“ஈழத்தமிழர்களின் இனப்பிரச்சினையை புரிந்துகொள்ள இந்தியா தயாராக இல்லை“

ஜெனீவாவில் கடந்த சில நாட்களுக்கு முன் நடந்த ஐ.நா சபை கூட்டத்தில் இலங்கையின் தற்போதைய நெருக்கடி மற்றும் அரசியல் விவகாரங்கள் குறித்து இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி இந்திராமணி பாண்டே கருத்து தெரிவிக்கையில் ‘இலங்கை தமிழர்கள் இனப்பிரச்சினையில் அரசியல் தீர்வு ஏற்பட அந்நாட்டு அரசு எந்தவித முயற்சியும் எடுக்கவில்லை’ என சுட்டிக்காட்டியிருந்தார்.

இந்நிலையில், இந்திய தரப்பின் இக்கருத்து குறித்து சென்னை பல்கலைக்கழக பேராசிரியர் குழந்தைசாமி இலக்கு ஊடகத்திற்கு வழங்கிய செவ்வி….

கேள்வி

தமிழ் மக்களின் இனப்பிரச்சனைக்கான அரசியல் தீர்வை காண்பது தொடர்பில் இலங்கை அக்கறை செலுத்தவில்லை என ஐ.நா மனித உரிமை ஆணைக்குழுவில் இந்தியா தெரிவித்ததன் பின்னனி என்ன?

பதில்

இந்தியா ஈழத்தமிழர் பிரச்சினையில் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டது என்பது தவறான புரிதலாகும். இந்தியா தனது நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளது. அரசியலமைப்பின் 13வது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தி, மாகாண அவைகளுக்கு அதிகாரத்தை பகிர்ந்து, மாகாண தேர்தலை நடத்தி, இனப்பிரச்சினைக்கு தீர்வு காணவேண்டுமென்று காங்கிரஸ் அரசும் பாரதிய சனதா கட்சி அரசும் தொடர்ந்து கூறிவருகின்றன.

தனது நிலைப்பாட்டை இலங்கை அரசு விரைவாக செயல்படுத்தவேண்டும் என்பதில் இந்திய ஒன்றிய அரசு தெளிவாக உள்ளது. தனி ஈழம் என்ற தமிழ் மக்களின் கோரிக்கையை கண்டுகொள்ளவில்லை. சிங்கள பேரினவாதத்தை வளர்த்து, இனப்படுகொலை செய்த இனத்தோடு இணைந்து வாழ வாய்ப்புகள் குறைவு. ஈழத்தமிழர்களின் இனப்பிரச்சினையை சரியாக புரிந்துகொள்ள இந்திய ஒன்றிய அரசு தயாராக இல்லை. தனது நிலைப்பாட்டை செயல்படுத்துவதில் முனைப்புக் காட்டி, தனது அதிகாரத்தை இலங்கையில் நிலைநிறுத்த விரும்புகிறது. இந்திய ஒன்றியம் பௌத்த சிங்கள பேரினவாத அரசுக்கு தொடர்ந்து ஆதரவும் பாதுகாப்பும் கொடுத்து வருகின்றது.

உள்நாட்டு மக்களின் உரிமைகளையும் தேவைகளையும், மக்களாட்சியின்மீது நம்பிக்கை வைக்காத பாரதிய சனதா கட்சி இன்னொரு நாட்டிலுள்ள மக்களின் உரிமைகளை மதிக்காது. இந்திய ஒன்றிய அரசு இலங்கையில் நடந்த இனப்படுகொலையை மூடிமறைக்கும் வேலையை தீவிரமாக செய்து வருகிறது.

இலங்கையில் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்படவில்லை என்ற நோக்கில் ஈழத்தமிழர் பிரச்சினையை அணுகுகிறது. நிரந்தர அரசியல் தீர்வுகாண இந்திய ஒன்றிய அரசிடம் எவ்வித திட்டமும் செயல்பாடும் இல்லை. இந்திய ஒன்றிய அரசு ஈழத்தமிழர் இனச்சிக்கலை இரட்டை வேதத்தில் பார்க்கிறது. இதனால் இந்திய ஒன்றிய அரசால் எவ்வித தீர்வும் கிடைக்காது.

