இலங்கை – இந்தியாவுக்கு இடையில் மீண்டும் பயணிகள் கப்பல் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
நாகப்பட்டினத்திற்கும் காங்கேசன்துறைக்கும் இடையிலான பயணிகள் கப்பல் சேவை கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் ஆரம்பிக்கப்பட்டு பின்னர் ஒரே வாரத்தில் நிறுத்தப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் அந்த பயணிகள் கப்பல் சேவை இயக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியா மற்றும் இலங்கை இடையே கப்பல் போக்குவரத்து ஏற்படுத்த வேண்டும் என்று பல ஆண்டுகளாக கோரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் நாகப்பட்டினத்திலிருந்து செரியபாணி என்ற கப்பல் சேவையை இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆரம்பித்து வைத்தார்.
ஆனால் மழை மற்றும் போதியளவு பயணிகள் பயணிக்காமை உள்ளிட்ட காரணங்களால் ஒரே வாரத்தில் இந்த கப்பல் சேவை ரத்து செய்யப்பட்டது.
இந்த நிலையில் தற்போது வந்த தகவலின் படி மீண்டும் நாகப்பட்டினத்திற்கும் காங்கேசன்துறைக்கும் இடையே கப்பல் போக்குவரத்து தொடங்கப்படவுள்ளது.
அந்தமானில் தயாரிக்கப்பட்ட சிவகங்கை என்ற கப்பல் நாகை – இலங்கை இடையே பயணம் செய்ய இருப்பதாகவும் எதிர்வரும் மே மாதம் 13ஆம் திகதி முதல் இந்த சேவை மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
குறித்த கப்பலில் இரண்டு தளங்கள் உள்ளதாகவும், அதன் கீழ் தளத்தில் பயணிக்க 5000 இந்திய ரூபாவும், மேல் தளத்தில் பயணிக்க 7000 இந்திய ரூபாவும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.