பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தை அரசாங்கம் எப்போதும் மாற்று கருத்துடைய அரசியல்வாதிகளை அடக்குவதற்கே பயன்படுத்தி இருக்கிறது. அதனால்தான் இந்த சட்டம் தொடர்பில் மக்களுக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது.
அத்துடன் சமர்ப்பிக்கப்பட்டிருக்கும் இந்த சட்டமூலத்தில் பயங்கரமான பல விடயங்கள் இருக்கின்றன என தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை (10) இடம்பெற்ற நீதிமன்ற நியாயசபை மற்றும் நீதிமன்ற அவமதிப்பு சட்டமூலம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் கூறுகையில்,
அரசாங்கத்தின் நடவடிக்கைகளால் மக்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்துள்ளனர். அதனால் அரசாங்கத்துக்கு எதிரக மக்கள் வீதிக்கு இறங்குவார்கள். அதன்போது அவர்களுக்கு எதிராக பயங்கரவாத தடைச் சட்டத்தை பயன்படுத்த நடவடிக்கை எடுக்கலாம். அரசாங்கத்திற்கு எதனையாவது செய்யுமாறு கூறினாலோ, செய்ய வேண்டாமென்று கூறினாலோ பயங்கரவாதியென்று கூறும் நிலைமை ஏற்பட்டுள்ளது.
வெளிநாடுகளில் இந்த பயங்கரவாத தடைச்சட்டம் இருக்கிறது. ஆனால் எமது நாட்டில் மாற்று கருத்துடையவர்களை அடக்குவதற்கே இந்த சட்டம் பயன்படுத்தப்படுகிறது. கவிதை எழுதியதற்காக இளைஞர் ஒருவரர் பல வருடங்கள் சிறையில் வைக்கப்பட்டிருந்தார். அதேபோன்று அனைத்து பல்கலைக்கழக சங்கத்தின் தலைவர் இந்த சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டிருந்தார்.
அத்துடன் 1983இல் ஜே.வி.பியினரை தடை செய்தனர். ஆனால் ஜனநாயக ரீதியில் அரசியல் செய்கின்றோம். வடக்கில் பிரச்சினைகள் ஏற்பட்டது ஏன்? தவறான தீர்மானங்களே இளைஞர்கள் ஆயுதம் ஏந்த தூண்டியது. மக்கள் வீதிக்கு இறங்கும் போது அவர்களை ஒடுக்க இதனை பயன்படுத்தவே முயற்சிக்கின்றனர். அதனால் எமது நாட்டில் தற்போதுள்ள அரசியல் கலாசாரத்தில் உண்மையான பயங்கரவாதத்தை தடுப்பதற்கு இந்த சட்டம் பயன்படுத்துவதில்லை. மாறாக மாற்று கருத்துடைய அரசியல்வாதிகளை அடக்குவதற்கே பயன்படுத்துகின்றனர். அதனால்தான் இந்த சட்டம் தொடர்பில் மக்கள் அச்சம் ஏற்பட்டுள்ளது.
பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை அரசாங்கம் கடந்த வருடம்கொண்டுவந்தது. ஆனால அப்போது ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் கூட்டத்தொடர் இடம்பெற்றுக்கொண்டிருந்ததால் அதனை அரசாங்கம் அன்று வாபஸ் பெற்றுக்கொண்டது. தற்போது மீண்டும் இந்த சட்ட மூலத்தை சமர்ப்பித்திருக்கிறது. இந்த சட்டமூலத்தில் இருக்கும் விடயங்கள் பயங்கரமானவை. அரசாங்கம் இந்த சட்டத்தை எப்போதும் தனது எதிர் தரப்பினரை அடக்குவதற்கே பயன்படுத்தி வந்திருக்கிறது. எதர்காலத்திலும் அதனையே மேற்கொள்ளப்போகிறது. வரலாற்றில் இதற்கான அனுபங்கள் உள்ளன என்றார்.