தமிழ் மக்களின் மரபுவழித் தாயகமான வடக்கு கிழக்கில் குடிசனப் பரம்பல்களை மாற்றி சீரழிக்காமல் அந்த மக்களின் மரபுரிமைகளைப் பேணிப் பாதுகாக்கக்கூடிய வகையில் அரசாங்கம் செயற்படவேண்டும் என ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு வலியுறுத்துகின்றது.
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பினரால் இன்று(01) வெளியிடப்பட்ட மே தின பிரகடன தீர்மானத்திலேயே இது குறிப்பிடப்பட்டுள்ளது.
அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
நாட்டின் பொருளாதார வங்குரோத்துக்குக் காரணமாக அமைந்த தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வுகாண தவறியமையும் அநாவசியமாக பல்லாண்டுகாலமாக ஒரு யுத்தததை நடத்தியமையும் அந்த யுத்தத்தை நடாத்துவதற்கு அரசாங்கம் உருவாக்கிய பயங்கரவாத தடைச்சட்டம் யுத்தம் முடிவடைந்து பதினைந்து ஆண்டுகள் கழிந்த பின்னரும் இன்னமும் நடைமுறையில் இருப்பதானது மக்களின் அடிப்படை உரிமைகளை தொடர்ந்தும் மீறும் ஒரு செயற்பாடாகும்.
அதேபோல் யுத்தத்தின் காரணமாக காணாமல் ஆக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் தொடர்பாக அரசாங்கம் எந்தவித காத்திரமான நடவடிக்கைகளை எடுக்காமையானதும் மிகுந்த விசனத்தை ஏற்படுத்துவதுடன் அரசாங்கத்தின் தமிழர் விரோத போக்கையும் வெளிக்காட்டி நிற்கின்றது. அரசாங்கத்தின் இந்த நடவடிக்கைகளை ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி வன்மையாகக் கண்டிப்பதுடன் இவற்றிற்கு உரிய தீர்வினைக் காணவேண்டும் என்றும் அரசாங்கத்தை வலியுறுத்துகிறது.
வட கடலில் பாக்கு நீரிணையிலும் மன்னார் வளைகுடாவிலும் தமிழக மீனவர்களுக்கும் ஈழத்து வடபுல மீனவர்களுக்குமிடையில் மீன்பிடி தொடர்பாக தொடர்ச்சியான சர்ச்சைகள் ஏற்பட்டு வருகின்றன. ஈழத்து மீனவர்களின் படகுகள் சேதமாக்கப்படுகிறது. வலைகள் அறுக்கப்படுகின்றன.
இலட்சக் கணக்கான பெறுமதி வாய்ந்த சொத்துகள் கடலில் நிர்மூலகாப்படுகின்றன. அதே சமயம் நாளாந்தம் தமிழக மீனவர்கள் கைதுசெய்யப்படுவதும் நீதிமன்றங்களால் அவர்களது படகுகள் அரசுடையாக்கப்படுவதும் தொடர்கதையாகி வருகின்றது. இவை நிறுத்தப்படவேண்டும். இதற்கு ஏற்ப இந்திய அரசும் இலங்கை அரசும் மீனவ தொழிலாளர்களின் வாழ்வாதாரத்துடன் தொடர்புபட்ட இப்பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதற்கு விரைந்து செயற்படவேண்டுமென்று கோருகின்றோம்.
கடந்த சில வருடங்களாக இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார சீர்குலைவுகளாலும் வரட்சியாலும் சில இடங்களில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்குகளின் காரணமாகவும் தவறான உரக்கொள்கையினாலும் இப்பொழுது தெங்கு செய்கையில் ஏற்பட்டுவரும் நோய் காரணமாகவும் விவசாயிகள் தமது ஜீவனோபாயத்தையே முற்றுமுழுதாக இழந்து நிற்கிறார்கள்.
மேலும் விவசாயிகளின் விளைச்சலுக்கு உரிய நிர்ணய விலை கிடைக்காமையாலும் விவசாயிகள் மிகவும் மோசமாக பாதிப்படைந்துள்ளனர். எனவே விவசாயிகளுக்கான உரம் மற்றும் கிரிமிநாசினிகளை தேவையான அளவிற்கு மானிய அடிப்படையில் வழங்குவதுடன் விவசாயிகளின் கடன்களை இரத்து செய்ய வேண்டும்.
