எங்கள் தாய்நிலம் விடிவுறும் நாளே தமிழர் எமக்கு சுதந்திர நாள் என வடக்கு கிழக்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
வடக்கு கிழக்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் ஞாயிற்றுக்கிழமை (04) ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அவ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
சிறிலங்காவின் சுதந்திரநாளை கறுப்பு நாளாகப் பிரகடனப்படுத்தி வடக்கு கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களும், மக்கள் சமூக அமைப்புக்களும், தமிழ் மக்களுமாக இன்று 2024, பெப்ரவரி 4ஆம் திகதி பேரெழுச்சியாக நாம் ஒன்று திரண்டிருக்கின்றோம்.
ஈழத் தமிழர்களாகிய நாம் மரபு வழி தாயகம், தேசியம், தன்னாட்சி உரிமைக்கு உரித்துடைய ஒரு தேசிய இனம் என்பதை மீண்டும் உலகுக்கு பிரகடனப்படுத்துகின்றோம்.
வட்டுக்கோட்டைத் தீர்மானம், திம்பு கோட்பாடு, பொங்கு தமிழ் பிரகடனம் என்பவற்றின் ஊடாக வரலாற்றில் தமிழ் மக்களின் அபிலாசைகள் கூட்டாக பலமுறை வெளிப்படுத்தப்பட்ட போதிலும், ஈழத் தமிழர்களின் இனப்பிரச்சனைக்கு ஏற்றுக்கொள்ளக் கூடிய நிரந்தர அரசியல் தீர்வை காண்பதற்காக மீண்டும் ஒரு தடவை எமது ஏகோபித்த வெளிப்படுத்தலை வலியுறுத்திக்கூற வேண்டியதன் அவசியத்தை உணர்ந்து இன்று பேரெழுச்சியாக நமது தாயகத்தின் மட்டக்களப்பு, கிளிநொச்சியில் ஒன்று திரண்டு நிற்கின்றோம்.
தமிழ், சிங்கள தனித்தனி அரசுகளைக் கொண்டிருந்த இலங்கைத் தீவு காலனித்துவ ஆட்சியாளர்களின் நிர்வாகத் தேவையின் நிமிர்த்தம் இணைக்கப்பட்டது என்ற வரலாற்று உண்மையை முதலில் சிங்கள தேசம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
வரலாற்று நிகழ்வுகளை முற்றாக புறந்தள்ளி எண்ணிக்கையில் பெரும்பாண்மை அடிப்படையில் முழு நாட்டினதும் அதிகாரங்கள் சிங்கள தேசத்திடம் கையளிக்கப்பட்டமை என்பது ஈழத்தமிழினம் மீது தொடர்ச்சியான இன ஒடுக்குமுறைகளிற்கே வழிகோலியது என்பதோடு, சிறிலங்கா அரசு தமிழ் மக்களிடையே எழும் போராட்டங்கள் மற்றும் உரிமைக்கான குரல்களை இராணுவ பலம் கொண்டு நசுக்குவதிலும், சிங்கள வன்முறைக் கும்பல்களின் வெறியாட்டத்திற்கு அனுமதிப்பத்திரம் அளிப்பதிலுமே நம்பிக்கை கொண்டிருக்கின்றது.
சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் தனியான சுதந்திர தமிழின அரசை அமைப்பற்கான வட்டுக்கோட்டை தீர்மானத்திற்கு 1977 ஆம் ஆண்டு மக்கள் மகத்தான ஆணையை வழங்கி தங்கள் சுதந்திர வேட்கையை வெளிப்படுத்தியிருந்ததோடு, 1985ஆம் ஆண்டு திம்புப் பேச்சுவார்த்தையில் தமிழர்களின் தாயகம், தேசியம், சுயநிர்ணய உரிமை கோட்பாடு ஏற்றுக் கொள்ளப்பட்டமையும் தீர்வுக்கான வழிகளில் முன்னேற்றம் காணப்படாமையின் விளைவாகவே தமிழரிடம் ஆயுதப் போரட்டம் கருக்காண்டது என்பதும் இங்கு நோக்கத்தக்கது.
