முன்மொழியப்பட்டுள்ள புதிய முதலீட்டு சட்டமூலத்தை வரைவதில் வெளிநாட்டு முதலீட்டை ஊக்குவிப்பதில் நிபுணத்துவ அறிவை வழங்க வியட்நாம் இணக்கம் தெரிவித்துள்ளது.
பிரதமர் தினேஷ் குணவர்தனவுக்கும் வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் கலாநிதி புய் வான் கிம் உள்ளிட்ட தூதுக்குழுவினருக்கும் இடையிலான சந்திப்பின்போதே இவ்விடயம் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
வியட்நாமின் சுதந்திரப் போராட்டத்தின் பின்னர் அந்த நாடு அடைந்த விரைவான பொருளாதார வளர்ச்சியை பிரதமர் இதன்போது பாராட்டினார்.
வெளிநாட்டு முதலீடுகளை வெற்றிகரமாக ஈர்ப்பதற்காக வியட்நாம் பின்பற்றிய புதிய வழிமுறைகளைப் பாராட்டிய பிரதமர், இலங்கை விரைவில் புதிய வெளிநாட்டு முதலீட்டுச் சட்டமூலத்தை வரைய திட்டமிட்டுள்ளதால், அதற்காக வியட்நாமின் நிபுணத்துவ அறிவை எதிர்பார்ப்பதாகக் கூறினார்.
பிரதமரின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட கலாநிதி புய் வான் கிம், இலங்கையை வியட்நாம் ஒரு சிறப்பான நட்பு நாடாகக் கருதுவதாகவும், இருதரப்பு வர்த்தகம், முதலீடு, சுற்றுலா மற்றும் கலாசார உறவுகளை மேலும் விரிவுபடுத்துவதற்கு பெரும் வாய்ப்புகள் இருப்பதாகவும் தெரிவித்தார்.
வியட்நாமின் அரிசி மையமாக அறியப்படும் அரிசி மற்றும் பிற விவசாயப் பொருட்களுக்கு பெயர் பெற்ற வின் லாங் மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் தனக்கு மாகாண மட்டத்தில் ஒத்துழைப்பை ஏற்படுத்த முடியும் என்றும், இதனால் இலங்கையின் மாகாணங்கள் பரஸ்பர நன்மைகளைப் பெற முடியும் என்றும் அவர் கூறினார்.
வர்த்தகம், சுற்றுலா, கைத்தொழில், விவசாயம், கலாசாரம், கல்வி, முதலீடு மற்றும் சுற்றுலா வர்த்தகம் உள்ளிட்ட வணிக மற்றும் பொருளாதார நடவடிக்கைகள் போன்ற துறைகளில் இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்தும் வியட்நாம் பிரதிநிதிகள் கலந்துரையாடினர்.
தூதுக்குழுவின் தலைவரான கலாநிதி புய் வான் கிம், வியட்நாம் அரசாங்கத்தின் அமைச்சரவை அமைச்சருக்கு நிகரான அதிகாரங்களைக் கொண்ட வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சி உயர்பீடத்தின் சிரேஷ்ட உறுப்பினர் ஆவார்.
இந்த உயர்மட்ட தூதுக்குழுவில் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சு மற்றும் மத்திய வெளியுறவு ஆணைக்குழு அதிகாரிகள் உள்ளிட்ட சிரேஷ்ட வியட்நாமிய அரச அதிகாரிகள் இடம்பெற்றிருந்தனர்.