சர்வதேச நாணய நிதியத்தின் பரிந்துரைகளைச் செயற்படுத்த சகல அரசியல் கட்சிகளின் ஒத்துழைப்பும் அத்தியாவசியமானது. யார் ஆட்சிக்கு வந்தாலும் வெளிநாட்டு கடன்கள் மறுசீரமைக்கப்பட வேண்டும். சர்வதேச நாணய நிதியத்துடனான செயற்பாட்டில் தனித்து செயற்பட வேண்டாம்,எதிர்க்கட்சிகளையும் இணைத்துக் கொள்ளுமாறு ஜனாதிபதியிடம் வலியுறுத்தியுள்ளோம்.ஜனாதிபதி தேர்தல் மற்றும் பொதுத்தேர்தலை இலக்காகக் கொண்டு பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியை அமைப்பதற்குப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளோம் என ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவரும்,பாராளுமன்ற உறுப்பினருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
ஐக்கிய குடியரசு முன்னணி கடந்த 14 ஆம் திகதி வெளியிட்ட ‘ தேசியத்துக்காக ஒன்றிணைவோம்’ என்ற கொள்கை பிரகடனத்தை வெளியிட்டது.பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தலைமையிலான ஐக்கிய குடியரசு முன்னணிக்கும், ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் இடையிலான சந்திப்பு அண்மையில் கொழும்பில் இடம்பெற்றது.
இதற்கமைய ஐக்கிய குடியரசு முன்னணிக்கும்,ஐக்கிய மக்கள் சக்திக்கும் இடையிலான சந்திப்பு கொழும்பில் உள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமை காரியாலயத்தில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்றது.
இந்த சந்திப்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் பண்டார,தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக,பாராளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான்,ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவர் பாட்டலி சம்பிக்க ரணவக்க,விசேட வைத்தியர் அஜித் அமரசிங்க,பொதுச்செயலாளர் பந்துல சந்திரசேகர, தேசிய அமைப்பாளர் சுமேத ரத்நாயக்க ஆகியோர் கலந்துக் கொண்டனர்.
இந்த சந்திப்பைத் தொடர்ந்து ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்த ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க, கடந்த 14 ஆம் திகதி ‘தேசியத்துக்காக ஒன்றிணைவோம்’ எனும் தொனிப்பொருளுக்கு அமைய செயற்திட்ட பிரகடனத்தை வெளியிட்டோம்.எதிர்வரும் மூன்று ஆண்டுகளுக்குள் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணும் திட்டங்களை முன்வைத்தோம்.
பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வு காணும் பொது செயற்திட்டத்தில் பங்குப்பற்றுமாறு ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவை தவிர்த்து ஏனைய சகல அரசியல் கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்தோம். அனைவரும் கலந்துக் கொண்டார்கள்.
ஐக்கிய மக்கள் சக்தியுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளோம்.இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் மற்றும் பொதுத்தேர்தலில் மனிதநேயத்துடன் கூட்டணியமைப்பது பிரதான நோக்கமாக உள்ளது.அதற்காக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் வெளிப்படைத்தன்மையான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளோம்.
கேள்வி –ஜனாதிபதியுடன் கடந்த வாரம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டீர்கள்.தற்போது அரசியல் கட்சிகளுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுகின்றீர்கள்.புதிய அரசியல் கூட்டணி வெற்றிப்பெறுமா ?
பதில் -ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் நாங்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபடவில்லை,ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருடன் தான் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டோம்.எதிர்காலம் தொடர்பான எமது யோசனைகளை ஐக்கிய தேசியக் கட்சியிடம் முன்வைத்துள்ளோம்.சிறந்த பதில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம். ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவை தவிர்த்து சகல தரப்பினருடனும் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவோம்.
கேள்வி –புதிய அரசியல் கூட்டணியை அமைக்க முயற்சிக்கின்றீர்களா ?
பதில் – நிச்சயமாக, தற்போதைய நிலையில் பரந்துப்பட்ட அரசியல் கூட்டணி ஒன்று அவசியமானது.சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் எதிர்வரும் மாதம் நாட்டுக்கு வருகைத் தருவார்கள்.இதன்போது வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பு தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்படும்.எவர் ஆட்சிக்கு வந்தாலும் வெளிநாட்டு அரசமுறை கடன்கள் மறுசீரமைக்கப்பட வேண்டும்.
சர்வதேச நாணய நிதியத்தின் பரிந்துரைகளை எதிர்ப்புகளின்றி செயற்படுத்துவதற்குச் சகல அரசியல் கட்சிகளின் ஒத்துழைப்பும் அவசியமானது.இதனை ஜனாதிபதியிடம் குறிப்பிட்டோம்.சர்வதேச நாணய நிதியத்தின் நீடிக்கப்பட்ட செயற்திட்டத்தைத் தனித்து செயற்படுத்த வேண்டாம்.சகல அரசியல் கட்சிகளையும் இணைத்துக் கொள்ளுமாறு ஜனாதிபதியிடம் வலியுறுத்தியுள்ளோம்.
பொருளாதார மீட்சிக்காக முன்னெடுக்கப்பட்டுள்ள செயற்திட்டங்கள் தொடர்பில் பொதுமக்களின் நிலைப்பாட்டை தெரிந்துக் கொள்ள வேண்டும். மின் கட்டணம் முறையற்ற வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளது.மின்சார சபை இலாபமடைந்துள்ளது. அதன் பயனை பொது மக்களுக்கு வழங்க வேண்டும் என்பதை ஜனாதிபதியிடம் எடுத்துரைத்துள்ளோம்.
கேள்வி – ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுடன் ஏன் பேச்சுவார்த்தையில் ஈடுபடவில்லை.அவர்களுக்கு அழைப்பு விடுக்கவில்லை ?
பதில் – அவர்களுக்கு அழைப்பு விடுக்க முடியாது.பொருளாதார பாதிப்புக்கு பொதுஜன பெரமுன உட்பட ராஜபக்ஷர்கள் பொறுப்புக் கூற வேண்டும் என்று வெளிப்படையாகப் பேசப்படுகிறது. பொருளாதார படுகொலையாளிகளை உயர்நீதிமன்றம் அடையாளப்படுத்தியுள்ளது.பொருளாதார பாதிப்பு தொடர்பில் ஆராய்வதற்கு ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு ஒன்றை அமைக்கும் பரிந்துரையை முன்வைத்துள்ளோம்.அவ்வாறான நிலையில் பொருளாதார படுகொலையாளிகளுடன் எவ்வாறு பேச்சுவார்த்தையில் ஈடுபடுவது.ஆகவே ராஜபக்ஷர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவது பயனற்றது என்றார்.