முள்ளியவளை பிரதேசத்துக்கு உட்பட்ட மாவீரர் பெற்றோர் கௌரவிப்பு, முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லத்துக்கு முன்பாக ஒழுங்கமைப்பட்ட இடத்தில், மாவீரர் பெற்றோர் கௌரவிப்பு ஏற்பாட்டு குழுவினால் நேற்று (23) சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது.
முன்னதாக முள்ளியவளை முதன்மை வீதியில் மாவீரர் துயிலும் இல்லத்துக்கு முன்பாக இருந்து மாவீரர் பெற்றோர்கள் மங்கள வாத்திய இசையுடன் அழைத்துவரப்பட்டு சிறப்பாக ஒழுங்கமைப்பட்ட இடத்தில் பொதுச்சுடரினை முன்னாள் போராளி அச்சுதன் ஏற்றி வைக்க தொடர்ந்து மாவீரர்களின் பெற்றோர்களால் சுடர் ஏற்றி மாவீரர்களின் திருவுருவப்படங்களுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
புதுக்குடியிருப்பு பிரதேச சபை உறுப்பினர் ஆ.ஜோன்சன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் மாவீரர் நினைவுரையினை தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) மத்திய குழு உறுப்பினரும், கரைதுறைப்பற்று பிரதேசசபை தவிசாளருமான க.விஜிந்தன், முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன், பிரதேச சபைஉறுப்பினர்களான க.தவராசா, கெங்காதரம், மற்றும் முன்னாள் போராளிகளான மாதவமேஜர்,அச்சுதன், சமூகசெயற்பாட்டாளர்களான சிவமணிஅம்மா,சைகிலா,சகுந்தலா ஆகியோர் நிகழ்தியுள்ளார்கள்.
இதன் போது உரையாற்றிய ரெலோ மத்திய குழு உறுப்பினரும், கரைதுறைப்பற்று பிரதேசசபை தவிசாளருமான க.விஜிந்தன் புலம் பெயர்ந்து இருப்பவர்கள் உள்நாட்டில் இருப்பவர்களுடன் இணைந்து மாவீரர்களின் பெற்றோருக்கு உதவக்கூடிய ஒரு சிறந்த கட்டமைப்பினை உருவாக்க வேண்டும் என தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
எங்களுக்கு ஒரு இன விடுதலை வேண்டும். எங்களுக்கு உரிமை வேண்டும் நாங்கள் இலங்கையில் வாழ்கின்ற ஏனைய சமூகங்களைப் போல் கெளரவமாக வாழ வேண்டும் என்பதற்காக பல்வேறு வடிவங்களில் போராடி வந்தோம். எங்களுடைய போராட்டம் இன்னமும் தோற்றுப் போகவில்லை. நாங்கள் விடுதலையை நோக்கியே மென்மேலும் நகர்ந்து கொண்டிருக்கின்றோம்.
இங்கே இருக்கின்ற பெற்றோர்களுக்கு தான் வலியும் வேதனையும் தெரியும். ஒரு தேச விடுதலைக்காக போராடிய போராளியின் வலி இன்னொரு போராளிக்கு தான் தெரியும். பல்வேறுபட்ட அடக்குமுறைகளைப் எம் மீது பிரயோகித்து எதுமற்ற நிலையில் ஏதிலிகளாக எம்மை நாட்டை விட்டு விரட்டினார்கள் எங்களுடைய மாவீரர்களை நினைவுகூருவதற்கு தொடர்ச்சியாக தடை விதித்தார்கள். பல மாவீரர்களின் பெற்றோர் தாங்கள் மாவீரர் குடும்பம் என சொல்ல பயப்படுகின்றார்கள். நீங்கள் அதனை துணிந்து சொல்வதில் பெருமை கொள்ள வேண்டும். இன்று தமிழினத்துக்கு ஒரு முகவரி கிடைத்திருக்கின்றது என்றால் அது உங்களின் உறவுகளினாலே கிடைத்தது. நீங்கள் இந்த மண்ணிலே போற்றப்பட வேண்டியவர்கள். பாதுகாக்கப்பட வேண்டியவர்கள். எத்தனையோ பெற்றோர்கள் இன்று மிகவும் கஷ்டமான சூழ்நிலையிலே வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.
எம்முடைய சமுகத்திலே இப் பெற்றோர்களைப் பாதுகாக்கக் கூடிய இவர்களுக்கு வாழ்வாதார உதவிகளை வழங்கக் கூடிய எவ்வித திட்டமும் இல்லை என்பது வெட்கக் கேடானாது. புலம் பெயர்ந்து இருப்பவர்கள் உள்நாட்டில் இருப்பவர்களுடன் இணைந்து மாவீரர்களின் பெற்றோருக்கு உதவக்கூடிய ஒரு சிறந்த கட்டமைப்பினை உருவாக்க வேண்டும். நாங்கள் இப் பெற்றோர்களை சிறந்த முறையில் கவனித்து அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்வதே அவர்களை பெருமைப்படுத்தும். எதிர்வரும் 27 ஆம் திகதி எந்த விதமான தடைகள் வரினும் முள்ளியவளை துயிலும் இல்லத்தில் மாவீரர் நாளை சிறப்பாக நடாத்துவோம் என குறிப்பிட்டு அழைப்பு விடுத்தார்.
இதன்போது 150 வரையான மாவீரர் பெற்றோர்கள் கௌரவிக்கப்பட்டனர்.
மாவீரர் பெற்றோர்கள் மதிப்பளிப்பதற்காக, அழைத்து வரப்பட்ட போது முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லத்தில் அமைந்துள்ள படைமுகாமில் இருந்து படையினர் காணொளி எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.