தமிழ் கட்சிகளின் கடிதத்தை மோடி சாதகமாக பரிசீலித்த பின்னரே ரணிலிடம் 13ஐ குறிப்பிட்டுள்ளார் – த.சித்தார்த்தன்

தமிழ் தேசிய கூட்டமைப்பும், தமிழ் மக்கள் கூட்டணியும் இணைந்து அனுப்பிய கடிதத்தை இந்திய பிரதமர் சாதகமாக பரிசீலித்துள்ளார். எமது கடிதத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்களையே, இலங்கை ஜனாதிபதியிடம் வலியுறுத்தியுள்ளார் என தெரிவித்துள்ளார் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக்கட்சி தலைவரான த.சித்தார்த்தன்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“தமிழ் மக்கள் மிக நீண்டகாலமாக சமஸ்டி அமைப்புக்கே வாக்களித்துள்ளனர். தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை முழுமையாக அடைவதே எமது இறுதி இலக்கு. அதற்கு இந்தியாவின் அனுசரணை எமக்கு தேவையென்பதை கடிதத்தில் குறிப்பிட்டுள்ளோம்.

இந்த பயணத்தில் முதல்படியாக, 13வது திருத்தத்தை உடனடியாக- முழுமையாக அமுல்ப்படுத்த வேண்டுமென இந்திய பிரதமருக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பும், தமிழ் மக்கள் கூட்டணியும் இணைந்து கடிதம் அனுப்பியிருந்தன.

எமது கடிதத்தில் உள்ளடக்கப்பட்டிருந்த விடயங்களை, இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடனான கலந்துரையாடலில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தி கூறியுள்ளர்.

தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை நிறைவேற்றி, 13வது திருத்தத்தை முழுமையாக அமுல்ப்படுத்த வேண்டுமென நரேந்திர மோடி வலயுறுத்தியுள்ளார்.

எமது கடிதத்தை இந்திய பிரதமர் சாதகமாக பரிசீலித்துள்ளார்“ என்றார்.

13வது திருத்தத்தை முழுமையாக அமுல்ப்படுத்தும்படி தமிழ் தேசிய கூட்டமைப்பும், தமிழ் மக்கள் கூட்டணியும் கடிதம் அனுப்பியிருந்தன. 13வது திருத்ததை எதிர்த்து தமிழ் தேசிய மக்கள் முன்னணி கடிதம் அனுப்பியிருந்தது. 13வது திருத்தத்தை கோர மாட்டோம் என தெரிவித்த இலங்கை தமிழ் அரசு கட்சியும் ஒரு கடிதம் அனுப்பியிருந்தது.