திருகோணமலை எண்ணெய் தாங்கி கட்டமைப்பை மீண்டும் செயற்படுத்தி தேசிய பொருளாதாரத்துடன் இணைப்பதற்கான துரித வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் மற்றும் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.
திருகோணமலை எண்ணெய் தாங்கிகள் வளாகம், இந்தியன் ஒயில் நிறுவன எண்ணெய் தாங்கிகள் மற்றும் களஞ்சிய முனையத்திற்கு நேற்று (03) கண்காணிப்பு விஜயத்தை மேற்கொண்டிருந்த போதே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.
பல தசாப்தங்களாக பயன்படுத்தப்படாத திருகோணமலை எண்ணெய் தாங்கிக் கட்டமைப்பை நவீனமயப்படுத்தி, திருகோணமலை அபிவிருத்தி வேலைத்திட்டத்தை துரிதப்படுத்த வேண்டியதன் அவசியத்தையம் ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
திருகோணமலை இந்தியன் ஒயில் நிறுவனத்தின் எண்ணெய் தாங்கிகள் மற்றும் களஞ்சிய முனையத்திற்கு வருகை தந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை IOC முகாமைத்துவ பணிப்பாளர் மனோஜ் குப்தா வரவேற்றதுடன், இந்தியன் ஒயில் நிறுவனத்தின் மசகு எண்ணெய் கலக்கும் ஆலையையும் ஜனாதிபதி பார்வையிட்டுள்ளார்.
எண்ணெய் களஞ்சிய முனையத்தில் அமைந்துள்ள அதிநவீன ஆய்வுக்கூடத்திற்கு விஜயம் செய்த ஜனாதிபதி, அதன் செயற்பாடுகளை பார்வையிட்டதுடன், அண்மையில் மேம்படுத்தப்பட்டு ஆரம்பிக்கப்பட்ட இலங்கையின் முதலாவது உள்நாட்டு கிரீஸ் உற்பத்தி ஆலையையும் பார்வையிட்டதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
வருடாந்தம் 3,000 மெட்ரிக் தொன் கொள்ளளவைக் கொண்ட இந்த கிரீஸ் உற்பத்தி ஆலையானது நாட்டின் மொத்த கிரீஸ் தேவையையும் பூர்த்தி செய்யும் என்பதோடு, தற்போது கிரீஸ் இறக்குமதிக்காக செலவிடப்படும் அந்நியச்செலாவணியை சேமிக்கும் திறனையும் கொண்டுள்ளது.
இதேவேளை, நாட்டின் நெருக்கடியான காலப்பகுதியில் நாட்டிற்கான எரிபொருள் விநியோகத்தை வினைத்திறனாக முன்னெடுத்துச் செல்ல இந்தியன் ஒயில் நிறுவனம் மேற்கொண்ட அர்ப்பணிப்பை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதன்போது பாராட்டியமை குறிப்பிடத்தக்கது.