காங்கேசன்துறைமுக அபிவிருத்திக்கு இந்தியாவினால் 61.5 மில்லியன் டொலர் நிதி உதவி

இலங்கை துறைமுக அதிகாரசபைக்குச் சொந்தமான யாழ். காங்கேசன்துறை துறைமுகத்தின் முழுமையான அபிவிருத்திக்கு 61.5 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதற்கு இந்திய அரசாங்கம் விருப்பம் தெரிவித்துள்ளதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா தெரிவித்தார்.

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மற்றும் துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து, விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா ஆகியோருக்கிடையில் அண்மையில் அமைச்சு அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த விடயங்களை தெரிவித்தார்.

இந்த அபிவிருத்தி திட்டத்தின் கீழ், துறைமுகத்தின் உட்பகுதியை 30 மீற்றர் ஆழப்படுத்தவும், துறைமுகத்தில் பாரிய கப்பல்கள் மற்றும் படகுகள் தரித்து நிற்பதற்கு புதிய அலைத் தடுப்பு அணையை கட்டவும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான பிராந்திய ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கும் அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகளை இலங்கைக்கு ஈர்ப்பதற்கும் இந்தியா பூரண ஆதரவை வழங்கும்.

இந்திய சுற்றுலாப் பயணிகளுக்கு உகந்த இடமாக இலங்கையை இந்தியா பெயரிட்டுள்ளது. எனவும் இந்திய உயர்ஸ்தானிகர் தெரிவித்தார்.

விமானம் மற்றும் கப்பல் போக்குவரத்து ஆகிய துறைகளில் இந்திய அரசு இலங்கைக்கு அளித்து வரும் ஆதரவுக்கு இலங்கை அரசும், தனது அமைச்சும் நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும், சென்னைக்கும் யாழ்ப்பாணத்துக்குமிடையே விமான சேவை தொடங்குவது மிகவும் சிறந்த விடயமென்றும் இதன்போது அமைச்சர் நிமல் சிறிபால டிசில்வா தெரிவித்தார்..

இந்திய சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக காங்கேசன்துறை துறைமுக வளாகத்தில் 600 மில்லியன் ரூபா செலவில் நவீன முனையம் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அமைச்சர், கடந்த 09 மாதங்களில் அதிகளவான இந்திய சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

Posted in Uncategorized

இலங்கைக்கான இந்தியத் தூதுவர் காங்கேசன்துறைக்கு விஜயம்

இலங்கைக்கான இந்திய தூதுவர் ஸ்ரீ சந்தோஷ் ஜா இன்றையதினம் யாழ்ப்பாணத்திற்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றினை மேற்கொண்டுள்ளார்.

இந்த விஜயத்தின் போது அவர் யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளையும் பார்வையிட்டு வருகின்றார். அந்த வகையில் காங்கேசன்துறை துறைமுகத்தினை பார்வையிட்டுள்ளார்.

இதன்போது யாழ்ப்பாண இந்திய துணை தூதரகத்தின் துணை தூதுவர் ராகேஷ் நடராஜ் ஜெய பாஸ்கரன் உள்ளிட்ட இந்தியத் துணைத் தூதரகத்தின் குழுவினரும் உடன் இருந்தனர்.

நாகை- காங்கேசன் கப்பல் சேவை இரு நாட்டு உறவை வலுப்படுத்தும் – பாரதப் பிரதமர் நரேந்திர மோடி

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான இராஜ தந்திர மற்றும் பொருளாதார உறவுகளில் ஒரு புதிய அத்தியாயத்தை நாம் ஆரம்பித்துள்ளோம். நாகப்பட்டினத்துக்கும் காங்கேசன்துறைக்கும் இடையில் படகுச் சேவை ஆரம்பிக்கப்பட்டமை எமது உறவுகளை வலுப்படுத்தும் ஒரு முக்கியமான மைல்கல். இந்த முக்கியமான சந்தர்ப்பத்தில் உங்களுடன் இணைவது எனது பாக்கியம் என இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

தமிழகத்தின் நாகப்பட்டினத்துக்கும் காங்கேசன்துறைக்கும் இடையிலான பயணிகள் கப்பல் சேவையை பிரதமர் நரேந்திர மோடி காணொலிக்காட்சி மூலம் புதுடில்லியில் இருந்தபடி நேற்று காலை ஆரம்பித்து வைத்து உரையாற் றுகையிலேயே மேற்கண்டவாறு தெரி வித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்- இந்தியாவும் இலங்கையும் கலாசாரம், வர்த்தகம் மற்றும் நாகரீகத்தின் ஆழமான வரலாற்றைப் பகிர்ந்து கொள்கின்றன.

