சுயநிர்ணய உரிமை, உண்மை, நீதி மற்றும் பொறுப்புக்கூறல் ஆகியவற்றிற்கான தமிழர்களின் போராட்டத்திற்கும் தொடர்ந்தும் ஆதரவளிப்பதாக பிரித்தானிய எதிர்க்கட்சித் தலைவர் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்.
தைப் பொங்கலை முன்னிட்டு பிரித்தானிய தமிழ் சமூகத்திற்கு வாழ்த்து தெரிவித்துள்ள அவர், எமது நாட்டின் சமூக, பொருளாதார மற்றும் கலாசார கட்டமைப்பிற்கு அவர்கள் ஆற்றிய பல பங்களிப்புகளையும் அவர் நினைவுகூர்ந்துள்ளார்.
கல்வி, மருத்துவம், வணிகம், கலை, இலக்கியம் மற்றும் விஞ்ஞானம் ஆகிய துறைகளில் அவர்களின் பங்களிப்புகள் தமிழ் சமூகத்தையும் நாட்டையும் வலிமையாக்கியுள்ளதாகவும் உலகம் முழுவதிலுமிருந்து வந்துள்ள தமிழ் மாணவர்களின் கடின உழைப்புக்கு வாழ்த்தும் தெரிவித்துள்ளார்.
மேலும் இலங்கையில் சுயநிர்ணயம், சமாதானம் மற்றும் நீதிக்காக தமிழ் மக்கள் ஆற்றிய தியாகங்களை நாம் நினைவுகூர வேண்டிய தருணமும் இது என்றும் பிரித்தானிய எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.
நீதி, பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கத்தை ஆதரிப்பதில் இலங்கை அரசாங்கம் இனியும் தாமதிக்காது என்பதை உறுதிசெய்ய தொழிற்கட்சி தொடர்ந்து அழுத்தத்தை பிரயோகிக்கும் என்றும் பிரித்தானிய எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.