கருவின் தலைமையில் எதிர்க்கட்சிகள் முக்கிய பேச்சு! – தமிழரசுக் கட்சியும் பங்கேற்பு

நாட்டின் பொருளாதாரம் பாரிய வீழ்ச்சியடைந்துள்ள நிலையில் அதனைச் செய்வது தொடர்பிலும், பலமிக்க மாற்று அரசியல் சக்தியை உருவாக்குவது குறித்தும் இன்று பல எதிர்க்கட்சிகள் முக்கிய சந்திப்பில் ஈடுபட்டன.

முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரியவின் தலைமையில் கொழும்பிலுள்ள ஜானகி ஹோட்டலில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.

இதில் கலந்துகொள்ள அனைத்து எதிர்க்கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.

தமிழர் தரப்பிலுள்ள ஒவ்வொரு கட்சிகளுக்கும் தனித்தனியாக அழைப்பு அனுப்பப்பட்டது. எனினும், இந்தக் கூட்டத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சார்பில் அதன் தலைவர் மாவை சேனாதிராஜாவும், பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரனும் கலந்துகொண்டனர். தமிழ் முற்போக்குக் கூட்டணி சார்பில் அதன் தலைவர் மனோ கணேசன் உள்ளிட்ட பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

ரெலோ, புளொட், தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஆகிய கட்சிகளின் பிரதிநிதிகள் எவரும் சந்திப்பில் பங்கேற்கவில்லை.

ஆனால், சந்திப்புக்கு ஆதரவு தெரிவித்து குறித்த கட்சிகளின் தலைவர்கள் கடிதம் அனுப்பியிருந்தனர்.

இதேவேளை, இன்றைய சந்திப்பில் எதிர்க்கட்சித் தலைவரான ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ பங்கேற்றிருந்த போதிலும், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க பங்கேற்கவில்லை.

சந்திப்புக்கான ரணிலின் ஆதரவுக் கடிதத்துடன் அவரின் பிரதிநிதி ஒருவர் கலந்துகொண்டார்.