, பின்னர் தங்களை ஜனநாயகரீதியானதொரு கட்சியாக உருமாற்றிக்கொண்டது. ஜே.வி.பியினர், தென்னிலங்கை பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் தங்களுக்கான செல்வாக்கை தக்கவைத்துக் கொள்வதில் ஆரம்பத்திலிருந்தே பிரதான கவனம் செலுத்திவந்திருக்கின்றனர்.

இடதுசாரி சிந்தனைகளால் ஈர்க்கப்பட்ட தலைமுறையைச் சேர்ந்தவர்களின் வழிகாட்டுதலில்தான் தற்போதைய கிளர்ச்சியும் திட்டமிடப்பட்டிருக்கின்றது. ஜே.வி.பி தலைவர் ருகுணு விஜயவீர தலைமையிலான சிந்தனைகளால் ஈர்க்கப்பட்ட ஒரு தலைமுறையினரும் இதில் பிரதான பங்கு வகிக்கின்றனர். கோல்பேஸ், கோட்டா கோ கோம் எதிர்ப்பு அணியில் பல தரப்பினரும் இருந்ததாக சொல்லப்பட்டாலும் கூட, தற்போது இடம்பெற்றுவரும் கிளர்ச்சியில், முற்றிலும் இடதுசாரி சிந்தனைகளால் ஈர்க்கப்பட்டவர்களே பெருபாண்மையாக இருக்கின்றனர். ஒரு வேளை கொழும்பு மைய சிவில் சமூகக் குழுக்களோ அல்லது அரசுசாரா நிறுவனங்களை சேர்ந்தவர்களோ இதில் முன்னணியில் இருந்திருந்தால், ரணிலால் அவர்களை இலகுவாக கையாண்டிருக்க முடியும். அத்துடன் அவ்வாறானவர்கள் இந்தளவிற்கு துனிகரமாக இதனை முன்னெடுக்கவும் மாட்டார்கள். கிடைக்கும் தகவல்களின்படி, இந்த கிளர்ச்சியின் பின்னாலிருப்பவர்களில், முதன்மையானவர்களாக, குமார் குணரட்ணம் தலைமையிலான முன்னணி சோசலிச கட்சியை சேர்ந்தவர்களே இருக்கின்றனர். இதனை குமார் குணரட்ணமும் மறுக்கவில்லை அத்துடன், இடதுசாரி சிந்தனைகளை வரித்துக் கொண்டிருக்கும், அனைத்து பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியமும் பிரதான பங்குவகிக்கின்றது. பல தொழிற்சங்கங்களும் இதில் பங்கு வகிக்கின்றன. தென்னிலங்கை தொழிற்சங்கள் அனைத்துமே பெருமளவிற்கு இடதுசாரித்துவ அதே வேளை இந்திய எதிர்ப்பு சிந்தனைப் போக்குடையவையாகும். அதே வேளை ஜே.வி.பியின் ஆதரவைப் பெற்றிருக்கும் ஒரு அணியினரும் இதன் பின்னாலிருக்கின்றனர். ஆனால் புரட்சிகர அரசியல் மூலம் அதிகாரத்தை கைப்பற்றுதல் என்னுமடிப்படையில் செயற்படக்கூடிய, அனுபமுள்ளவராக குமார் குணரட்ணமே இருக்கின்றார்.

தற்போது இடம்பெற்று வரும் கிளச்சியை எவ்வாறு புரிந்து கொள்வது என்பது முக்கியமானது. ஆரம்பத்தில் ராஜபக்சக்களை அகற்றுதல் என்பதே அவர்களின் நோக்கமாக இருந்தது. இப்போது அவர்கள் முன்வைத்திருக்கும் நிபந்தனைகள் எவையுமே ஆரம்பத்தில், அவர்களிடம் இருந்திருக்கவில்லை. ஆனால் இம்மாதம் ஜனாதிபதி மாளிகையை கைப்பற்றிய பின்னர்தான், அவர்களில் சில மாற்றங்கள் தெரிந்தன. தங்களை தவிர்த்து அரசியல்வாதிகள் எவரும் இயங்க முடியாதென்னும் நிலைப்பாட்டிற்கு தாவினர். ஜனாதிபதி மாளிகை கிளர்சியாளர்களின் கைகளில் விழுந்ததை தொடர்ந்தே, கோட்டபாய ராஜபக்ச பதவி விலகும் முடிவை எடுத்திருந்தார். அதுவரையில், தனது பதவிக் காலம் முடியும் வரையில், தான் வெளியேறப் போவதில்லையென்னும் முடிவிலேயே இருந்தார். ஆனால் கிளர்ச்சியாளர்கள் ஜனாதிபதி மாளிகையை கைப்பற்றியை தொடர்ந்து, கோட்டபாயவின் அனைத்து கனவும் கலைந்தது.

இந்த இடம்தான் கிளர்சியாளர்களுக்கு உற்சாகத்தை வழங்கியிருக்க வேண்டும். கோட்டபாயவை வெளியேற்றும் அவர்களின் முயற்சியின் போது இராணுவம் குறுக்கிடவில்லை. இத்தனைக்கும் விடுதலைப் புலிகளை போரில் தோற்கடித்த ஒரு இராணுவ வீரன் என்னும் தகுதியே கோட்டபாயவின் பலமாக இருந்தது. ஆனால் அவ்வாறான ஒருவருக்கு எதிராக, கிளர்ச்சியாளர்கள் ஒன்றுதிரண்ட போது, இராணுவம் அவரை காப்பாற்ற முயற்சிக்கவில்லை. தப்பியோடச் செய்வதன் மூலமே கோட்டபாய பாதுகாக்கப்பட்டார். கோட்டபாய தப்பியோடிமையானது, அதுவரையான கிளர்ச்சி நடவடிக்கையில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியது.

