விக்கி ரணிலுன் பக்கம் சாய்தது ஏன் அவரே தெரிவிக்கும் பதில்.

ஒருவரை நம்புவது குற்றமா என கேள்வி எழுப்புகின்றார் பாராளுமன்ற உறுப்பினர்
க.வி.விக்னேஸ்வரன்.

அண்மையில் கடந்த 20ஆம் திகதி நாடாளுமன்றில் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்வில் ரணில் விக்கிரமசிங்காவை ஆதரிக்க முடிவெடுத்த தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரனைத் தொடர்பு கொண்டு கேட்டபோதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

நாடாளுமன்ற உறுப்பினரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும் அதன் பதில்களும்,

  1. கேள்வி: ஜனாதிபதித் தேர்வில் நடுநிலை வகிப்பதாக அறிவித்த நீங்கள் எதன் அடிப்படையில் அந்த முடிவை மாற்றிக்கொண்டீர்கள்?.

பதில்: ஜனாதிபதித் தேர்தலில் நடுநிலை வகிக்க வேண்டியிருப்பதாக கூறப்பட்ட போது யார் யார் எவ்வெதனைக் கூறப் போகின்றார்கள் என்று அறியாதிருந்தோம். அப்போது இரணிலா சஜீத்தா என்ற கேள்வியே முன்னிலைப்படுத்தப்பட்டு இருந்தது. இருவரில் யார் எமது கோரிக்கைகளுக்கு எமது எதிர்பார்ப்புக்களுக்கு ஏற்பப் பதில் தருகின்றார்களோ அவர்களை ஆதரிப்பது பற்றி சிந்திக்கலாம் என்றும் கூறியிருந்தோம். இரணில் பிரதம மந்திரியாகப் பதவி வகிக்க முன்வந்தபோதே தனியார்  தொலைக்காட்சியின்  கேள்விகளுக்குப் பதில் அளிக்கும் முகமாக எமது எதிர்பார்ப்புக்கள் பற்றிக் கூறியிருந்தேன். மூன்று நிபந்தனைகளை விதித்து அவற்றிற்கு தீர்வு கொண்டு வந்தால் அவருடன் சேர்ந்து பயணிக்க முடியும் என்றும் கூறியிருந்தேன். ஜனாதிபதித் தேர்வில் இரணிலும் சஜீத்தும் என்னை நாடி எனது ஆதரவை வேண்டி நின்றார்கள். நான் ஜூலை 19ந் திகதி பாராளுமன்றம் வரும் போது எமது கோரிக்கைகளை முன் வைப்பேன் என்று இருவரிடமும் கூறியிருந்தேன். அன்று சஜீத் போட்டியில் இருந்து விலகிக் கொண்டார். டலசோ, அனுர குமாரவோ என்னுடன் தேர்தல் சம்பந்தமாகப் பேசவுமில்லை, ஆதரவு கேட்கவுமில்லை. சஜீத் கூட டலசுக்காக ஆதரவு கேட்கவில்லை.

19ந் திகதி இரணிலே என் பாராளுமன்ற இருக்கை தேடி வந்து நாங்கள் சந்திக்க வேண்டும் என்றார். அவரின் காரியாலய அறைக்கு நானே வருவதாகக் கூறி அங்கு சென்று சந்தித்தேன். ஆறு தமிழ்த் தேசியக் கட்சிகள் தயாரித்த எமது கோரிக்கைக் கடிதத்தை அவரிடம் கையளித்தேன். பலதையும் பற்றிப் பேசினோம். கோவா, பாண்டிச்சேரி பற்றி இந்திய அரசியல் யாப்பில் கூறப்பட்டவற்றை ஆராய்ந்து வருவதாகக் கூறினார். அதாவது இந்திய அரசியல் யாப்பின் அடிப்படையில் இங்கு மாற்றங்களை அறிமுகப்படுத்த முடியுமா என்பதை ஆராய்வதாகக் கூறினார். பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கல், தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்தல், காணி அபகரிப்புக்களை நிறுத்துதல், இராணுவத்தினரின் தொகையை அரைவாசியாகக் குறைத்து காலக்கிரமத்தில் முழுமையாக நீக்கல் போன்ற பலதையும் படிப்படியாகத் தான் செய்வதாகக் கூறினார். மொத்தத்தில் எமது கோரிக்கைகளை நிறைவேற்றுவதில் அவர் எதிர்ப்பேதும் தெரிவிக்கவில்லை. எனது பல கேள்விகளுக்குப் பொருத்தமான பதில்கள் தந்தார். தான் தனது பதவிக் காலத்தில் செய்யப் போகின்றவற்றை விவரித்தார். அவரின் கூற்றுக்களை நான் ஏற்றுக் கொண்டேன். அவருக்கு ஆதரவு அளிப்பது எமது மக்களுக்கு நன்மையையே தரும் என்ற எனது முடிவின் அடிப்படையிலேயே இரணிலுக்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவிக்க முன்வந்தேன். வெளிப்படையாக எனது ஆதரவையும் தெரிவித்தேன்.

  1. கேள்வி: ரணில் விக்கிரமசிங்காவும் பதவி விலக வேண்டும் எனக் கோரிக்கை முன் வைக்கப்படுவதோடு அவரை ஆதரித்த தங்களிற்கு எதிராகவும் போராடும் நிலைமை ஏற்படும் என சமூக ஊடகங்களில் தெரிவிக்கப்படுவது தொடர்பில் என்ன கருதுகின்றீர்கள்?

