பிரான்ஸ் ஜனாதிபதி இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம்

பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளவுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு செய்தி வெளியிட்டுள்ளது.

பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் நாளை வெள்ளிக்கிழமை (28) பிற்பகல் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.

பிரான்ஸ் ஜனாதிபதி தனது விஜயத்தின் போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து பிராந்திய மற்றும் உலகளாவிய சவால்கள் தொடர்பில் இருதரப்பு கலந்துரையாடல்களை முன்னெடுக்கவுள்ளார்.

பிரான்ஸ் ஜனாதிபதி ஒருவர் இலங்கைக்கு மேற்கொள்ளும் முதலாவது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த விஜயம் இதுவாகும்.

பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் இந்தோ-பசிபிக் மூலோபாயத்தை வலுப்படுத்தவும், பிராந்தியத்தில் பிரான்சின் பங்கை மீண்டும் உறுதிப்படுத்தவும்  ஒரு “வரலாற்று” பயணத்தை ஆரம்பித்துள்ளார்.

குறித்த ஐந்து நாள் பயணம் ஜூலை 24 அன்று பிரான்ஸ்  தீவுக்கூட்டமான நியூ கலிடோனியாவில் ஆரம்பமாகியது. அதைத் தொடர்ந்து வனுவாட்டு மற்றும் பப்புவா நியூ கினியாவில் நிறைவடையும்.

அதன் பின்னர் பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் இலங்கைக்கு வருகை தரவுள்ளார்.

ஜூன் மாதம் பாரிஸில் நடைபெற்ற புதிய உலகளாவிய நிதி உடன்படிக்கைக்கான மாநாட்டின் அரச தலைவர் அமர்வின் போது ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் கடைசியாக இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் சுமுகமான உரையாடலில் ஈடுபட்டார்.

இலங்கையின் கடன் மறுசீரமைப்பு மற்றும் ஒருங்கிணைப்பில் இருதரப்பு கடன் வழங்குநர்களிடையே பேச்சுவார்த்தை நடத்துவதற்கான பொதுவான தளத்தை அறிவித்த நாடுகளின் குழுவில் பிரான்ஸும் அங்கம் வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.