தற்போதைய நெருக்கடிகளிலிருந்து இலங்கை மீட்சியடைவதற்கு அவசியமான முழுமையான ஒத்துழைப்பு வழங்கும் முனைப்புடன் தனது பணிகளை ஆரம்பித்திருப்பதாகத் தெரிவித்துள்ள ஐ.நாவின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி மார்க்-அன்ரூ ஃப்ரான்ஸ், நாட்டின் பொருளாதாரம் நிலைபேறான பாதையில் பயணிப்பதை முன்னிறுத்திய முதலீடுகளை ஊக்குவிப்பதில் அதிக அக்கறை செலுத்தப்போவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதியாகக் கடமையாற்றிய ஹனா சிங்கர் ஹம்டியின் பதவிக்காலம் முடிவுக்கு வந்ததையடுத்து, புதிய வதிவிடப்பிரதிநிதியாக ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் அன்ரோனியோ குட்டரெஸினால் மார்க்-அன்ரூ ஃப்ரான்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
அதன்படி இலங்கையில் உத்தியோகபூர்வமாகத் தனது கடமைகளைப் பொறுப்பேற்றிருக்கும் அவர், கொழும்பில் அமைந்துள்ள சுதந்திர சதுக்கத்தைப் பார்வையிட்டதன் பின்னர் அங்கிருந்து வெளியிட்டுள்ள காணொளியிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
‘நான் இப்போது சுதந்திர சதுக்கத்தில் இருக்கின்றேன். இது இலங்கை மக்களின் மீண்டெழும் தன்மையை வெளிக்காட்டும் வகையில் மாத்திரமன்றி, இலங்கையர்கள் அனைவரும் ஒருமித்துச் செயற்பட்டால் எவற்றைச் சாதிக்கலாம் என்பதற்கான அடையாளமாகவும் விளங்குகின்றது’ என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் ஐ.நாவின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி என்ற ரீதியில் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டிருப்பதாகக் குறிப்பிட்டுள்ள அவர், இலங்கையின் அனைத்துத் தரப்பினரிடமிருந்தும் தனக்குக் கிடைக்கப்பெற்றுள்ள வரவேற்பு குறித்து மிகுந்த மகிழ்ச்சியடைவதாகவும் தெரிவித்துள்ளார்.
அதேவேளை கொவிட் – 19 வைரஸ் பரவலாலும், பொருளாதார நெருக்கடியின் விளைவாகவும் இலங்கை மக்கள் மிகமோசமாகப் பாதிக்கப்பட்டிருப்பதாகச் சுட்டிக்காட்டியுள்ள மார்க்-அன்ரூ ஃப்ரான்ஸ், தற்போது பூகோளக் காரணிகள் மற்றும் காலநிலை மாற்றம் போன்றனவும் இலங்கை மக்கள் மத்தியில் எதிர்மறையான தாக்கங்களை ஏற்படுத்தியிருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறானதொரு பின்னணியில் இந்நெருக்கடிகளிலிருந்து இலங்கையும், இலங்கை மக்களும் மீட்சியடைவதற்குத் அவசியமான முழுமையான ஒத்துழைப்பை வழங்கும் முனைப்புடனும், வலுவான நம்பிக்கையுடனும் தனது பணிகளை ஆரம்பிப்பதாகத் தெரிவித்துள்ள அவர், நாடு என்ற ரீதியில் நிலைபேறான பாதையில் பயணிப்பதை முன்னிறுத்திய முதலீடுகளை ஊக்குவிப்பதில் அதிக அக்கறை காண்பிக்கப்போவதாகக் குறிப்பிட்டுள்ளார்.