நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்கும் கூட்டுறவுச் சங்கங்களின் வளர்ச்சிக்கும் பெரும் பங்காற்றி வரும் பனை அபிவிருத்திச் சபையின் நிர்வாகச் சீர்கேட்டையும் முறையற்ற நியமனங்களையும் நிறுத்தி, பனை அபிவிருத்தி சபையை வினைதிறன் மிக்கதாகச் செயற்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் க. பிரேமச்சந்திரன் அரசாங்கத்தைக் கோரியுள்ளார்.
இது குறித்து அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையின் முழு விபரம் வருமாறு.
பனை அபிவிருத்திச் சபையானது 1978ஆம் ஆண்டு தென்னை அபிவிருத்திச் சட்டத்தின்கீழ், யாழ்ப்பாணத்தை தலைமை அலுவலகமாகக் கொண்டு, பனையை நம்பிவாழும் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டும் எனவும் பனை வளம் அபிவிருத்தி செய்யப்படவேண்டும் எனவும் உருவாக்கப்பட்ட ஒரு சபையாகும்.
இலங்கையின் பனை வளமானது முழுமையாக வடககு-கிழக்கையே சார்ந்துள்ளது. ஏறத்தாழ 11இலட்சம் பனை வளம் இங்கு இருப்பதாக அறியப்படுகிறது. ஆனால், இதைக் கொண்டு நடத்தும் பனை அபிவிருத்திச் சபையானது மிகவும் பின்தங்கிய நிலையிலேயே காணப்படுகின்றது. இதனால் சங்கங்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் அதிகம் பாதிக்கப்பட்டு பனை வளத்தினை நம்பி வாழும் குடும்ங்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதுடன், பனைவள அபிவிருத்தியும் பெருமளவில் பாதிக்கப்படுகின்றது.
பனைவள உற்பத்தி மற்றும் கைவினைப் பொருட்கள் உற்பத்தி மட்டங்கள் ஒப்பீட்டளவில் கடந்த காலங்களைவிட மிகவும் குறைவாகவே காணப்படுவதுடன், பனைவளத்தினைக் கொண்டு பல்வேறு வகையான உற்பத்திப் பொருட்கள் உற்பத்தி செய்யக்கூடியதாக இருந்தும் அவற்றின் உற்பத்தி ஊக்குவிக்கப்படுவதில்லை.
முதலாவதாக, வடக்கு மாகாணத்தின் யாழ்ப்பாணத்தில் இதன் தலைமைச்செயலகம் இருந்தபோதிலும்கூட, பல இலட்ச ரூபாய் வாடகையில் கொழும்பில் இன்னொரு தலைமைச் சங்கம் இயங்கிவருகிறது. இதன் காரணமாக, மிகப்பெருமளவிலான பனை வளத்தினை வடமாகாணம் கொண்டிருந்த போதிலும்கூட, அதன் பலன் மக்களைச் சென்றடையவில்லை.
பனை மரத்தைப் பற்றியோ அதன் பயன்பாடு பற்றியோ அறியாத சிங்கள மொழிபேசும் தென்பகுதியைச் சார்ந்த ஒருவரை பனை அபிவிருத்திசபையின் தலைவராக பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் நியமித்தமை தவறானது. அவர் தென்பகுதியைச் சார்ந்தவராக இருப்பதால், தேவைக்கு மேலதிகமான வாடகையைக் கொடுத்து கொழும்பிலே நிர்வாகத்தை நடாத்துவது என்பது ஏற்றுக்கொள்ள முடியாதது.
நாடு இன்று எதிர்நோக்கியுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடியின் மத்தியில் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த தேவையற்ற செலவானது நாட்டின் பொருளாதார சீர்கேட்டிற்கு மேலும் உரமூட்டுவதுடன், பனைத்தொழிலை நம்பி வாழும் வடக்கு-கிழக்கு மக்களின் வாழ்வாதாரத்தையும் கடுமையாக பாதித்துள்ளது. வடக்கு-கிழக்கில் பனை வளத்துடன் ஈடுபாடுகொண்ட படித்த தகுதி வாய்ந்த இளைஞர்கள் யுவதிகள் ஆயிரக்கணக்கில் இருக்கையில் இந்தத் துறையுடன் தொடர்பில்லாத 250ற்கு மேற்பட்ட சிங்கள இளைஞர் யுவதிகளை பனை அபிவித்திச்சபை உள்வாங்கியிருப்பதும் இவர்களும் பெருமளவில் கொழும்பை மையமாகக் கொண்டு பணியாற்றி வருவதும் பனை அபிவிருத்திசபை கீழ்நோக்கிச் செல்வதற்குக் காரணமாக அமைகின்றது.
பனை அபிவிருத்தி சபையானது கடந்த நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக, பருத்தித்துறை, திக்கம் பிரதேசத்தில் ஒரு வடிசாலையை நடத்தி வந்தது. மிகவும் இலாபகரமாக இயங்கிவந்த இந்த வடிசாலையினால் 3000 தொழிலாளர்கள் பயன்பெற்று வந்தார்கள். இந்த வடிசாலையானது பல்வேறு சந்தர்ப்பங்களில் வடக்கில் பொறுப்பாக இருந்த அமைச்சர்களினால் சூரையாடப்பட்டது. இவ்வளவு கொள்ளைகளும் சூரையாடல்களும் இடம்பெற்ற பின்னரும்கூட அது தொடர்ந்தும் இலாபத்திலேயே இயங்கி வந்தது.
