முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணிபுரிந்த போது தீக்காயங்களுக்கு உள்ளாகி உயிரிழந்த சிறுமியின் சடலம் நாளை மறுதினம் (30) நீதிமன்ற உத்தரவின் பேரில் தோண்டி எடுக்கப்படும் என்று டயகம பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சுஜீவ குணதிலக தெரிவித்தார்.
டயகம தோட்டத்தில் வசித்த ஹிஷாலினி ஜூட் குமார் (16), கொழும்பில் உள்ள முன்னாள் அமைச்சர் வீட்டில் பணிபுரிந்து கொண்டிருந்த போது பலத்த தீக்காயங்களுடன் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார்.
இதனையடுத்து, சிறுமியின் உடல் டயகம தோட்டத்தின் மூன்றாம் பகுதியில் உள்ள பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
சிறுமி தொடர்பான விசாரணையில் பல சிக்கல்கள் உள்ளதால், சிறுமியின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை நடத்த கொழும்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதற்காக விசேட வைத்திய குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.
குறித்த குழுவினால் எதிர்வரும் 30 ஆம் திகதி சிறுமியின் சடலம் இரண்டாவது பிரேத பரிசோதனைக்காக தோண்டி எடுக்கப்படவுள்ளது.
இதனால், சிறுமி அடக்கம் செய்யப்பட்டுள்ள டயகம பொது மயானத்திற்கு கடும் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக டயகம பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சுஜீவ குணதிலக மேலும் தெரிவித்தார்.