தமிழர் மீதான திட்டமிட்ட இனப்படுகொலைகளை கடந்த 75 ஆண்டுகளிற்கு மேலாக அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்த சிங்கள ஆட்சியாளர்களின் துணையோடு தமிழ் மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட, நிகழ்த்தப்பட்டுக்கொண்டிருக்கின்ற கட்டமைக்கப்பட்ட படுகொலைகள் 2009 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட அதியுயர் இனவழிப்பு படுகொலைகள் உட்பட மனித படுகொலைகள், நிலங்களை கையகப்படுத்துதல், பாலியல் வன்முறைகள், பண்பாட்டு மற்றும் பொருளாதார கட்டுமானங்களை அழித்தல் போன்ற வன்முறைகள் மூலம் தமிழ் மக்களுடைய தேசத்துக்கான தகுதிப்பாட்டை தாங்கிநிற்கும் அனைத்து விழுமியங்களும் அழித்தொழிக்கப்பட்டு கொண்டிருக்கின்றன என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும்.
தமிழ் மக்களிற்கான தீர்வு முயற்சிகள் யாவும் திம்புக் கோட்பாட்டினை அடியொற்றியே மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதோடு, தமிழ் மக்களினுடைய அபிலாசைகளை சிறிலங்காவின் ஒற்றையாட்சி அரசியலமைப்பின் பதின்மூன்றாம் (13ஆம்) திருத்தத்தினுள் முடக்க எத்தனிக்கும் அனைத்து முயற்சிகளையும் முற்றாக நிராகரிப்பதோடு, தமிழர் தேசிய இனப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வாக தமிழர்களை ஒரு தனித்த தேசமாக அவர்களின் பாரதீனப்படுத்தப்பட முடியாத சுயநிர்ணய உரிமை அங்கீகரிப்பது மட்டுமே மேலே குறிப்பிட்ட அனைத்து ஒடுக்கு முறைகளுக்கும் மீள நிகழாது இருப்பதை உறுதி செய்யும் என்பதை வலியுறுத்துகின்றோம்.
இவ்வாறானதொரு சூழ்நிலையில் பின்வரும், தமிழ் மக்களின் சமகால அடிப்படைச் சிங்கல்கள் தீர்க்கப்பட வேண்டும் என்பதை குறிப்பிட்டுக் கொள்கின்றோம்.
1. எமது உறவுகளை தேடும் உரிமை, கருத்துரிமை, பேச்சு உரிமை, வளங்களை அனுபவிக்கும் உரிமை, நீதி கோரும் உரிமை என்பன பயங்கரவாத தடைச் சட்டம், நிகழ் நிலை பாதுகாப்பு சட்டம் மற்றும் நிறைவேற்ற முன்மொழியப்பட்டுள்ள ஏனைய சட்டங்களால் மறுக்கப்படுகின்றது. ஆகவே இச்சட்டங்கள் மீளப்பெறப்பட வேண்டும்.
2. தொல்பொருட்த் திணைக்களம், வன அஜீவராசிகள் திணைக்களம். வனவள் பாதுகாப்பு திணைக்களம், மகாவலி அபிவிருத்தித் திணைக்களம் என்னும் போர்வையில் மேற்கொள்ளப்படும் அனைத்து வகையான நில அபகரிப்புத் திட்டங்களும் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்பதோடு, ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காணிகள் உரியவர்களிடம் மீள ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்ட வேண்டும்.
3. தமிழர் தாயகத்தின் நில ஒருமைப்பாட்டை சிதைக்கும் நோக்கில் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டுள்ள அனைத்து சிங்கள குடியேற்றங்களும் அகற்றப்பட வேண்டும்.
4. விடுவிக்கப்படாது எஞ்சியுள்ள ஏனைய தமிழ் அரசியல் கைதிகளும் நிபந்தனை இன்றி விடுதலை செய்யப்பட வேண்டும்.
5. வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் தொடர்பான அனைத்துலக விசாரணைகள் உடனடியாக ஆரம்பிக்கப்படுவதுடன் அவர்களுக்கு அனைத்துலக நீதி வழங்கப்படுவதோடு குற்றம் இழைத்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.
