தமிழ் தரப்பின் பேரம் அதிகமாகவுள்ள நேரம்; பயன்படுத்தும் உபாயம் எம்மிடம் உள்ளதா? | அரசியல் ஆய்வாளர் நிலாந்தன்

தமிழ் தரப்பின் பேரம்: பயன்படுத்தும் உபாயம் எம்மிடம் உள்ளதா?

நெருக்கடியான ஒரு காலகட்டத்தில் இலங்கையின் பிரதமராக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்றுள்ளார். இந்த நிலையில் முதல் முறையாக கொழும்பிலும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நடைபெற்றிருக்கின்றது. இவை தொடர்பாக அரசியல் ஆய்வாளரும் எழுத்தாளருமான நிலாந்தன் உயிரோடைத் தமிழின் தாயகக் களம் நிகழ்வில் கலந்துகொண்டு தெரிவித்த கருத்துக்களின் முக்கியமான பகுதிகளை இலக்கு வாசகர்களுக்கு தருகின்றோம்.

கேள்வி:
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நேற்று அமைதியான முறையில் இடம்பெற்றது. வழமையான கெடுபிடிகள் இல்லாமல் இம்முறை நினைவேந்தலுக்கு அனுமதி வழங்கப்பட்டமைக்கு காரணம் என்ன?

பதில்:
பொதுவாக ரணில் விக்கிரமசிங்கவின் காலத்தில் ஜனநாயக வெளி ஒப்பீட்டளவில் அதிகமாக இருக்கும். ஏனெனில் அவர் மேற்கு நாடுகளின் ஜனநாயக – லிபரல் பண்புகளினூடாக வந்தவர். தவிர அவர் மேற்கு நாடுகளுக்கு பதில் கூறவேண்டியவராகவும் காணப்படுகின்றார். அந்த அகையில் அவர் எப்போதும் தனது ஆட்சிக்காலத்தில் நினைவுகூருதலுக்கான வெளியை அனேகமாக அனுமதித்தே வந்திருக்கின்றார். தவிர – கோட்டா கோ கமவில் போராடிக்கொண்டிருக்கும் இளைய தலைமுறையை போராடலாம் என அனுமதித்ததன் மூலம் – இந்த நினைவுகூரலையும் அனுமதிக்க வேண்டிய ஒரு தேவை இருந்தது. ஆனால், இவ்வாறான நினைவுகூரல்களை ரணில் விக்கிரமசிங்க தடுப்பதில்லை.

கேள்வி:
ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ச இருக்கின்ற போதிலும் கூட அவருக்கு மேலாக அதிகாரத்தைச் செலுத்தும் நிலையில் ரணில் விக்கிரமசிங்க இருக்கின்றார் என இதனைக் கருதமுடியுமா?

பதில்:
அப்டிக் கருதமுடியாது. ஏனெனில் பிரதி சபாநாயகர் தெரிவில் ரணிலுக்கு இருக்கும் வரையறைகளை மொட்டுக்கட்சி உணர்த்தியிருக்கின்றது. இது கோட்டாபயவும் சேர்ந்து எடுத்த முடிவு. ரணிலைத் தெரிவு செய்தது கோட்டாபயதான். ரணிலைத் தெரிவு செய்ததன் மூலம் கோட்டாபய தன்னைத் தற்காத்துக் கொண்டு விட்டார். குடும்பத்தைக் காப்பாற்றிக் கொண்டு விட்டார். குடும்பத்தினர் அச்சமின்றி நாடாளுமன்றத்துக்கு வரக்கூடிய ஒரு நிலையை ஏற்படுத்தியிருக்கின்றார்.

இந்த நிலையில் நாட்டு மக்களினதும், உலகத்தினதும் குவிமையமாக ரணில் இருக்கின்றார். கோட்டா கோ கமவில் கோட்டாபய வீட்டுக்குச் செல்லவேண்டும் என்பதைத்தான் வலியுறுத்துகின்றார்கள். ஆனால் அவர் இன்னும் போகவில்லை. இது அவருக்கு ஒரு வெற்றி. எதிர்காலத்தில் அவர் சிலசமயம் போகவேண்டிவரலாம். தான் போகாமல் ரணிலை அவர் தெரிவு செய்திருக்கின்றார். இதில் இருவரும் சேர்ந்துதான் இயங்க முடியும். ஏனெனில் எந்தெந்த விடயங்களில் உலக சமூகத்தின் கவனத்தைக் கவரலாம். எந்தெந்த விசயங்களில் மேற்கு நாடுகளுக்கு – இந்தியாவுக்கு சார்பாக நடந்துகொள்ளலாம். எந்தெந்த விடயங்களில் உள்நாட்டில் இருக்கக்கூடிய சமூகங்களின் அதிருப்தியை சம்பாதிக்காமல் செயற்படலாம் போன்ற விடயங்களில் கடந்த இரண்டு வருடத்தில் கற்றுக்கொண்ட பாடங்களின் அடிப்படையில் கோட்டாபய செயற்படலாம்.

