விடுதலைப்புலிகள் பயங்கரவாதிகள் அல்லர்: இனப்படுகொலைக்கு எதிரான முஸ்லீம்கள் (MAG-SL) அறிக்கை –
இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலை யுத்தம் இடம்பெற்று 14 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில் தாயகம் மற்றும் உலகமெங்கிலுமுள்ள தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட தமது உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அத்துடன் மே 18 ஆம் திகதியை இனப்படுகொலை தினமாக பிரகடனம் செய்து, நீதி தேடும் முயற்சியில் பலவழிகளில் போராடிவருகின்றர்.
இதே போல பிரித்தானியாவை தளமாக கொண்டு இயங்கும் இனப்படுகொலையை தடுப்பதற்கும் தண்டிப்பதற்குமான சர்வதேச மையமும் (ICPPG) பன்முகப்பட்ட முயற்சிகளை எடுத்து வருகின்றது. இவ்வாறான முயற்சிகளில் ஒன்றாக, தமிழரல்லாத வேற்று இன மக்களுக்கு, இலங்கையில் ஈழத்தமிழருக்கு எதிராக இடம்பெறுவது இனப்படுகொலையே என்பதையும், ஈழத்தமிழரின் விடுதலைப்போராட்டத்தின் நியாயப்பாட்டையும் உணர்த்தி, அவர்களின் ஆதரவை திரட்டும் பணியையும் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த அடிப்படையில், கடந்த முள்ளிவாய்க்கால் நினைவு நாளில், ஈழத்தமிழர்களுக்கு ஆதரவான பிரித்தானியா வாழ் முஸ்லீம் மக்களை ஒன்றுதிரட்டி, “இலங்கையில் இனப்படுகொலைக்கு எதிரான முஸ்லீம்கள்” [Muslims Against Genocide in Sri Lanka (MAG-SL)] என்ற அமைப்பை ஆரம்பித்துவைத்து, ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக களமிறக்கியுள்ளனர்.
18ம் திகதி தமிழர்களால் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டதையடுத்து, 19ம் திகதி, இந்த அமைப்பை சேர்ந்த முஸ்லீம் மக்களின் பிரதிநிதிகள் ஒன்றிணைந்து, பிரித்தானியா மற்றும்
வெளிநாடுகளில் வாழும் பாதிக்கப்பட்ட தமிழ் மற்றும் தமிழ் பேசும் முஸ்லிம்களின் சார்பாக, பிரித்தானிய பிரதமருக்கு மனு ஒன்றை கையளித்துள்ளனர்.
அந்த மனுவின் சாராம்சம் வருமாறு;
“இலங்கையில் இனப்படுகொலைக்கு எதிரான முஸ்லீம்கள் (MAG-SL)” என்ற இந்த அமைப்பானது இலங்கையில் வாழும் தமிழர்கள் மற்றும் முஸ்லிம்களுக்கு எதிராக, சிங்கள-பெளத்த பேரினவாத இலங்கை அரசால் நடாத்தப்படும் திட்டமிட்ட மனித உரிமை மீறல்களை வெளிக்கொணரவும், தடுப்பதற்கும், அதற்கான நீதி தேடுவதற்குமாக, தமிழ் பேசும் முஸ்லிம்களால் உருவாக்கப்பட்ட மனித உரிமைகள் அமைப்பு ஆகும். தொடர்ந்து ஆட்சியில் இருக்கும் சிங்கள-பெளத்த பேரினவாத அரசாங்கங்கள், தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகங்களை இல்லாதொழித்து, இலங்கையை தனித்த பௌத்த-சிங்கள நாடாக உருவாக்கும் தமது தீவிரவாத நிகழ்ச்சி நிரலை நிறைவேற்றுவதற்காக, தொடர்ந்து கேவலமான சதிகளையும் தந்திரங்களையும் மேற்கொண்டு, தமிழ் மற்றும் முஸ்லீம் மக்களிடையே முரண்பாடுகளை உருவாக்கி வருகின்றது. கிழக்கு மாகாணத்தில் இடம்பெற்ற படுகொலைகள் மற்றும் யாழ்ப்பாணத்தில் இருந்து முஸ்லீம்கள் வெளியேற்றப்பட்ட சம்பவம் என்பன இதற்கு நல்ல உதாரணங்கள் ஆகும்.