6. வடக்கு- கிழக்கு தமிழர் தாயகத்தில் தமிழ் இளையோர்கள் கூட்டாக சிந்திப்பதைத் தடுத்து உளவியல் ரீதியாக சிதறடிக்கும் நோக்கம் கொண்டு அரச படைகளின் ஆதரவுடன் முன்னெடுக்கப்படும் போதைப் பொருள் விநியோகம் உடனடியாக முடிவுக்குக் கொண்டு வரப்பட வேண்டும்.
7. பிராந்திய பண்பாட்டுப் பல்கலைக்கழகங்களாக விளங்கும் எமது யாழ்ப்பாண, கிழக்கு, வவுனியாப் பல்கலைக்கழகங்கள் பிராந்தியம் சார் அரசியல், சமூக, பொருளாதார, பண்பாட்டு அம்சங்களை மையமமாகக் கொண்டு செயற்படுதலையும் தமிழ் மாணவர்களின் கல்வி மற்றும் கல்வி சாரா செயற்பாடுகளில் அவர்களது வாய்ப்புக்களின் இருத்தலையும் உறுதி செய்ய வேண்டும்.
8. மனித உரிமை மீறல்கள் வெளிக்கொண்டுவரும் ஊடகவியலாளர்கள், திட்டமிட்ட இன அடக்குமுறைக்கு எதிராக போராட்டங்களை முன்னெடுத்து வரும் மாணவர்கள் மற்றும் மக்கள் சமூக செயற்பாட்டாளர்கள் மீதான அச்சுறுத்தல்கள் மற்றும் கைது செய்யப்படுதல் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.
9. தமிழ் மக்களின் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு ஏற்படுத்தப்படும் அனைத்து வகையான அச்சுறுத்தல்கள், தடைகளை முடிவுக்கு கொண்டு வரவும் நினைவு கூறும் உரிமையை உறுதி செய்யுமாறும் வேண்டுகின்றோம்.
10. கால காலமாக நடைபெற்று வரும் தமிழின அழிப்பிற்கு அனைத்துலக நீதி பொறிமுறை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம் (ICC) அனைத்துலக நீதிமன்றம் (ICJ) ஊடாக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு பரிகார நீதி வழங்கப்பட வேண்டும். அத்துடன் ஐக்கிய நாடுகள் அவையில் சிறப்பாக உருவாக்கப்பட்ட தீர்ப்பாயத்தின் பொறிமுறைகளும் அனுமதிக்கப்பட வேண்டும்.
11. தமிழினப் படுகொலையை நிகழ்த்தி தமிழர் தாயகத்தை ஆக்கிரமித்து தொடர்ந்தும் உரிமை மீறல்கள், சமூக விரோதச் செயல்களுக்கு பாதுகாப்பாக உள்ள இராணுவத்தினர் தமிழர் தாயகத்திலிருந்து அப்புறப்படுத்துவதுடன், மக்களின் செயற்பாடுகளில் தலையிடுவதையும் முற்றாக நிறுத்த வேண்டும்.
இலங்கையில் நிலையான அமைதி ஏற்படுவதற்கு ஈழத்தமிழரின் தேசிய இன பிரச்சனையில் மரபு வழி தாயகம், தமிழ்த் தேசியம், சுயநிர்ணய உரிமை என்ற அடிப்படையில் எட்டப்படும் எந்தவொரு அரசியல் தீர்வும் அனைத்துலக சமூகத்தால் ஒழுங்குபடுத்தப்பட்டு கண்காணிக்கப்படும் பொது வாக்கெடுப்பின் மூலம் தமிழ் மக்களின் ஆணை பெறப்பட வேண்டும் என்பதே எமது உறுதியான நிலைப்பாடாகும். அத்துடன் ஈழத் தமிழர்களின் தலைவிதியை ஈழத் தமிழர்களே தீர்மானித்து எம்மை நாமே ஆழக்கூடிய நிரந்தர தீர்வும் பொது வாக்கெடுப்பில் உள்வாங்கப்பட வேண்டும் என்பதை தமிழ் மக்கள் சார்பாக இந்த பிரகடனத்தின் ஊடாக உலகுக்கு அறிவிக்கின்றோம் என்றுள்ளது.