நாகப்பட்டினம் மற்றும் அருகிலுள்ள நகரங்கள் இலங்கை உள்பட பல நாடுகளுடன் கடல் வணிகத்திற்கு நீண்ட காலமாக அறியப்படுகின்றன. பண்டைய தமிழ் இலக்கியங்களில் பூம்புகார் துறைமுகம் ஒரு மையமாக குறிப்பிடப் பட்டுள்ளது. சங்க கால இலக்கியங்களான பட்டினப்பாலை, மணிமேகலை போன்றவை இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையே செல்லும் படகுகள் மற்றும் கப்பல்கள் பற்றி பேசுகின்றன.

மகா கவிஞர் சுப்பிரமணிய பாரதி தனது ‘சிந்து நதியின் மிசை’ பாடலில், நமது இரு நாடுகளையும் இணைக்கும் பாலம் பற்றிப் பேசியுள்ளார். இந்த படகு சேவையானது அந்த வரலாற்று மற்றும் கலாசார தொடர்புகளை உயிர்ப்பிக்கிறது.

இலங்கை ஜனாதிபதி விக்கிரமசிங்கவின் சமீபத்திய விஜயத்தின்போது, எமது பொருளாதார பங்காளித்துவத்திற்கான தொலைநோக்கு ஆவணத்தை கூட்டாக ஏற்றுக்கொண்டோம். இணைப்பு என்பது இந்தக் கூட்டாண்மையின் மையக் கருப்பொருள். இணைப்பு என்பது இரு நகரங்களை நெருக்கமாகக் கொண்டு வருவது மட்டுமல்ல.

இது நம் நாடுகளை நெருக்கமாகவும், நம் மக்களை நெருக்கமாகவும், நம் இதயங்களை நெருக்கமாகவும் கொண்டு வருகிறது. இணைப்பு வர்த்தகம், சுற்றுலா மற்றும் மக்கள்-மக்கள் உறவுகளை மேம்படுத்துகிறது. இது இரு நாட்டு இளைஞர்களுக்கும் வாய்ப்புகளை உருவாக்குகிறது. 2015 ஆம் ஆண்டில் நான் இலங்கைக்கு விஜயம் செய்ததைத் தொடர்ந்து, டில்லிக்கும் கொழும்புக்கும் இடையே நேரடி விமான சேவை தொடங்கப்பட்டதை நாங்கள் கண்டோம்.

பின்னர், இலங்கையிலிருந்து புனித யாத்திரை நகரமான குஷிநகரில் முதல் சர்வதேச விமானம் தரையிறங்கியதைக் கொண்டாடினோம்.

சென்னை மற்றும் யாழ்ப்பாணம் இடையே நேரடி விமான சேவை 2019 இல் தொடங்கியது. இப்போது, நாக பட்டினம் மற்றும் காங்கேசன்துறை இடையே படகு சேவை மற்றொரு முக்கியமான படியாகும். – என்றார்.

40 வருடங்களின் பின்னர் யாழ்ப்பாணம் – நாகப்பட்டினம் இடையே கப்பல் சேவை ஆரம்பம்

தமிழகத்தின் நாகப்பட்டினத்திற்கும் யாழ்ப்பாணம் காங்கேசன்துறைக்கும் இடையிலான பயணிகள் கப்பல் சேவை உத்தியோகபூர்வமாக இன்றைய தினம் சனிக்கிழமை ஆரம்பமானது. நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து காலை, 50 பயணிகள் மற்றும் ஊழியர்களுடன் காங்கேசன்துறையை நோக்கி தனது பயணத்தை ஆரம்பித்த கப்பல் மதியம் 12.20 மணியளவில் காங்கேசன்துறையை வந்தடைந்தது.

கப்பலின் வரவேற்பு நிகழ்வில் கப்பல்துறை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ், யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் அ.சிவபாலசுந்தரன், யாழ்ப்பாணம் இந்திய துணை தூதுவர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் துறைசார் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

காங்கேசன்துறை துறைமுகத்தில் இருந்து மதியம் 1.20 மணியளவில் மீண்டும் நாக பட்டினத்திற்கு 31 பயணிகளுடன் தனது பயணத்தை ஆரம்பித்த கப்பலை இந்திய துணைத் தூதுவர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன் பச்சை கொடி அசைத்து வழியனுப்பி வைத்தார்.

