பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் மற்றும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று திங்கட்கிழமை (22) இடம்பெற்றுள்ளது.
இச்சந்திப்பு தொடர்பில் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றை இட்டிருக்கும் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க், கடந்த 2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தினப் பயங்கரவாதத் தாக்குதல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதியை கோரும் இலங்கையின் பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித்துடனான சந்திப்பு குறித்து பெருமிதமடைவதாக தெரிவித்துள்ளார்.
அதுமாத்திரமன்றி, இந்த மிலேச்சத்தனமான தாக்குதலின் முழுமையான பின்னணி குறித்து சுயாதீனமானதும் வெளிப்படைத்தன்மை வாய்ந்ததுமான விசாரணைகள் முன்னெடுக்கப்படவேண்டியதன் அவசியம் தொடர்பில் தாம் கலந்துரையாடியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.