முதலீட்டு ஊக்குவிப்பு வலயங்களுக்குள் மாத்திரம் வெளிநாட்டு முதலீட்டு தொழிற்சாலைகளை அமைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. வெளிநாட்டு முதலீட்டாளர்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதற்கு எடுக்கப்படும் ஒரு நடவடிக்கையாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
கட்டான, ஹல்பே கோபியாவத்தை பிரதேசத்தில் உள்ள ஆடை தொழிற்சாலை உரிமையாளரான ஓமான் பிரஜையொருவர் தாக்கப்பட்டமை போன்ற சம்பவங்கள் மீண்டும் பதிவாகாமல் இருப்பதற்காக ஜனாதிபதி இவ்வாறானதொரு தீர்மானத்தை எடுத்துள்ளார்.
அதற்கமைய, நாட்டில் உள்ள சில இடங்களுக்குள் முதலீட்டு ஊக்குவிப்பு வலயங்களை அமைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதோடு, கண்டி மாவட்டத்தை கேந்திர மையமாகக் கொண்டு, இவ்வாறான முதலீட்டு ஊக்குவிப்பு வலயங்கள் பலவற்றை அமைப்பதற்கான இடங்களை தெரிவுசெய்வதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் ஆரம்பித்துள்ளது.
வெளிநாட்டு முதலீட்டு தொழிற்சாலைகள் இந்நாட்டில் ஸ்தாபிக்கப்பட்ட முதலாவது சந்தர்ப்பத்தில் முதலீட்டு ஊக்குவிப்பு வலயங்களில் மாத்திரம் அவற்றை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்த போதிலும், மறைந்த முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸவின் ஆட்சிக் காலத்தில் 200 ஆடை தொழிற்சாலைகள் வேலைத்திட்டத்தின் கீழ் வெளியிடங்களிலும் அவை ஸ்தாபிக்கப்பட்டன.
இந்நிலையில், முதலீட்டு வலயங்களுக்குள் பிரத்தியேக பாதுகாப்பு அமைப்பு நடைமுறையில் உள்ளதால், முதலீட்டாளர்கள் மீது வெளியாட்கள் யாரும் செல்வாக்கு செலுத்தக்கூடாது என்பதற்காக அரசாங்கம் இந்த முடிவை எடுத்துள்ளது.
மேலும், ஏற்றுமதி முதலீட்டு வலயங்களுக்கு வெளியில் அமைந்துள்ள வெளிநாட்டு முதலீட்டு தொழிற்சாலைகளின் பாதுகாப்பு தொடர்பில் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டமொன்றை தயாரிக்குமாறும், ஏதேனுமொரு தரப்பினரிடமிருந்து அநாவசியமான அழுத்தங்கள் காணப்பட்டால், அவர்களுக்கு எதிராக சட்டத்தை கடுமையாக அமுல்படுத்துமாறும் ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.