வடக்கு கிழக்கு பிரதேசங்களில் தொல்லியல் திணைக்களத்தினால் மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருந்த அளவீட்டு பணிகள் அனைத்தையும் உடனடியாக நிறுத்தி வைக்குமாறு புத்த சாசன மற்றும் சமய விவகார அமைச்சர் விதுர விக்ரமநாயக்க உத்தரவிட்டார்.
தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், அமைச்சர் விதுர விக்ரமநாயக்கவிற்குமிடையில் இன்று நடந்த சந்திப்பின் போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்த சந்திப்பில் அரச தரப்பில் அமைச்சர் விதுர விக்ரமநாயக்க, அமைச்சின் செயலாளர், தொல்லியல் திணைக்கள பணிப்பாளர் மற்றும் அமைச்சின் கீழுள்ள ஏனைய திணைக்களங்களின் பணிப்பாளர்களும் சந்திப்பில் கலந்து கொண்டனர்.
தமிழ் கட்சிகள் தரப்பின் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம், இலங்கை தமிழ் அரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சி.சிறிதரன், சாள்ஸ் நிர்மலநாதன், த.கலையரசன் ஆகியோரும், ஈ.பி.டி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் கு.திலீபனும் கலந்து கொண்டனர்.
இலங்கையில் சிங்கள பௌத்தத்திற்கு முன்னதாக தமிழ் பௌத்தம் நிலவியதை சுட்டிக்காட்டிய தமிழ் எம்.பிக்கள், வடக்கு கிழக்கில் பௌத்த சின்னங்கள் பாதுகாக்கப்படுவதை தாம் எதிர்க்கவில்லையென்றும், ஆனால், சைவ வழிபாட்டிடங்கள் அழிக்கப்பட்டு, பௌத்த வழிபாட்டிடங்கள் அமைக்கப்படுவதை எதிர்ப்பதாக தெரிவித்தனர்.
உருத்திரபுரம் சிவன் கோயில், குருந்தூர் மலை, தையிட்டி விவகாரங்கள் சுட்டிக்காட்டப்பட்டன.
குருந்துர் மலையில் நீதிமன்ற தீர்ப்பை மீறியும், தையிட்டியில் பொதுமக்களின் காணிக்குள்ளும் விகாரை கட்டப்பட்டுள்ளதையும் சுட்டிக்காட்டியபோது, தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் வில்லங்கமான விளக்கங்கள் அளித்தார்.
குருந்தூர் மலையில் முன்னர் விகாரை இருந்ததாகவும், வெளிநாட்டு சிங்கள அமைப்புக்களின் நிதியுதவியிலேயே விகாரை அமைக்கப்பட்டதாக தெரிவித்தார்.
இதற்கு தமிழ் தரப்பினர், வெளிநாட்டிலுள்ள தமிழ் தரப்பிலிருந்து நிதி திரட்டி தந்தால், பொலன்னறுவையில் மிகப்பெரிய சைவக்கோயில் கட்ட முடியுமா என கேள்வியெழுப்பினர்.
தமிழ் தரப்பினர் தொல்லியல் முக்கியத்துவங்களுள்ள பகுதிகளை அபகரிக்க முயல்வதாகவும், அதனாலேயே நில அளவீடு செய்வதாகவும் தொல்லியல் திணைக்கள பணிப்பாளர் தெரிவித்தார்.
ஆலய காணிகளை தமிழ் மக்கள் அபகரிப்பதில்லையென்பதை தமிழ் தரப்பினர் சுட்டிக்காட்டினர்.
தமிழ் தரப்பினர் தெரிவித்த விவகாரங்களிற்கு தொல்லியல் திணைக்கள பணிப்பாளர் நீண்ட விளக்கங்கள் அளிக்க முற்பட்ட போது, கேட்ட கேள்விக்கு மட்டும் பதிலளியுங்கள் என அமைச்சர் காட்டமாக கூறினார்.
இதன்படி, உருத்திரபுரம் சிவன் ஆலயம் உள்ளிட்ட வடக்கு கிழக்கிலுள்ள சை ஆலயங்கள், வழிபாட்டிடங்களில் அளவீட்டு பணிகளை உடனடியாக நிறுத்த அமைச்சர் உத்தரவிட்டார்.
குருந்தூர் மலைக்கு நீதவான் சென்று பார்வையிட்ட பின்னர் கூடித் தீர்மானம் எடுப்பதெனவும் தீர்மானிக்கப்பட்டது.