இந்திய ஒன்றியத்தின் நிலைப்பாடு எவ்வித மாற்றத்தையும் ஏற்படுத்தாது. தமிழர் பிரச்சினை குறித்து இந்திய ஒன்றியம் பேசுகின்ற போதிலும் இந்திய ஒன்றியத்திற்கு பொருளாதார ரீதியில் அதன் வழியாக எவ்வித நன்மையும் இல்லை. அது ஒரு நிலைப்பாடு. வழக்கம்போல் அது இந்திய ஒன்றியத்தின் அறிவிப்புதான் என்று மூத்த பத்திரிக்கையாளர் ஆர். சிவராசா கூறுகின்றார்.

நீதி, அமைதி, சமத்துவம் மாண்பு ஆகியவை தமிழர்களுக்கு கொடுக்க வேண்டுமென்று இந்திய ஒன்றிய அதிகாரி கூறுகிறார். ஆனால் எப்படி தருவது? இனப்படுகொலை செய்த பேரினவாத அரசு தமிழர்களுக்கு நீதி வழங்காது. இலங்கை குறித்த இந்திய ஒன்றிய நிலைப்பாடு இலங்கை அரசை காப்பாற்ற மீண்டும் முயற்சி செய்கிறது. இந்திய ஒன்றியத்தில் இந்து பேரினவாத அரசு இலங்கையில் உள்ள பௌத்த பேரினவாத அரசை, மானிட உரிமைகளை பாதுகாக்க எவ்வாறு அழைக்க முடியும்?

இலங்கையில் மாற்றம் வரக் கூடாதென இந்திய ஒன்றிய அரசு. இந்திய ஒன்றிய அரசு இரட்டை வேடம் போடுகிறது. ஈழத்தமிழர்களுக்கு நடைபெற்ற இன அழிப்பை ஆராய்ந்து தண்டனை வழங்காமல் தமிழர்களை ஆற்றல்படுத்த முடியாது. 13 வது திருத்தச் சட்டம் பெரும் பலனை ஈழத்தமிழர்களுக்கு கொடுக்க முடியாது. 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் வருகிறது. அதில் தமிழ்நாட்டு தமிழர்களின் ஓட்டுகளைப் பெற நடத்தும் ஒரு தேர்தல் நாடக யுத்தியாகும். சீனாவிற்கு எதிராக இலங்கையை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கவேண்டும் என்ற சிந்தனையில் இந்திய ஒன்றியம் செயல்படுகிறது. இலங்கைத் தீவு ஈழம், சிங்களம் என் இருநாடுகளாக பிரியக் கூடாதென இந்தியா தெளிவாக இருக்கிறது. அதனால் இந்த 51 வது ஐநா கூட்டத்தொடரில் இந்தியாவின் நிலைப்பாடு ஈழத்தமிழர்களுக்கு எவ்வித மாற்றத்தையும் ஏற்படுத்தாது என்பதை தெளிவாக புரிந்துகொள்ளவேண்டும்.

கேள்வி

உண்மையில் இந்தியா தமிழ் மக்கள் மீது அக்கறை கொண்டுள்ளதா இல்லை தமிழர்களை மீண்டும் பயன்படுத்த முற்படுகின்றதா?