கடந்த ஐந்து வருடங்களுக்கு மேலாக வடிசாலை மூடப்பட்டதன் காரணத்தினால் இந்த வடிசாலைக்கு கள்ளை விநியோகித்து வந்த தொழிலாளிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுவரைகாலமும் திக்கம் வடிசாலையை பனை அபிவிருத்திச் சங்கங்களின் சமாசம் நடத்தி வந்தது. வடிசாலைக்கான உரிமம், பனம் சாராயத்தை உற்பத்தி செய்வதற்கான உரிமம், அவற்றைக் களஞ்சியப்படுத்துவதற்கும் விற்பதற்குமான உரிமம் அனைத்தும் பனை அபிவிருத்திச் சபையின் பெயரில் சமாசங்களிடமே இருந்தது. ஆனால் இப்பொழுது இருக்கின்ற பனை அபிவிருத்திச் சபையின் தலைவரான சிங்களப் பெருமகன், இந்த உரிமங்களை சிங்கள நபர் ஒருவருக்கு அளித்துள்ளதாக அறியமுடிகிறது. இதனால் பனை வளச் சங்கங்கள் சமாசங்கள், அதன் கூட்டுறவு நடவடிக்கைகள் அனைத்தும் முடக்கப்படுவதுடன் இந்த சகல வருமானங்களையும் ஒரு தனிநபருக்கு அளிக்க முற்பட்டமையானது ஒட்டுமொத்த பனை அபிவிருத்தி முயற்சியையும் சீர்குலைக்கும் செயற்பாடாகும்.
இந்த நடவடிக்கைகளின் காரணமாக, பனம்பொருள் உற்பத்தியும் அதன் ஏற்றுமதியும் மிக மோசமாகப் பாதிப்படைந்திருப்பதுடன், நாட்டின் பொருளாதாரத்தைச் சீர்குலைப்பதற்கும் பங்களித்துள்ளது.
அமைச்சர்களின் அற்பத்தனமான, முன்யோசனையற்ற பதவி வழங்கல்களானது பனைவள அபிவிருத்தியை எவ்வளவுதூரம் பாதித்திருக்கிறது என்பதை பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் புரிந்துகொள்ள வேண்டும். அரசியல் ரீதியான முறையற்ற முகாமைத்துவமும், சீரற்ற நிர்வாக முகாமைத்துவமும் இலங்கையின் பொருளாதாரத்தை மோசமாகப் பாதித்திருக்கிறது என்பதை கடந்த இரண்டு வருடங்களாக நாட்டு மக்கள் அனுபவித்து வருகின்றனர். இந்த நிலையில், பனைவள அபிவிருத்திச் சபைக்கான அதனை திறம்பட நடாத்துவதற்கான இலாபமீட்டும் ஒரு துறையாக மாற்றுவதற்கான நடவடிக்கைகளை பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மேற்கொள்ள வேண்டும்.
1. வடக்கு மாகாணத்தின் தலைமைச்செயலகத்தை வினைதிறனாக இயங்க வைப்பதுடன் பல இலட்சங்களை வாடகையாக விழுங்கி ஏப்பம்விடும் கொழும்பு செயலகம் மூடப்படுவதுடன் அங்குள்ள அனைத்து கட்டமைப்புகளும் ஏற்கனவே உள்ள அரச ஆணைகளுக்கிணங்க, யாழ்ப்பாணத்திற்கு மாற்றப்பட வேண்டும்.
2. பனை அபிவிருத்திச் சபையின் தலைவராக பனை வளத்தில் பரிச்சியமும் அத்துறையை அபிவிருத்தி செய்வதில் ஊக்கமும் அனுபவமும் கொண்ட சரியான நபர் ஒருவர் நியமிக்கப்பட வேண்டும்.
3. பனைவள கூட்டுறவு சபைகள் பாதுகாக்கப்பட வேண்டுமாக இருந்தால் பனை வளத்தை அடிப்படையாகக் கொண்ட சங்கங்கள், சமாசங்கள் அதற்கென வழங்கிவரும் உதவிகள் ஒத்தாசைகள் அதிகரிக்கப்பட வேண்டும்.
4. திக்கம் வடிசாலைக்குரித்தான அனைத்து உரிமங்களும் வழங்கப்பட்டு முன்னர் இதனை இயக்கிவந்த சமாசங்களுக்கே இவற்றைத் தொடர்ந்தும் இயக்குவதற்கான அனுமதி அளிக்கப்படவேண்டும்.
5. நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்றுவதில் அதிகளவு அக்கறை கொண்டுள்ளதாகக் கூறிக்கொள்ளும் ஜனாதிபதியும் அமைச்சர்களும் இதில் கூடுதல் கவனம் செலுத்தி பொறுப்புடன் நடந்துகொள்ளுமாறு கோருகின்றோம்.
6. தனியாரை ஊக்குவித்து கூட்டுறவுத்துறையை இல்லாமல் செய்யும் நடவடிக்கைகளைக் கைவிட்டு, கூட்டுறவுத்துறையை ஊக்குவித்து அவற்றை ஏற்கனவே இருந்ததுபோல் இலாபமீட்டும் துறையாகவும் வினைதிறன் மிக்கதாகவும் செயற்படுவதற்கு உதவுமாறு சகலரையும் கோருகிறோம்.
என குறிப்பிடப்பட்டுள்ளது.