நாகப்பட்டினத்துக்கும் காங்கேசன்துறைக்குமிடையிலான கப்பலில் பயணம் மேற்கொள்வதற்கு ஒருவருக்கு ஒருவழிக் கட்டணமாக 27,000 ரூபாவும் இருவழிக்கட்டணமாக 53,500 இலங்கை ரூபாவும் அறவிடப்படவுள்ளதுடன், 50 கிலோகிராம் வரை இலவசமாக பொருட்களை எடுத்துச்செல்லலாம்.

இறுதியாக 1984 ஆம் ஆண்டு தலைமன்னாருக்கும் இராமேஸ்வரத்திற்கும் இடையில் கப்பல் சேவை இடம்பெற்றிருந்த நிலையில் நாட்டில் நிலவிய உள்நாட்டு யுத்தத்தை தொடர்ந்து கப்பல் சேவைகள் இடைநிறுத்தப்பட்ட நிலையில் யுத்தம் முடிவடைந்து 14 வருடங்களின் பின்னர் மீண்டும் கப்பல் சேவை ஆரம்பமாகியுள்ளது. அதனால் 40 வருடங்களின் பின்னர் இலங்கைக்கும் தமிழகத்திற்கும் இடையில் கப்பல் சேவை மீண்டும் ஆரம்பமாகியுள்ளது.

காங்கேசன்துறை- நாகப்பட்டினம் கப்பல் சேவை: பரீட்சார்த்தமாக யாழ் வந்த செரியாபாணி

தமிழகம் நாகப்பட்டினம் காங்கேசன்துறையிடையிலான செரியாபாணி என்ற பெயரைக் கொண்ட பயணிகள் கப்பல் சேவை எதிர்வரும் பத்தாம் திகதி ஆரம்பமாக உள்ள நிலையில் இன்றைய தினம் பரீட்யாசார்த்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.

அதன் பிரகாரம் இன்று காலை இந்தியாவின் நாகப்பட்டினத்தில் இருந்து புறப்பட்ட செரியாபாணி எனும் குளிர் ஊட்டப்பட்ட கப்பல் மதியம் 1.15 மணியளவில் காங்கேசன்துறை துறைமுகத்தை வந்தடைந்திருந்தது

இந்த கப்பலில் பணியாற்றும் 14 பணியாளர்கள் மட்டுமே இந்த பரிச்சாத்த நடவடிக்கைகளின் போது வருகை தந்திருந்தனர். இவ் பரீட்சார்த்த நடவடிக்கைகளின் போது கப்பல் சேவைக்கு பயன்படுத்தப்படும் கடல் பாதை, கடல் மற்றும் காலநிலை நிலவரம் சகல விடயங்களும் கணக்கெடுக்கப்பட்டது.

பரீட்சார்த்த நடவடிக்கை வெற்றிகரமாக மேற்கொண்டமையை முன்னிட்டு கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.சுமார் அரை மணி நேரம் தரித்து நின்ற பின்னர் மதியம் 1.45 மணியளவில் மீண்டும் இக்கப்பல் நாகப்பட்டினம் நோக்கி புறப்பட்டது.

நாகப்பட்டினம் இலங்கையிலேயே பயணிக்க இருவழிக் கட்ணமாக 53500 ரூபாயும், ஒருவழிக் கட்டணமீக 27,000ரூபாயும் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அத்துடன் பயணிகள் தங்களுடன் 40 கிலோ வரை உள்ள பொருட்களைக் கொண்டு செல்ல அனுமதிக்கப்படுகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கப்பல் சேவையின் மூலம் நாகப்பட்டினத்தில் இருந்து வரும் 3 மணி நேரத்தில் இலங்கை சென்றடைய முடியும்.

இந்தியா – இலங்கை இடையே படகு சேவைக்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் விரைவில் அனுமதிக்கும் – தமிழக அமைச்சர் எ.வ வேலு

வெளியுறவு அமைச்சகம் பச்சைக்கொடி காட்டியுள்ளதால் இந்தியா – இலங்கை இடையே விரைவில் படகு சேவை தொடங்க நாகப்பட்டினம் துறைமுகம் தயாராகி வருகிறது என்று அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.