பதில்

இந்திய ஒன்றிய அரசு ஈழத் தமிழர்களின் கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ளவில்லை. பேரினவாத அரசு இன்னொரு பேரினவாத அரசை ஏற்றுக்கொள்ளும். ஒருபோதும் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளை ஏற்காதுஇ அந்த உரிமைகளை மதிக்க மறுக்கும். இந்திய ஒன்றிய அரசு ஈழத்தமிழர்களிமீது எவ்வித அக்கறையும் இல்லை. தமிழ்நாட்டு முகாமில் வாழும் 58. 422 ஈழத்தமிர்களை வைத்து இலங்கை அரசை மிரட்டுகிறது. வடக்கு கிழக்கு பகுதிகளில் வாழும் தமிழர்கள் சமய வேறுபாடின்றி வாழ்ந்து வரும் தமிழர்களை பயன்படுத்தி இந்துத்துவா கொள்கையை பரப்பி இந்துகளையும் கிறித்தவர்களையும் பிரிக்கிறது. வடக்கு கிழக்கு பகுதிகளை இந்துநாடாக மாற்ற இந்திய ஒன்றிய பேரினவாத அரசு செயல்படுகிறது. தமிழ்நாட்டு தமிழர்களும் ஈழத்தமிழர்களுக்கும் உள்ள உறவை அறுத்து, வெறுப்பை வளர்த்து அன்னியப்படுத்த இந்திய ஒன்றிய அரசு செயல்படுகிறது.

ஈழத்தமிழர்களை தனது தன்னல நோக்கத்திற்காக பயன்படுத்தாமல் தமிழ் மக்களின் உரிமைகளை நிலைநிறுத்த இந்திய ஒன்றிய அரசை தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். கீழ்கண்ட கோரிக்கைகளை இந்திய ஒன்றிய அரசு செயல்படுத்த வேண்டும். 1. ஈழத்தமிழர்களுக்கு நடந்த இனப்படுகொலையை நன்கு ஆராய்ந்து நீதி வழங்க வேண்டும்.

2. வடக்கு கிழக்கு பகுதிகளில் பன்னாட்டு விசாரணை நடத்தவேண்டும்.

3. சிங்களவர்களோடு இணைந்து வாழ்வதா? தனிநாடாக பிரித்து வாழ்வதா? என்று பொதுவாக்கெடுப்பு நடத்தவேண்டும்.

4. ஈழத்தமிழர்களுக்கு தன்னாட்சி உரிமை வழங்கவேண்டும்.

5. சிங்கள பேரினவாத அரசை பன்னாட்டு குற்றவியல் நடுவர் மன்றத்தில் நிறுத்த வேண்டும்.

இந்தச் செயல்பாடுகளை இந்திய ஒன்றிய அரசு செயல்படுத்த வேண்டும். இல்லையென்றால் தமிழ் மக்களை தனது தன்னலத்திற்காக பயன்படுத்தி, தமிழர்களை அடிமைபடுத்துகிறது. இந்திய ஒன்றிய அரசை நம்பி நமது உரிமைகளை இழந்துவிடவேண்டாம்.தொடர்ந்து போராடி தனது உரிமைகளை பெற தமிழர்களாகிய நாம் ஒன்றிணைவோம்.

போர் முடிந்து 13 ஆண்டுகள் முடிந்தும் இன்னும் நீதி ஈழத்தமிழர்களுக்கு கிடைக்கவில்லை. அதற்கு காரணம் இந்திய ஒன்றிய அரசுதான். ஈழத்தமிழர்களை மனிதர்களாக மதிக்கவில்லை. வடஇந்திய ஒன்றிய அரசுகள் தமிழர்களை புரிந்தகொள்ள மறுக்கின்றன. சமயம்தான் முன்னிலைப் படுத்துகிறது. ஆனால் மனித உரிமைகளை பின்னுக்கு தள்ளுகிறது. அடிப்படையில் ஈழத் தமிழர்கள் பல்வேறு அரசியல் கட்சிகளுக்கு, அரசுகளுக்கு, நாடுகளுக்கு தன்னலத்திற்காக பயன்படுகின்றனர். இந்திய ஒன்றிய அரசை சரியாக நாம் புரிந்துகொள்ளவேண்டும். எவரும் நம்மை பயன்படுத்த விடாமல் உலக உரிமை சக்திகளோடு இணைந்து தொடர்ந்து போராடி தங்களது உரிமைகளை வென்றெடுப்போம்.