வடமாகாண ஆளுநர் ஜீவன் பொது மக்களின் காணிகளை பிடிக்கும் அரச படைகளுக்கான முகவரா? என்று தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் இளைஞர் அணித்தலைவரும் வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான சபா குகதாஸ் கேள்வியெழுப்பியுள்ளார்.
வடமாகாணத்திலுள்ள காணிகளை அரச படையினரால் கைப்பற்றப்பட:டு வருகின்றமை தொடர்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர்,
வடக்கு மாகாணத்தில் பொது மக்களின் காணிகளை அரச படைகள் பிடிக்கும் நிகழ்ச்சி அண்மைய நாட்கள் முல்லைத்தீவு , வடமராட்சி கிழக்கு, மண்டைதீவு, காரைநகர், மாதகல் , வடமராட்சி வடக்கு வவுனியா வடக்கு, என தீவிரமாக முன்னகர்த்தப்படுகிறது. இதற்கு நில அளவைத் திணைக்கள அதிகாரிகளும் ஆயுதம் தரித்த படைகளும் பயன்படுத்தப்படுகின்றனர்.
காணி அபகரிக்கும் செயற்பாட்டிற்கு இடையூறாக யாரும் இருந்தால் எதிர்காலத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக வடமாகாண ஆளுநர் அறிக்கை ஒன்றை 01/12/2021 வெளியிட்டுள்ளார். இது மிக வேதனையான விடயம் காரணம் காணி சுவீகரிப்பு என்பது பிரதேச செயலங்களின் ஒருங்கிணைப்புக் கூட்டங்களில் தீர்மானங்களாக எடுத்தே மேற்கொள்ள முடியும் என்ற ஒழுங்கு முறை இருக்கும் போது சட்ட முறையற்ற வகையில் தனியாருக்கு சொந்தமான காணிகளை சுவீகரித்தல் என்ற பெயரில் படை முகாம்கள் அமைக்க அபகரிக்க முடியாது.
மக்கள் பிரதிநிதிகளை மக்கள் அழைக்கும் போது அதில் கலந்து கொண்டு அதற்காக நியாயம் கேட்பது மக்கள் பிரதிநிதிகளின் கடமை அவர்கள் அதனை செய்யும் போது சட்ட நடவடிக்கை எடுப்பேன் என கூறும் போது நீங்கள் ஆளுநரா? இல்லை பொது மக்களின் காணிகளை அரச படைகளுக்கு முகாம் அமைப்பதற்கு பிடித்துக் கொடுக்கும் முகவரா?