குஜராத் மாநிலம் கெவடியாவில் 19-வது கடலோர மாநிலங்கள்மேம்பாட்டுக் குழுமக் கூட்டம் நேற்று நடந்தது. மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் துறை அமைச்சர் சர்பானந்த சோனவால் தலைமையில் நடந்த கூட்டத்தில் கடலோர மாநிலங்களின் துறைமுக அமைச்சர்கள், மத்திய, மாநில அரசுகளின் அலுவலர்கள், கடல்சார் வாரிய அலுவலர்கள் பங்கேற்றனர்.

தமிழகத்தின் சார்பில் இக்கூட்டத்தில் பங்கேற்ற தமிழக பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு பேசியதாவது: தமிழகம் கிழக்கு மற்றும் மேற்குப் பகுதியில் நுழைவாயிலுடன் கூடிய தனித்துவமான கடற்கரையைக் கொண்டுள்ளது. அதன் கடல்சார் மற்றும் துறைமுகத் துறையைவலுப்படுத்த உறுதி பூண்டுள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் சாகர்மாலாதிட்டத்தின் கீழ், மானியமாக தமிழக கடல் சார் வாரியத்துக்கு ரூ.120 கோடி நிதியுதவி அளித்த மத்திய அமைச்சர், மத்திய அரசுக்குநன்றி.

இந்தியாவை சர்வதேச அளவில்இணைக்கும் வகையில் இலங்கைக்கு தொடங்கவுள்ள முதன்மையான படகு சேவைக்கு வெளியுறவுஅமைச்சகம் பச்சைக்கொடி காட்டியுள்ளது. இது நாடுகளுக்கிடையே உள்நாட்டு மற்றும் வெளி நாட்டு சுற்றுலாப் பயணிகளின் போக்குவரத்தை அதிகரிப்பது மட்டுமல்லாமல், வர்த்தகத்தையும் மேம்படுத் தும்.

இப்படகு சேவையை விரைவில் தொடங்குவதற்கு நாகப்பட்டினம் துறைமுகம் தயாராகி வருகிறது.ராமேசுவரம் மற்றும் தலைமன்னார் இடையே படகு சேவையை புதுப்பிப்பதற்கான ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளதுடன், அதற்கான விரிவான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 1980-ம் ஆண்டு வரை செயல்பாட்டில் இருந்த இந்தியா – இலங்கை இடையிலான பாரம்பரிய கடல்வழிகளை புதுப்பிக்கும் வகையில் இத்திட்டம் இருக்கும்.

கடலோர கடல் வளங்களை பாதுகாப்பது நமது பொறுப்பும், கடமையும் ஆகும். தமிழகத்தின் மத்தியில் உள்ள தொழிற்சாலை பகுதிகளுக்கு தேவையான சரக்குகளை கையாளக் கூடிய வகையில், கடலூர் பகுதியில் பெரும்திறன் கொண்ட பசுமைவளத் துறைமுகத்தை உருவாக்கவும், தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. ஆண்டொன்றுக்கு 10 மில்லியன் மெட்ரிக்டன் சரக்குகளை இத்துறைமுகம்கையாளும் என எதிர்பார்க்கப்படு கிறது. இவ்வாறு அவர் பேசினார்.

காங்கேசன் துறை – நாகபட்டினம் இடையே கப்பல் சேவை விரைவில் ஆரம்பம் – இந்திய துணைத் தூதுவர்

இலங்கை யாழ்ப்பாணம் காங்கேசன்துறைக்கும் – இந்தியா தமிழ்நாடு நாகபட்டினத்திற்கு இடையேயான கப்பல் சேவையினை விரைவில் ஆரம்பமாகவுள்ளதாக யாழ் இந்திய துணைத்தூதுவர் ஸ்ரீமான் ராகேஷ் நடராஜ் தெரிவித்தார்.

வவுனியாவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

ஆரம்பத்தில் காங்கேசன்துறை மற்றும் காரைக்கால் இடையே கப்பல் சேவை ஆரம்பிக்க திட்டமிட்டிருந்த நிலையில் தற்போது கங்கேசன்துறை – நாகபட்டினம் இடையே குறித்த பயணப்பாதை மாற்றப்பட்டமையினாலேயே இவ் தாமதம் ஏற்பட்டது.