காத்தான்குடி பள்ளிவாசல் மற்றும் பள்ளியத்திடல் போன்ற இடங்களில் சிங்கள காடையர்களை வைத்து இலங்கை அரசே அப்பாவி முஸ்லீம் மக்களை படுகொலை செய்ததுக்கு எங்களில் பலர் கண்கண்ட சாட்சியாவோம். ஆயினும் திட்டமிட்டே விடுதலைப்புலிகள் மீது இந்த வீண்பழி சுமத்தப்பட்டு, தமிழ் முஸ்லீம் மக்களிடையே ஆறாத வடு உருவாக்கப்பட்டது. இது போலவே, யாழ்ப்பாணத்தில் இருந்த முஸ்லீம் மக்களிடையே தீவிரவாத குழு ஒன்றை ஊடுருவச்செய்து, ஆயுதங்கள் வெடிபொருட்களை வழங்கி, பெரும் மதக்கலவரத்தை திட்டமிட்டது இலங்கை அரசு. தகவல் அறிந்த விடுதலைப்புலிகள் சில மசூதிகளில் மறைத்து வைத்திருந்த ஆயுதங்கள் வெடிபொருட்களை கையும் களவுமாக கைப்பற்றினர். எனினும் வெடிபொருட்களை முழுமையாக மீட்க முடியாமையாலும், யாழ் முஸ்லீம் மக்களிடையே குற்றவாளிகளை மட்டும் இனங்காண முடியாமல்போன காரணத்தாலும், நடக்கவிருந்த பெரும் இரத்தக்களரியை தவிர்ப்பதற்காக, வேறுவழியி்ன்றி குறுகிய கால அவகாசத்தில் முஸ்லிம் மக்களை வெளியேற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
விடுதலைப்புலிகள் அந்த இக்கட்டான நிலையில் எடுத்த இந்த மிகவும் சாதுரியமான தந்திரோபாய முடிவு உண்மையில் பாராட்டப்பட வேண்டியதாகும். ஆனால் இதனை ‘இனச்சுத்திகரிப்பு’ என இலங்கை அரசு பொய்ப்பிரச்சாரம் செய்கிறது. விடுதலைப்புலிகள் எடுத்த இந்த முடிவால் பெரும் மதக்கலவரம் தடுக்கப்பட்டு, பல ஆயிரம் உயிர்கள் காப்பாற்றப்பட்டன. முஸ்லீம் மக்கள் வெளியேற்றப்பட்ட போதும், விடுதலைப்புலிகளால் யாரும் கொல்லப்படவில்லை, அவர்கள் மீது வன்முறை பிரயோகிக்கப்படவில்லை, அவர்கள் சொத்துக்கள் சூறையாடப்படவில்லை. அவர்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதியின் படி, சமாதான பேச்சு காலப்பகுதியில் அவர்கள் மீள அழைக்கப்பட்டு, அவர்கள் காணிகள் திரும்ப வழங்கப்பட்டு, மீள குடியேற அனுமதிக்கப்பட்டார்கள். அத்துடன்,
விடுதலைப்புலிகளின் தலைவர் முஸ்லீம் தலைமை உரிய மரியாதையுடன் அழைத்து, பேசியதுடன், இதற்கு பகிரங்க மன்னிப்பும் கேட்டது.
இது அவர்களின் நேர்மைக்கும் பெருத்தன்மைக்கும் எடுத்துக்காட்டு. விடுதலைப்புலிகள் பயங்கரவாதிகள் அல்லர். அவர்கள் போராட்டம் நியாயமானது. அவர்கள் ஒழுக்கத்துடனும் நேர்மையுடனும் போரிட்டார்கள். அவர்கள் என்றும் முஸ்லிம்களுக்கு எதிராக செயற்பட்டது இல்லை. அமையவிருந்த தமிழீழத்தில் முஸ்லீம்களுக்கு சம உரிமை உத்தரவாதமளிக்கப்பட்டிருந்தது. இந்த உண்மைகள் திட்டமிட்டு மறைக்கப்பட்டு, அப்பாவி முஸ்லீம் சிங்கள மக்கள் மற்றும் உலகநாடுகள் விடுதலைப் புலிகள் பயங்கரவாதிகள் என தவறாக நம்பவைக்கப்பட்டுள்ளனர். இந்த உண்மைகளை அப்பலப்படுத்தி, ஆதாரங்களுடன் நிரூபிக்கவும்
MAG-SL அமைப்பு உறுதி பூண்டுள்ளது.
