உள்ளூராட்சித் தேர்தலை விட மூன்று மடங்கு செலவோடு தேர்தலை நடத்துவதற்கு உதவுவதற்காக பொலிஸ் திணைக்களத்தினால் சமர்ப்பிக்கப்பட்ட மதிப்பீடுகள் தொடர்பாக தேர்தல்கள் ஆணைக்குழு திறைசேரியிடம் ஆட்சேபனைகளை முன்வைக்கவுள்ளது.
ஐந்து வருடங்களுக்கு முன்னர் உள்ளூராட்சித் தேர்தலுக்கான கோரிக்கைக்கு மாறாக மார்ச் 9 ஆம் திகதி நடைபெறவுள்ள தேர்தலுக்கு சேவைகளை வழங்குவதற்கு 2.8 பில்லியன் ரூபாய் தேவை என பொலிஸ் திணைக்களம் அறிவித்துள்ளது.
கொடுப்பனவுகள், எரிபொருள் செலவுகள், வாகன வாடகை, தொலைபேசி மற்றும் தகவல் தொடர்பு பொருட்கள், எழுதுபொருட்கள் மற்றும் இதர செலவுகளை உள்ளடக்கிய மதிப்பிடப்பட்ட செலவுகள் ஆறு மடங்கு அதிகரிப்பைக் காட்டியுள்ளதாக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இந்த அதிகரிப்புகளில் வாகன வாடகை செலவு 138 மில்லியனில் இருந்து 745 மில்லியனாகவும் எரிபொருள் கட்டண மதிப்பீடுகள் 108 மில்லியனில் இருந்து 675 மில்லியனாக அதிகரித்துள்ளது என்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் மூத்த அதிகாரி சுட்டிக்காட்டியுள்ளார்.
தேர்தல்கள் ஆணைக்குழு மேற்கொண்ட மதிப்பீடுகளை விட பொலிஸ் திணைக்களம் அனுப்பிய மதிப்பீடுகள் மிக அதிகமாக உள்ளது என்றும் செலவுகளுக்காக உரிய பத்திரங்களை வழங்கினால் மட்டுமே பணம் செலுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
இதேவேளை தேர்தலுக்கு தயாராவதற்கு தேவையான 100 மில்லியனில் இருந்து 35 மில்லியனை மட்டுமே பெற்றுள்ளதாகவும் உரிய நேரத்தில் நிதி கிடைக்காததால் கவலைப்படுவதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் மூத்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.