குறித்த கப்பல் சேவை தொடர்பில் விரைவில் ஆரம்பிப்பதற்காக தமிழ்நாடு நாகபட்டினத்தில் பயணிகள் இறங்குமிடம் , சுங்கம் போன்ற அமைக்கும் பணிகளை இடம்பெற்று வருகின்றன. அப்பணிகள் நிறைவடைந்தமையுடன் கப்பல் சேவையினை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளோம் . அவ் கப்பல் சேவை தொடர்பிலான நல்லதொரு செய்தியினை மக்களுக்கு விரைவில் அறிவிப்போம் என அவர் மேலும் தெரிவித்தார்.

கொழும்பு – காங்கேசன் துறை ரயில் சேவை அடுத்த மாதம் மீள ஆரம்பம்

அனுராதபுரத்திற்கும் ஓமந்தைக்கும் இடையிலான ரயில் போக்குவரத்து அடுத்த மாதம் மீள ஆரம்பிக்கப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

கொழும்பு கோட்டையிலிருந்து காங்கேசன்துறை வரையான ரயில் சேவைகள் வழமையான நேர அட்டவணையின் அடிப்படையில் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது.

அனுராதபுரத்திற்கும் ஓமந்தைக்கும் இடையிலான ரயில் மார்க்கம் திருத்தப்பணிகளுக்காக கடந்த ஜனவரி மாதம் மூடப்பட்டது.

62 கிலோமீட்டர் தூரம் கொண்ட இந்த ரயில் மார்க்கம் இந்திய கடன் உதவியின் கீழ் 33 பில்லியன் ரூபா செலவில் புனரமைக்கப்பட்டுள்ளது.

புனரமைக்கப்பட்ட ரயில் மார்க்கத்தில் மணித்தியாலத்திற்கு 100 கிலோமீட்டர் வேகத்தில் ரயில்கள் பயணிக்க முடியுமென ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்தியா – யாழ். கப்பல் சேவை தற்போது சாத்தியம் இல்லை

இந்தியா – யாழ்ப்பா ணம் இடையிலான பயணிகள் கப்பல் சேவையை நடத்தும் சாத்தியக்கூறு இந்த ஆண்டு இறுதிவரை இல்லை என்று விமான சேவைகள் மற்றும் கப்பல் துறை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். சென்னையிலிருந்து காங்கேசன்துறை துறைமுகத்துக்கு பயணிகளுடன் முதல் கப்பல் நேற்று வெள்ளிக்கிழமை வந்தது. இந்தக் கப்பலை வரவேற்ற பின்னர் துறைமுக முனையத்தை திறந்து வைத்து உரையாற்றியபோதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

காங்கேசன்துறையில் 25 கோடி ரூபாய் செலவில் பயணிகள் முனையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்தியாவுக்கும் இலங்கைக்குமான உறவு மிகவும் பலமானது. இரு நாடுகளுக்கும் இடையில் கலாசார ரீதியான உறவுகள் மேலும் பலமடைய வேண்டும். இதற்கான வாய்ப்பாக இரு நாடுகளுக்கும் இடையிலான கப்பல் சேவை ஆரம்பம் அமைந்துள்ளது.

எனினும், இந்தியா – காங்கேசன் துறை இடையே பயணிகள் கப்பல் சேவையை ஆரம்பிக்க இன்னும் சில நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டியுள்ளது. அது இந்தஆண்டு டிசெம்பருக்கு முன்னர் பூர்த்தியாகாது. எனினும், இரு நாடுகளுக்கும் இடையிலான கப்பல் சேவையை அடுத்த வருடத்திலாவது ஆரம்பிக்க வசதிகள் செய்யப்படும் – என்றும் கூறினார்.

சென்னை – காங்கேசன் துறை முதலாவது பயணிகள் கப்பல் நாளை மறுதினம்

இந்தியாவில் இருந்து ஒரு தொகுதி பயணிகளுடன் கப்பல் ஒன்று காங்கேசன் துறைமுகத்தை வந்தடையவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி எதிர்வரும் சனிக்கிழமை இந்த கப்பல் காங்கேசன் துறைமுகத்துக்கு வரவுள்ளது.

குறித்த கப்பலை வரவேற்பதற்கு துறைமுகங்கள், விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தலைமையிலான குழு யாழிற்கு விஜயம் மேற்கொள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை காங்கேசன் துறைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பயணிகள் கப்பல் சேவை விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் இதன் முதற்கட்டமாக இந்த பரீட்சாத்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.