இலங்கையையும் அரவணைத்து இந்தியா முன்னேற்றிச் செல்லும் – இந்திய அமைச்சர் எல்.முருகன்

அபிவிருத்திக் குறிக்கோளுடன் பயணித்துக் கொண்டிருக்கும் இலங்கையையும் அரவணைத்து இந்தியா முன்னேற்றிச் செல்லும். அயல் நாட்டுக்கு முதலிடம் கொள்கைக்கு அமைய உட்கட்டமைப்பு வசதிகள் உட்பட இரு நாடுகளுக்குமிடையிலான படகு சேவைகளை புதுப்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இந்திய மத்திய இணை அமைச்சர் கலாநிதி எல்.முருகன் தெரிவித்தார்.

இந்திய நிதியுதவியின் கீழ் நிர்மாணிக்கப்பட்டுள்ள யாழ்.கலாசார நிலையத்தை மக்கள் பாவனைக்கு கையளிக்கும் நிகழ்வு இன்று (11) சனிக்கிழமை இடம்பெற்றது. இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

யாழ். கலாசார மத்திய நிலையத்தை மக்கள் பாவனைக்காக கையளிக்கின்றமை மகிழ்ச்சியளிக்கின்றது. இந்நிலையமானது மக்கள் மத்தியில் கலை , கலாசார வளர்ச்சியில் பெரும் பங்கினை வகிக்கும். எனது இந்த விஜயத்தின் போது இலங்கை மக்கள் மீதான இந்தியாவின் பரந்துபட்ட அர்ப்பணிப்பை மாகாணங்களில் தெளிவாக அவதானிக்க முடிந்தது. துரையப்பா மைதானம் மற்றும் திருக்கேதீஸ்வர ஆலய புனர்நிர்மாணம் இதற்கு சிறந்த உதாரணமாகும்.

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் ‘அயல் நாட்டுக்கு முதலிடம்’ கொள்கையின் கீழ் இலங்கை முக்கியத்துவம் பெறுவது இயற்கையானது. ‘உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு’ என்ற திருக்குறளுக்கமைய நட்பு நாடாக இந்தியா கடந்த 2022 ஆம் ஆண்டில் மாத்திரம் சுமார் 4 பில்லியன் டொலர் கடன் உள்ளிட்ட ஏனைய உதவிகளை வழங்கியுள்ளது.

இலங்கையின் பொருளாதார முயற்சிக்கு வழிவகுக்கும் வகையில் சர்வதேச நாணய நிதியத்திற்கு எழுத்து மூலமாக நிதி உத்தரவாதத்தை வழங்கிய முதல் நாடு இந்தியா என்பதை பெருமிதத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். கொவிட் உள்ளிட்ட பல்வேறு நெருக்கடிகளிலும் இந்தியா அதன் உதவிகளை முன்னின்று வழங்கியுள்ளது. இவ்வழியாக இரு நாட்டு தலைமைகளினதும் வழிகாட்டலில் எமது ஒத்துழைப்புக்களை மேலும் விரிவுபடுத்துவோம் என்று உறுதியளிக்கின்றேன்.

யாழ் – சென்னை நேரடி விமான சேவை இரு நாடுகளுக்குமிடையிலான வர்த்தக பரிமாற்றங்களை விரைவுபடுத்தும். அது வர்த்தகம் மாத்திரமின்றி சுற்றுலாத்துறையை மேம்படுத்தவும் இது உந்துகோலாக அமையும். அதேபோன்று உட்கட்டமைப்பு வசதிகளை அதிகரித்தல் உட்பட இரு நாடுகளுக்குமிடையிலான படகு சேவையை புதுப்பிக்கவும் நாம் பணியாற்றி வருகின்றோம். இது எம்மிரு நாடுகளுக்குமிடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்தி பொருளாதார, கலாசார ஈடுபாடுகளை ஆழப்படுத்தும் என்பதை உறுதியாக நம்புகின்றோம்.

அபிவிருத்தி குறிக்கோளுடன் இலங்கையும் பயணித்துக் கொண்டிருக்கிறது. அத்தகைய அபிவிருத்தி பயணத்தில் இந்தியா தனது நட்பு நாடுகளை குறிப்பாக இலங்கையையும் அரவணைத்து முன்னேற்றிச் செல்லும் என்று உறுதியளிக்கின்றோம். இவ்வளர்ச்சி இரு நாடுகளுக்குமானதாக மாத்திரமின்றி மக்களுக்கானதாகவும் இருக்கும் என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றேன் என்றார்.