மக்கள் தொடர்ச்சியாக அனுபவித்து வரும் அநீதிகளையும், நீதி மறுக்கப்படுவதையும் உலகத்தின் கவனத்திற்கு மீண்டும் கொண்டு வரும் நோக்கத்துடனும், எமது மக்களின் காணிகள் அபகரிக்கப்பட்டு அவற்றில் பௌத்த விகாரைகள் அமைக்கப்படுவதை கண்டித்தும், மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல் தரவையை ஆக்கிரமித்து இருப்போரை வெளியேற்றக் கோரியும், எமது தாயகமான வட- கிழக்கு மாகாணங்களில் ஹர்த்தால் எனப்படும் ஒரு பொது முடக்கத்திற்கு தமிழ்த் தேசியக் கட்சிகளாகிய நாம் ஒன்றிணைந்து அழைப்பு விடுக்கின்றோம்.
கிழக்கை தளமாகக் கொண்டு இயங்கும் முஸ்லிம் அரசியல் கட்சிகளும் இதற்கு ஆதரவு தர முன்வந்துள்ளன. இந்நிலையில், வெள்ளிக்கிழமை நிகழவுள்ள இந்த பொது முடக்கத்திற்கு, வட- கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழ் பேசும் மக்களின் ஆதரவையும் ஒத்துழைப்பையும் நாம் உரிமையுடன் வேண்டுகின்றோம்.
மேலும், எம் மக்கள் மத்தியில் செயற்பட்டுக் கொண்டிருக்கும் மனித உரிமை இயக்கங்கள், பல்கலைக்கழக மாணவர் ஒன்றியங்கள் உட்பட மாணவர் அமைப்புக்கள், மகளிர் உரிமை நிறுவனங்கள், தொழிற்சங்கங்கள், வணிகர் கழகங்கள், சிவில் சமூக சங்கங்கள் மற்றும் மத ஸ்தாபனங்கள் உட்பட, பல்துறை சார்ந்த செயற்பாட்டு அமைப்புக்களின் ஆதரவையும் பங்களிப்பையும் இந்த மக்கள் போராட்டத்தில் நாம் நாடி நிற்கின்றோம் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கைத் தமிழரசுக் கட்சி , தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (ரெலோ), தமிழ் ஈழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்), தமிழ் மக்கள் கூட்டணி , ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழ்த் தேசியக் கட்சி, ஜனநாயகப் போராளிகள் கட்சி , ஈழத் தமிழர் சுயாட்சிக் கழகம் ஆகியன இணைந்து அறிக்கை வெளியிட்டுள்ளது.