இந்திய மக்களவை உறுப்பினர் சசி தரூர் – சஜித் இடையில் சந்திப்பு

இந்தியாவின் புகழ்மிக்க புத்திஜீவியும்,திருவனந்தபுரத்துக்கான மக்களவை உறுப்பினருமான கலாநிதி சசி தரூருக்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையிலான சந்திப்பொன்று புதன்கிழமை (01) இடம்பெற்றது.

ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்த தேசிய அறிஞர்கள் பேரவையின் ஏற்பாட்டில் “அரச ஆளுகையின் தீர்க்கமான அம்சங்கள்”குறித்து கலந்துரையாடும் பயிலரங்குத் தொடரின் மற்றுமொரு கட்டமாகவே இச்சந்திப்பு இடம்பெற்றது.

2015 ஆம் ஆண்டு ஒக்ஸ்பேர்ட் (oxford ) பல்கலைக்கழகத்தில் கலாநிதி சசி தரூர் ஆற்றிய உரை இந்திய அரசியலிலும் இந்திய சமூகத்திலும் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியதோடு, இன்றும் பல இந்தியர்கள் குறித்த பேச்சை நூற்றாண்டின் பேச்சாகவும்  கருதுகின்றனர்.

ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தில் உயர் பதவிகளை வகித்த அவர், சிறந்த இராஜதந்திரியாகவும் மதிக்கப்படுகிறார். இச்சந்திப்பில் பல்வேறு முக்கிய விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டதுடன், சூழலியல் சுற்றுலா முறைமை தொடர்பில் இரு தரப்பினருக்கும் இடையில் யோசனைகள் பரிமாறப்பட்டன.

இந்திரா காந்தி ஆரம்பித்த இந்தியாவில் புலிகளைப் பாதுகாக்கும் திட்டம் (Project Tiger) மற்றும் இதன் மூலம் ஏற்பட்ட “சுற்றுச்சூழல் சுற்றுலாத் துறையின்” வளர்ச்சி குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது. இதேபோன்றதொரு திட்டமாக சஜித் பிரேமதாச அவர்களால் ஆரம்பிக்கப்பட்ட Project Leopard  எனும் இலங்கை சிறுத்தையை பாதுகாக்கும் திட்டம் குறித்தும் கருத்துக்கள் பரிமாறப்பட்டன.

இது மட்டுமல்லாது,நாட்டின் தற்போதைய பொருளாதார நிலை மற்றும் இதற்கு பிராந்திய ரீதியாக எடுக்கக்கூடிய முனைப்பு குறித்தும் இரு தரப்பினரும் கருத்துகளை பரிமாறிக் கொண்டதோடு,

ஒவ்வோர் துறைகளையும் ஒருங்கிணைக்கும் வேலைத்திட்டத்தின் ஊடாக நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மையைக் கட்டியெழுப்ப தாம் உட்பட ஐக்கிய மக்கள் சக்தி கொண்டிருக்கும் தொலைநோக்குப் பார்வை குறித்தும் சஜித் பிரேமதாச அவர்கள் இந்தியப் பிரதிநிதிகளுக்கு விளக்கமளித்தார்.