முல்லைத்தீவு குருந்தூர் மலை விவகாரம் தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்துவந்த முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரீ. சரவணராஜா, மரண அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி பதவி விலகியமை தொடர்பில் முழுமையான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
தமக்கு அச்சுறுத்தல் இருப்பதாக காவல்துறையினருக்கோ நீதிச்சேவை ஆணைக்குழுவிற்கோ நீதிபதி ஒருபோதும் அறிவிக்காத காரணத்தினால் ஜனாதிபதி இந்த பணிப்புரையை வழங்கியுள்ளார். எனவே, இந்த சம்பவத்திற்கான மூல காரணத்தை உடனடியாக ஆராயுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார். ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் ஆகியோருடன் சம்பவம் தொடர்பில் கலந்துரையாடியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 24ஆம் திகதி வெளிநாடு சென்றதாக கூறப்படும் நீதிபதி ரீ.சரவணராஜா, தமது பதவி விலகல் கடிதத்தை கடந்த 23ஆம் திகதி நீதிச்சேவை ஆணைக்குழுவுக்கு அனுப்பி வைத்துள்ளார்.
சட்டமா அதிபருக்கு எதிராக நீதிபதி முன்வைத்துள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் ஜனாதிபதியின் செயலாளர் சட்டமா அதிபரிடம் விளக்கம் கோரியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரீ.சரவணராஜாவின் பதவி விலகல் தொடர்பில், சுதந்திரம் மற்றும் பக்கச்சார்பற்ற தன்மையை உறுதிப்படுத்தும் வகையில் முழுமையான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என சட்டத்தரணிகள் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.
தமது உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதாகக் கூறி நீதிபதி ரீ.சரவணராஜா பதவி விலகியுள்ளதாக வெளியான செய்திகள் தொடர்பில் தாம் கவலையடைவதாகவும் சட்டத்தரணிகள் கூட்டமைப்பு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீதித்துறையின் சுதந்திரம் மற்றும் சட்டத்தின் ஆட்சி தொடர்பான விடயங்களில் கடுமையான அழுத்தங்கள் இருப்பதால், சுதந்திரம் மற்றும் பாரபட்சமற்ற தன்மையை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகளுடன் இந்த விவகாரம் குறித்து முழுமையாக விசாரிக்கப்பட வேண்டும்.
வெளிப்படைத்தன்மை முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் அத்தகைய விசாரணையின் முடிவுகளை தாமதமின்றி பொதுமக்களுக்கு தெரிவிக்க வேண்டும்’ என்று அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டத்தரணிகள் கூட்டமைப்பு சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணிகளான ரியன்சி அர்சகுலரத்ன, உபுல் ஜயசூரிய, கலாநிதி ஜயம்பதி விக்ரமரத்ன, ஜெப்ரி அழகரத்தினம், டினல் பிலிப்ஸ், துலிந்திர வீரசூரிய, அனுர மெத்தேகொட, சாலிய பீரிஸ் உள்ளிட்ட பலர் கையொப்பமிட்டுள்ளனர்.