இவ்வாறு உண்மைகளை வெளிக்கொண்டுவருவதன் மூலம், இலங்கையில் வாழும் தமிழ் முஸ்லிம் மக்களிடையேயான முரண்பாடுகளை விலக்கி, புரிந்துணர்வை ஏற்படுத்தி, ஒற்றுமையை வலுப்படுத்த MAG-SL அமைப்பு கடுமையாக பாடுபடும். தமிழர்களும் முஸ்லீம்களும் சகோதர சகோதரிகளே. இலங்கையில் முஸ்லீம் மக்கள் பேசுவது தமிழ் மொழியே. இதனால் எமது உறவு பிரிக்கமுடியாதது. கோவிட் காலத்தில் ஐனசா நல்லடக்கம் தடுக்கப்பட்டு எமது அடிப்படை மனித உரிமை மீறப்பட்டபோது தமிழ் மக்களே எமக்கு ஆதரவாக போராடினார்கள். அதுபோல, ஈஸ்டர் குண்டுவெடிப்பில் முஸ்லீம்கள் மீது வீண்பழி சுமந்தப்பட்ட போதும் தமிழர்களே எமக்காக குரல்கொடுத்தார்கள். இனிமேலும், சிங்கள-பெளத்த பேரினவாத அரசின் சதிக்கு பலிக்கடாவாக இடம்கொடுக்க மாட்டோம்.
அல்லாஹ்வின் வழியில் செல்லும் விசுவாசி பற்றி குர்ஆனில் அல்லாஹ் தெளிவாக கூறப்பட்டுள்ளது. உண்மையான முஃமின்கள் யார் (23ம் அத்தியாயம்) நன்மையைக் கொண்டே தீமையைத் தடுத்துக் கொள்வார்கள் (அல்குர்ஆன் 13:22). பொய் சாட்சி சொல்லமாட்டார்கள் (அல்குர்ஆன் 25:72). எந்த உண்மையான முஸ்லீமும் இலங்கை அரசின் இரத்தவெறிக்கு உடந்தையாக மாட்டார்கள். அல்லாஹ் காட்டிய வழியில், பாதிக்கப்பட்ட ஈழத்தமிழருக்கு நன்மை செய்தன் மூலம் இலங்கை அரசின் தீமையை தடுப்போம். பொய்சாட்சி சொல்வதன் மூலம் காப்பாற்றமாட்டோம்.
அந்த வழியில், உண்மையாக தமிழர்களின் நீதிக்கான போராட்டத்தில் உறுதுணையாக இருப்போம். அவர்களின் சுதந்திர தமிழீழ நாடு என்ற இலட்சியத்தை முழுமையாக ஆதரிப்போம்” என்றும் இந்த மனுவின் அறிமுகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் பின்வரும் 5 கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன:
(1) இலங்கையில் ஈழத்தமிழர்களுக்கு எதிராக இடம்பெற்றது/இடம்பெற்றுக்கொண்டிருப்பது “இனப்படுகொலை” (Genocide) என்பதை பிரித்தானிய அரசு உத்தியோகபூர்வமாக ஏற்றுக்கொள்ள வேண்டும்.
(2) இனப்படுகொலையால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கான நீதி வழங்கும் பொறுப்பை பிரித்தானியாவே முன்னெடுக்க வேண்டும்.
(3) அதன் முதல்படியாக, யுத்த குற்றவாளிகளான ஜெனரல் சவேந்திரசில்வா உட்பட்ட இலங்கை அதிகாரிகள் மீது பிரித்தானியா தடைவிதிக்க வேண்டும்.
(4) இலங்கையில் வாழும் தமிழ்மக்களின் தாயகபகுதி “தமிழீழம்” என்பது அங்கீகரிக்கப்பட வேண்டும்.
(5) இலங்கையில் தமிழ் மக்கள் தமது சுயநிர்ணய உரிமையின் படி தமது தலைவிதியை தாமே நிர்ணயிக்க பொதுவாக்கெடுப்பு நடாத்தப்பட வேண்டும்.
இந்த மனுவை, ICPPG மற்றும் MAG-SL அமைப்புக்களின் இணைப்பாளரான விதுரா விவேகானந்தன், MAG-SL அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்களான முகமத் லாபிர் முகமத் ரோஷன், நிரபாஸ் முகமத் நாவ்பெர், ஷாவ்உள் ஹமீது ரோஷன் கான் , சம்சுதீபன் முகமத் சபைக்கு அபிரீன் முகமத், தூஉங் பாரூக் முகமத் ரிஸ்மி ஆகியோர் பிரதமர் அலுவலகத்தில் நேரில் சென்று சமர்ப்பித்தனர்.