இந்திய கடற்தொழிலாளர்களின் நியாயப்படுத்தல்களை ஏற்றுக்கொள்ள முடியாது – இலங்கை கடற்படை

இந்திய கடற்றொழிலாளர் கைது காரணமாக கச்சத்தீவு திருவிழாவை புறக்கணித்தோம் என்ற இந்திய கடற்றொழிலாளர்களின் நியாயப்படுத்தலை ஏற்றுக்கொள்ள முடியாது என சிறிலங்கா கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா தெரிவித்தார்.

இதேவேளை நாட்டின் சட்டத்துக்கு அமைவாகவே நாங்கள் செயற்படுகிறோம். அடுத்த ஆண்டு திருவிழாவுக்கு முன்னர் இந்தப் பிரச்சினைக்கு சுமுகமான தீர்வு எட்டப்படும் என்று எதிர்பார்க்கிறேன் என அவர் மேலும் குறிப்பிட்டார்.

கச்சத்தீவு புனித அந்தோனியார் திருவிழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் கடற்படை தளபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இலங்கையில் தேசிய நல்லிணக்கத்துக்கு கச்சத்தீவு புனித அந்தோனியார் திருவிழா சிறந்த எடுத்துக்காட்டாக காணப்படுகிறது.

இனம், மதம், மொழி என்ற அடிப்படையில் எவ்வித வேறுபாடுகளுமில்லாமல் இலங்கையர் என்ற அடிப்படையில் நாட்டு மக்கள் அனைவரும் இந்த திருவிழாவில் கலந்துகொண்டதையிட்டு மகிழ்ச்சியடைகிறேன்.

இந்திய மற்றும் இலங்கையின் உறவின் பாலமாக இந்த திருவிழா அடையாளப்படுத்தப்படுகிறது. இந்திய கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்படுவதால் கச்சத்தீவு திருவிழாவை புறக்கணிப்பதாக இந்திய கடற்றொழிலாளர்கள் குறிப்பிடும் நியாயப்படுத்தலை ஏற்றுக்கொள்ள முடியாது.

இலங்கை – இந்திய கடற்றொழிலாளர் பிரச்சினை பல ஆண்டுகாலமாக தொடர்கிறது. இதற்கு பேச்சுவார்த்தைகள் ஊடாக தீர்வு காண வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உள்ளோம். என தெரிவித்தார்.