கேள்வி:
கொழும்பிலும், கோட்டா கோ கம அரங்கிலும் முதல் முறையாக முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் இடம்பெற்றது. மூவின மக்களும் இதில் கலந்து கொண்டிருந்தார்கள். சிங்கள மக்களும் தமிழர்களின் பிரச்சினைகளை புரிந்து கொள்ள இது எந்த வகையிலாவது உதவுமா?

பதில்:
அது ஏதோ ஒருவகையில் உதவும்தான். குறிப்பாக முள்ளிவாய்க்கால் கஞ்சியை அங்கே தயாரித்து பகிர்ந்தமை ஒரு நல்ல விசயம். இறுதிக்கட்டப்போரில் தமிழ் மக்கள் பட்ட துன்பங்களை அவர்கள் உணர்கின்றார்கள். பகிர்ந்துகொள்ள முற்படுகின்றார்கள் என்பதனை அது ஒரு குறியீடாகக் காட்டுகின்றது. அந்தவகையில் இந்த கஞ்சி அங்கு சமைத்து பரிமாறப்பட்டமையை நாம் வரவேற்க வேண்டும். அது நல்ல மாற்றம். இது முதலாவது.

இரண்டாவது, நினைவுகூர்தல். நினைவுகூர்தல் குறித்து அவர்கள் முகநூலில் போட்ட பதிவுகள் மற்றும் அது குறித்து வெளிவந்த செய்திகளின் அடிப்படையில் பார்த்தால் – மே 18 இல் கொல்லப்பட்ட எல்லோருக்குமான நினைவுகூர்தல் என்ற தொனி வருகின்றது. அவர்கள் அங்கு பேசும்போது தமிழ் மக்கள் என்று கூறுகின்றார்கள். ஆனால், இனப்படுகொலையை நினைவுகூர்தல் என்று சொல்லப்படவில்லை. அவர்கள் அங்கு காட்சிப்படுத்திய பனரில் மே 18 இல் கொல்லபட்டவர்கள் என்ற வாசகம்தான் உள்ளது. மே 18 இல் கொல்லப்பட்டவர்கள் என்று பார்த்தால் தமிழ் மக்கள், போராளிகள் மற்றது சிங்கள சிப்பாய்கள். எல்லோரையும் பொதுவாக நினைவுகூரும் ஒரு வாசகமாக அது காணப்படுகின்றது.

இதில் தமிழ் மக்களுக்கு ஒரு சிக்கல் இருக்கின்றது. தமிழ் மக்கள் இதனை ஒரு இனப்படுகொலை நாளாக நினைவு கூருகின்றார்கள். இனப்படுகொலை நாளென்பது இனப்படுகொலை புரிந்தவர்களுக்கு எதிராக நீதியைக்கோரும் ஒரு போராட்டத்தின் பிரிக்கப்படமுடியாத ஒரு பகுதி. இதனை சிங்கள மக்கள் இனப்படுகொலையாகப் பார்க்கின்றார்களா? போர்க்குற்றமாகப் பார்க்கின்றார்களா? அல்லது யுத்த வெற்றியாகப் பார்க்கின்றார்களா என்பது முக்கியமான கேள்வி. சிங்கள மக்களும், சிங்கள அரசாங்கமும் கடந்த 12 வருடங்களாக இதனை ஒரு யுத்த வெற்றியாத்தான் கொண்டாடி வந்துள்ளார்கள். அப்படியான நிலையில் இது ஒரு நினைவுகூரலாக அனுஸ்டிக்கப்பட்டமை ஒரு பெரிய மாற்றம்.

வெற்றிக் கொண்டாட்டத்தை நடத்திய சிங்கள மக்கள் விளக்கேற்றி அஞ்சலி செலுத்துவது முக்கிய மாற்றம்தான். ஆனால், இனப்படுகொலை புரிந்தவர்களும், இனப்படுகொலைக்கு உள்ளானவர்களும் ஒன்றாக இருந்து நினைவுகூர முடியுமா என்ற கேள்வி உள்ளது. இனப்படுகொலைக்கு உள்ளானவர்களுக்கு நீதி கிடைக்கும் ஒரு நிலையில்தான் அது சாத்தியம். இல்லையெனில் – அது வெறும் சடங்காக மட்டும்தான் இருக்கும். ஆனால், இதனை ஒரு ஆரம்பமாகக் கருதலாம்.

கேள்வி:
இந்த நிலைமைகளை கையாள்வது தொடர்பில் தமிழ்க் கட்சிகளின் உபாயங்கள் எவ்வாறுள்ளது?

