முப்படையினரும் , பொலிஸாரும் இலங்கையில் தமிழினப்படுகொலையை மேற்கொண்டதாக தெரிவித்துள்ள கருத்தை கனேடியப் பிரதமர் மீளப் பெற வேண்டும். இவ்விடயத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஏன் மௌனம் காக்கின்றார்? என காலி முகத்திடல் மக்கள் அமைப்பு கேள்வியெழுப்பியுள்ளது.
கனேடிய பிரதமரின் கருத்துக்கு எதிர்ப்பினை வெளியிட்டு காலி முகத்திடல் மக்கள் அமைப்பு திங்கட்கிழமை (22) கொழும்பிலுள்ள கனடா உயர்ஸ்தானிகராலயத்திற்கு முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதோடு , கடிதமொன்றையும் கையளித்திருந்தது.
இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட் காலி முகத்திடல் மக்கள் அமைப்பின் உறுப்பினர் பலங்கொட கஸ்வத்த தேரர்,
இலங்கையில் முப்படையினர் மற்றும் பொலிஸார் இணைந்து தமிழ் இனப் படுகொலை செய்துள்ளனர் என கனேடிய பிரதமர் தெரிவித்திருந்தார். இவ்வாறான கருத்துக்கு வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் பதிலளிக்க வேண்டியதில்லை. மாறாக ஜனாதிபதியும் , பிரதமரும் நேரடியாக அரசாங்கத்தின் நிலைப்பாட்டை அறிவித்திருக்க வேண்டும்.
கனேடிய பிரதமரின் ஆதரமற்ற கருத்துக்களை நாம் முற்றாக எதிர்க்கின்றோம். எமது எதிர்ப்பினை வெளிப்படுத்துவதற்காகவே இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளோம். இலங்கையில் விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட யுத்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் கனடா அறியாத பல தகவல்களை நாம் இந்தக் கடிதத்தில் உள்ளடக்கியுள்ளோம்.
தளதா மாளிகை மீதான தாக்குதல்கள் , ஸ்ரீமகா போதி தாக்குதல் உள்ளிட்ட தாக்குதல்களால் இலட்சக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர். அந்த சந்தர்ப்பத்தில் தமது குடும்பத்தினரைப் பாதுகாத்துக் கொள்வதற்காக குடும்ப அங்கத்தவர்கள் வெவ்வேறு பேரூந்துகளில் பயணிக்க வேண்டிய நிலைமை காணப்பட்டது.
இவ்வாறு முன்னெடுக்கப்பட்ட தாக்குதல்களின் காரணமாக எமக்கும் பதில் தாக்குதல்களை நடத்த வேண்டியேற்பட்டது. இறுதியில் அனைத்து இன மக்களும் அழிவை எதிர்கொண்டனர். இவற்றை ஜனாதிபதியும் , பிரதமரும் கனடாவுக்கு தெளிவுபடுத்த வேண்டும். இவ்விடயத்தில் ஜனாதிபதி ஏன் அமைதி காக்கின்றார்?
சிங்கள பௌத்த மக்களை இனவாதிகளெனக் குறிப்பிட்டு , எமக்கு கருத்துக்களை வெளிப்படுத்துவதற்கான சுதந்திரத்தை மறுக்கின்றனர். ஜனாதிபதியும் , பிரதமரும் இது குறித்து தமது நிலைப்பாட்டை அறிவிக்காவிட்டால் நாம் ஒவ்வொரு கிராமங்களுக்கும் சென்று உரிய நடவடிக்கைகளை எடுப்போம். எனவே கனேடிய பிரதமர் வெளியிட்ட கருத்துக்களை உடனடியாக மீளப்பெற வேண்டும் என்றார்.