பதில்: இந்தத் தருணத்தில் இரணிலைப் பதவியில் இருந்து நீக்குவது நாட்டுக்கு நன்மை தராது. அதை நாம் மறத்தலாகாது. மேற்கையும் கிழக்கையும் சமாளித்துச் செல்லும் வல்லமை உடையவர் அவர். முதலில் கோட்டா கோ ஹோம், அடுத்து இரணில் கோ ஹோம்; நீங்கள் சொல்வதைப் பார்த்தால் அதற்கு அடுத்தது “விக்கி கோ ஹோம்” என்று பல்லவி மாறப் போவதாகத் தெரிகின்றது. இவை எல்லாம் விகடமாகத் தெரியவில்லையா? சமூக ஊடகங்கள் நினைப்பது போல் ஒருவர் நடந்து கொள்ளாவிடில் ஒன்றில் அவரைப் பைத்தியக்காரர் என்பார்கள் அல்லது பயங்கரவாதி என்பார்கள் அல்லது தீவிரவாதி என்பார்கள் அல்லது “வீட்டுக்குப் போ” என்பார்கள். நான் ஏற்கனவே என் வீட்டில்த் தான் இருக்கின்றேன். என்னை எங்கு துரத்தப் பார்க்கின்றார்கள்? பாராளுமன்றத்தில் இரணிலை ஆதரித்த 132 பேரையும் வீட்டுக்கு அனுப்பப் போகின்றார்களா? சமூக ஊடகங்களுக்கு எம்மை வீட்டுக்கு அனுப்பும் இந்த உரித்தை யார் கொடுத்தார்கள்? வீட்டுக்குப் போவதை நிறுத்தி இனி நாம் எல்லாம் வேலைக்குப் போகக் கற்றுக் கொள்வோம்.

  1. கேள்வி: ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அழைத்தால் அமைச்சரவையில் பங்குகொள்வீர்களா?

பதில்: அதை முடிவு செய்வது எனது கட்சி. எம்மக்களுக்கு எது நன்மை பயக்குமோ அதன் அடிப்படையில் அவர்களின் தீர்மானம் இருக்கும் என்று  நம்புகின்றேன்.

  1. கேள்வி: மாகாண முதலமைச்சராக இருந்த காலத்தில் ரணிலை நம்ப முடியாது அவர் ஒரு பொய்யர் எனத் தெரிவித்த நீங்கள் தற்போது எதன் அடிப்படையில் நம்பினீர்கள்?

பதில்: அப்போது அவர் என்னை ஒரு பொய்யர் என்று கூறினார். உண்மையில் பொய் கூறியது அவரே. என்னையும், திரு சம்பந்தனையும், திரு சுமந்திரனையும் மலிக் சமரவிக்ரமவின் வீட்டில் 2015ம் ஆண்டு ஜனவரி மாதம் 9ந் திகதி சந்தித்தும் அப்படி எதுவும் நடக்கவில்லை என்று சிங்கள மக்களுக்குத் தெரிவிக்க வேண்டிய அரசியல் இடர்நிலை அவருக்கு அன்று இருந்தது. உண்மையை வெளியிட அப்போது திரு சம்பந்தனும் திரு சுமந்திரனும் கூட முன்வரவிலை. என்னுடனும் உண்மை நிலையுடனும் நில்லாது பொய்மையுடனும் திரு. இரணிலுடனும் நின்று மௌனம் காத்தார்கள்.

ஆனால் அதன் பின்னர் பல வருடங்கள் சென்று விட்டன. இரணிலை ஒரு குள்ள நரி என்று இன்றும் பலர் கூறுகின்றார்கள்.
ஆனால் அதற்கு அப்பால் சென்று எமது மக்களின் கோரிக்கைகளை எழுத்தில் இட்டு அவரிடம் கையளித்து அவற்றின் அடிப்படையில் நாங்கள் கருத்துப் பரிமாறிக் கொண்டோம். 15 நிமிடங்களுக்கு மேலாக நாம் கருத்துப் பரிமாறிக் கொண்டோம். அவர் தன் பதவிக் காலத்தில் இந்த நாட்டின் பிரச்சனைகளை சுமூகமாகத் தீர்த்து பொருளாதார ரீதியாக நாட்டைக் கட்டி எழுப்ப வேண்டும் என்ற கனவில் இருந்ததை நான் புரிந்து கொண்டேன். எவ்வெவெற்றை செய்யவிருக்கின்றார் என்பதை அவர் மனம் விட்டுப் பேசினார். அவர் பொய் பேசியிருக்கக் கூடும் ஆனால் அவரின் சிந்தனைகளின் பரந்த வீச்சு, நினைத்ததைச் செய்து முடிப்பேன் என்ற திடசங்கற்பம் ஆகியன என்னைக் கவர்ந்தன. ஒருவரை நம்புவது அவ்வளவு பெரிய குற்றமா என்ன? கொடுத்த வாக்கை அவர் காப்பாற்றா விட்டால் அதன் பெறுபேறு அவருக்குரியது எனக்குரியது அல்ல எனப் பதிலளித்தார்.