பதில்:
தென்னிலங்கையில் உருவாகியுள்ள குழப்பங்களைக் கையாள்வது தொடர்பில் தமிழ்க் கட்சிகளிடையே தெளிவானதொரு மூலோபாயம் இல்லை. குறிப்பாக 45 நாட்களாக இந்தப் போராட்டம் தொடர்கின்ற போதிலும், பொருத்தமான அணகுமுறை ஒன்று தமிழ்க் கட்சிகளிடம் இல்லை. முதலாவது இதனை ஒரு முக்கியமான விடயமாக அவர்கள் கருதவில்லை. கருதினாலும், அதனை அணுகவேண்டும் என்பதையிட்டோ எவ்வாறு அணுகலாம் என்பதையிட்டோ அவர்களிடம் கருத்துக்கள் எதுவும் இல்லை.

எம்மை நாம் ஒரு தேசமாகக் கருதி அதற்கான ஒரு வெளியுறவுக் கொள்கையின் அடிப்படையில் பார்ப்போமாக இருந்தால், நான்கு பரப்புக்களை நாம் அடையாளம் காணலாம். முதலாவது – நாடாளுமன்றம். இரண்டாவது – கோட்டா கோ கம போன்றவற்றில் போராடும் ஒரு புதிய தலைமுறை. மூன்றாவது தரப்பு – மகாசங்கம். அது ஒரு தீர்மானிக்கும் சக்தியாக இருக்கின்றது. நான்காவது தரப்பு – இந்த அரசாங்கத்தை பிணை எடுக்க முற்படும் வெளித்தரப்புக்கள். இந்த நான்கு தரப்புக்களையும் தமிழ்த் தரப்புக்கள் தனித்தனியாக அணுகவேண்டும்.

@24Tamil News

இலங்கையை பாதுகாக்க முற்படும் வெளித்தரப்புக்களான சர்வதேச நாணய நிதியம், அமெரிக்கா, ஜப்பான், ஐரோப்பிய ஒன்றியம், இந்தியா போன்றவற்றுடன் தமிழ்த் தரப்புக்கள் பேச வேண்டும். உதவியையும் தமிழ் மக்களுக்கான நீதியையும் பிரிக்க முடியாதவாறு பிணையுங்கள் எனக் கேட்கவேண்டும். அரசாங்கத்துக்கு உதவி செய்வதாயின் சில நிபந்தனைகளை முன்வைக்குமாறு வலியுறுத்த வேண்டும். இதன் மூலம் தீர்வுக்கான அடித்தளத்தை நாம் பலப்படுத்தலாம். இந்த நாடுகளின் மத்தியஸ்த்தத்துடன் ஒரு பேச்சுவார்த்தைக்குச் செல்ல வேண்டும். பொருளாதார நெருக்கடிகள் தணிந்த பின்னர் அரசியல் தீர்வுக்குச் செல்லும்போது அரசாங்கம் பின்வாங்காமல் இருப்பதை இந்த நாடுகள் உத்தரவாதப்படுத்த வேண்டும். வரலாற்றைப் பார்த்தால் சிங்களத் தரப்பு பலவீனமாக இருக்கும் போது பேச்சுவார்த்தைக்கு வரும். பின்னர் பின்வாங்கிவிடும்.

இதனைவிட கோட்டா கோ கமவில் போராடுபவர்களுடன் நாம் உரையாட வேண்டும். ஏனென்றால் அவர்கள் ஒரு புதிய தலைமுறை. இந்த தலைமுறையினரிடம் ஒரு மாற்றம் வந்திருக்கின்றது. இந்த மாற்றத்தை நாம் முழு சிங்கள தலைமுறை யினருக்குமான மாற்றமாகக் கொண்டுவர வேண்டும். சிங்கள மக்களுடைய கூட்டு உளவியல் குற்றவுணர்ச்சிக்கு உள்ளாக வேண்டும். அவ்வாறு வந்தால்தான் சமஸ்டி போன்ற ஒரு தீர்வுக்கு அவர்கள் வருவார்கள். இல்லையென்றால் சமஸ்டி என்றால் அதனை ஒரு தனிநாடாகப் பார்க்கும் நிலையில்தான் அவர்கள் இருப்பார்கள். இதற்காக போராடிக்கொண்டிருக்கும் அந்த இளைஞர்களுடன் நாம் உரையாட வேண்டும்.

பாராளுமன்றத்தைப் பயன்படுத்த வேண்டும். அதனைவிட இங்கு தெரிவித்த மூன்று தரப்புக்களுடனும் அவர்கள் உரையாட வேண்டும். தமிழ் மக்களுடைய பேரம் அதிகமாகவுள்ள நேரம் இது. அதனால், தமிழ்க் கட்சிகள் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.