இடதுசாரிச் சிந்தனைகளின் வழியாக அதிகாரத்தை கைப்பற்றுதல் என்பது சோவியத் கால, உலக ஒழுங்கிற்குட்பட்ட ஒன்று. இலங்கைத் தீவில் இடம்பெற்ற சிங்கள மற்றும் தமிழ் ஆயுத கிளர்சிகளில் இடதுசாரி சிந்தனைகள் பெரியளவில் செல்வாக்குச் செலுத்தியிருந்தன. சோவியத் பாணி சோசலிச சிந்தனைகளின் வழியாகவே, ஜே.வி.பியானது, தென்னிலங்கையின் அதிகாரத்தை கைப்பற்றுவதற்கான ஆயுத கிளர்சியை முன்னெடுத்திருந்தது.

இதே போன்று, தமிழ் மக்களுக்கான தனிநாட்டுக் கோரிக்கையை அடிப்படையாகக் கொண்டு உருவாகிய ஆயுத விடுதலை இயக்கங்களில், விடுதலைப் புலிகள் மற்றும் டெலோ தவிர்ந்த இயக்கங்கள், தங்களை இடதுசாரிகளாகவே அடையாளப்படுத்திக் கொண்டனர். ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழீழ மக்கள் விடுதலை கழகம் மற்றும் ஈரோஸ் ஆகியவை தங்களை இடதுசாரிகளாகவே அடையாளப்படுத்திக் கொண்டனர். விடுதலைப் புலிகள் அமைப்பு மற்றும் டெலோ ஆகியவை தங்களை கருத்தியல் அடிப்படையில் அடையாளப்படுத்தவில்லை. ஆனால், இங்கு குறிப்பிடப்பட்ட பிரதான இயக்கங்கள் அனைத்துமே, பிற்காலத்தில், இந்தியாவிடம் ஆயுதப் பயிற்சியை பெற்றுக்கொண்டன. இதற்கு பின்னர் இயக்கங்களின் மத்தியில் இடதுசாரி வலதுசாரி என்னும் பிளவுகள் கரைந்துபோயின.
தென்னிலங்கையை பொறுத்தவரையில் இடதுசாரித்துவ செல்வாக்கு என்பது தொடர்ந்தும் இருந்துவருகின்றது. குறிப்பாக சிங்கள பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் இடதுசாரித்துவ ஈர்ப்பு கணிசமான செல்வாக்கை பெற்றிருக்கின்றது. ஆனாலும் சிங்கள இடதுசாரித்துவத்தை சிங்கள பௌத்த தேசியவாதத்திலிருந்து பிரித்துப் பார்ப்பது கடினம். குறிப்பாக விடுதலைப் புலிகளின் வீழ்ச்சியை தொடர்ந்து ராஜபக்சக்களால் தலைமை தாங்கப்பட்ட சிங்கள பௌத்த தேசியவாதம் தென்னிலங்கையை முற்றிலுமாகவே ஆக்கிரமித்திருந்தது. பொருளாதார நெருக்கடியின் காரணமாக தற்போது சிங்கள பௌத்த தேசியவாதம் நெருக்கடியை சந்தித்திருக்கின்றது. இந்தப் பின்னணியில்தான், இடதுசாரித்துவ செல்வாக்கிற்குட்பட்ட மாணவர்கள் மற்றும் இடதுசாரி அமைப்புக்கள் மீளவும் முன்னணிக்கு வந்திருக்கின்றனர். இந்த பின்புலத்தில்தான் ஒரு கேள்வி எழுகின்றது – அதாவது, தற்போது முன்னெடுக்கப்பட்டுவரும் கிளர்சியின் இலக்கு என்ன? 1971 மற்றும் 1989இல் ஜே.வி.பியால் முடியாமல் போனதை இவர்கள் மீளவும் புதியதொரு வழிமுறையால் சாதிக்க முற்படுகின்றனரா? இந்தியாவின் கொல்லைப்புறத்தில் இடம்பெறும் இவ்வாறானதொரு கிளர்ச்சி தொடர்பில் இந்தியா எதுவரையில் அமைதியாக இருக்க முடியும்?

இந்தியாவின் உடனடி அயல்நாடொன்றில் ஏற்பட்டிருக்கும் அரசியல் கொந்தளிப்புக்கள், இந்தியாவின் உள்ளக அரசியலிலும் தாக்கங்களை ஏற்படுத்தக் கூடியது. ஆனால் தற்போது ஏற்பட்டிருக்கும் கிளர்ச்சி எதுவரையில் செல்லும்? கிளர்ச்சியாளர்கள் அனைத்தையும் தங்கள் வசப்படுத்தினால், அது தெற்காசிய அரசியலில் எவ்வாறான தாக்கங்களை ஏற்படுத்தும்? அதே வேளை, இலங்கையின் ஆட்சியாளர்கள் அகற்றப்பட்டிருக்கும் முறைமையானது, தெற்காசியாவின் ஏனைய நாடுகளிலும் தொற்றலாம். இந்த நிலையில், இந்தியாவின் எதிர்வினை என்னவாக இருக்கப் போகின்றது? இலங்கையின் தென்பகுதியின் கிளர்ச்சியில் ஈழத் தமிழர்கள் பார்வையாளர்களாக மட்டுமே இருக்கின்றனர். இது பிறிதொரு செய்தியாகும்.