இலங்கைக்கு ஒக்டோபரில் சீன ஆராய்ச்சிக் கப்பல் விஜயம்

இலங்கைக்கு ஒக்டோபர் மாதத்தில் சீனாவின் ஆராய்ச்சி கப்பல் விஜயம் மேற்கொள்ளவுள்ள நிலையில் இலங்கை மீண்டும் பெரும்புவிசார் அரசியல் சிக்கலை எதிர்கொள்ளவுள்ளது.

இலங்கையின் அம்பாந்தோட்டை கொழும்புதுறைமுகங்களில் தரித்துநிற்கும் என எதிர்பார்க்கப்படும் சீனாவின் சியான் 6 ஆராய்ச்சி கப்பல் குறித்து இந்தியா உன்னிப்பாக அவதானிக்கின்றது.

ஒக்டோபர் 25ம் திகதி சீன கப்பல் இலங்கையை வந்தடையும் என்பதை இலங்கை கடற்படை நேற்று உறுதி செய்துள்ளது.

குறிப்பிட்ட கப்பல் 17 நாட்களுக்கு இலங்கையில் ஆராய்ச்சிகளில் ஈடுபட்டிருக்கும்.

இலங்கையின் நாரா அமைப்புடன் இணைந்து கூட்டு ஆராய்ச்சி நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்காகவே இந்த கப்பல் இலங்கை வருகின்றது என இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

இதேவேளை ருகுணுபல்கலைகழகத்துடனான இணக்கப்பாட்டின் அடிப்படையில் குறிப்பிட்ட கப்பல் இலங்கைக்கு வருகின்றது என நாரா தெரிவித்துள்ளது.

தனது ஆராய்ச்சிகளுக்கு அவசியமான மாதிரிகளை பெற்றுக்கொள்வதற்காக அந்த கப்பலுடன் தொடர்பை ஏற்படுத்தவுள்ளதாக நாரா தெரிவித்துள்ளது.