நுன்நிதிக்கடன் வழங்கும் நிறுவனங்கள் அப்பாவிப் பெண்களிடம் மிகப்பெருமளவிலான வட்டியினை அரவிடுவதோடு நிதியை மீளச் செலுத்துகையில் காலதாமதம் ஏற்படும்பட்சத்தில் அந்நிறுவனங்களினால் பெண்கள் குறிப்பாக குடும்பத்தை தலைமையேற்று நடத்தும் பெண்கள் பாலியல் தொல்லை உட்பட பல்வேறு இன்னல்களுக்கு ஆளாவதுடன் தற்கொலை செய்துகொள்வதற்கும் தூண்டப்படுகின்றனர்.
இத்தகைய நுன்நிதிக் கடன் நிறுவனங்களைத் தடைசெய்வதுடன் உழைக்கும் பெண்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்குத் தேவையான நிதியை இலகுதவணை அடிப்படையில் வழங்க அரசாங்கம் முன்வரவேண்டும்.
இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியும் பணவீக்கமும் வாழ்க்கை செலவுக்கு ஏற்ப கொடுப்பனவுகள் இல்லாமையும் தொழிலாளர், விவசாயிகளை பலமடங்கு பாதித்திருக்கிறது. வறுமைக்கோட்டிற்குக் கீழிருப்போர் பல மடங்கு உயர்ந்திருப்பதாக ஐ.நா. புள்ளிவிபரங்கள் கூறுகின்றது.
அரசாங்க வருவாயை கூட்டுவதற்காக வரிகள் அதிகரிக்கப்படுவதும் விலைகள் உயர்த்தப்படுவதும் தொடர்ச்சியாக இடம்பெற்றுவருகிறதே அன்றி, வறிய மக்களின் மூன்று வேளை உணவிற்கு உத்தரவாதமில்லாத நிலை தோற்றுவிக்கப்பட்டுள்ளது. வறுமைக்கோட்டிற்குக் கீழிருக்கும் அனைவருக்கும் கல்வி, சுகாதாரம் போஷாக்கு உணவு உள்ளிட்ட தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ளும் வகையில் பொதுவான பொருளாதர உதவித் திட்டத்தின்கீழ் நிவாரணம் வழங்கப்படவேண்டும்.
அரசாங்கத்தின் தவறான கொள்கைகளின் காரணமாக நாடு வங்குரோத்து நிலையை அடைந்தது மாத்திரமல்லாமல், இலஞ்சம் ஊழல் மற்றும் நிர்வாகச் சீர்கேடு காரணமாக அரச இயந்திரமும் முற்றுமுழுதாக சீர்குலைந்திருக்கிறது. இவற்றிற்கு எதிரான மக்களின் குரல்களையும் தொழிற்சங்கங்களின் குரல்களையும் பொது அமைப்புகளின் குரல்களையும் அடக்குவதற்காக தொடர்ச்சியாக பல்வேறு அடக்குமுறை சட்டங்கள் இயற்றப்படுகினறன.
இவற்றை ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி வன்மையாகக் கண்டிப்பதுடன், தொழிற்சங்கங்களும் பொது நிறுவனங்களும் சுதந்திரமாக இயங்குவதற்கும் தமது கோரிக்கைகளுக்காகப் போராடுவதற்கான உரிமைகள் உத்திரவாதம் செய்யப்படவேண்டும்.
அரசாங்கத்தின் நான்காவது தூணாகவும் ஜனநாயகத்தின் காவலனாகவும் திகழ்கின்ற ஊடகத்துறைக்கு எதிராக அரசாங்கம் புதிய புதிய சட்டங்களினூடாக அவற்றைக் கட்டுப்படுத்த முயற்சித்து வருகின்றது. இணைய தளங்கள், சமூக வலைத்தளங்கள், அச்சு ஊடகம் மற்றும் இலத்திரனியல் ஊடகம் போன்றவை சுதந்திரமாகவும் பக்கசார்பற்றும் இயங்கக்கூடிய வகையிலும் அவற்றின் சுயாதீனச் செயற்பாடுகள் தடையின்றி செயற்படும் வகையிலும் அரச அடக்குமுறைச் சட்டங்கள் அகற்றப்படவேண்டும்.
வடக்கு கிழக்கு மாகாணங்கள் என்பது தமிழ் பேசும் மக்களின் மரபுவழித் தாயகமாக இருந்து வருகின்றது. குடிசனப் பரம்பல்களை மாற்றியும் கலாசார ஊடுருவல்களை ஏற்படுத்தியும் அங்கு வாழும் மக்களின் மொழி, கலாசார, பண்பாடு மற்றும் பொருளாதார வளங்களை சீரழிக்காமல் காலாதிகாலமாக வாழ்ந்துவரும் அந்த மக்களின் மரபுரிமைகளைப் பேணிப் பாதுகாக்கக்கூடிய வகையில் அரசாங்கம் செயற்படவேண்டும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.