கிழக்கு மாகாணத்திற்கான புதிய ஆளுநராக நியமனம் பெற்ற செந்தில் தொண்டமானை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமுமான கோவிந்தன் கருணாகரம் ஜனா இன்றைய தினம் நேரில் சென்று சந்தித்து வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
வடக்கு, கிழக்கு உள்ளிட்ட மூன்று மாகாணங்களுக்கான ஆளுநர்கள் அண்மையில் புதிதாக நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து கிழக்கு மாகாணத்தின் ஆளுநராக இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் நியமிக்கப்பட்டிருந்தார். இன்றைய தினம் திருகோணமலை மாவட்டத்திற்கு சென்று பாராளுமன்ற உறுப்பினர் கோ.கருணாகரம் ஆளுநரைச் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்திருந்தார்.
அத்துடன் ஆளுநரிடம் முதற் கோரிக்கையாக அண்மைக் காலமாக மட்டக்களப்பு மாவட்ட மக்கள் மத்தியில் பேசுபொருளாக இருந்த எழுவான் கரையில் இருந்து படுவான் கரைக்கான பாதைப் பயணத்திற்கு பொதுமக்களிடமிருந்து பணம் அறவிடும் விடயம் தொடர்பில் கலந்துரையாடியிருந்தார்.
முன்னாள் ஆளுநனர் ஏற்கனவே பொருளாதர நிலையில் நலிவுற்றிருக்கும் மக்களைக் கருத்திற் கொள்ளாமல் பாதைப் போக்குவரத்துக்கு கட்டணம் அறவிடுவதற்கான உத்தரவினைப் பிறப்பித்திருந்தார்.
தற்போது புதிய ஆளுநராக வந்திருக்கும் தாங்கள் வறிய நிலை மக்களுக்குள் இருந்து அவர்களின் நன்மை தீமை அனைத்தையும் அனுபவித்து இன்று இந்நிலைக்கு உயர்ந்துள்ள ஒருவர். எனவே எமது மக்களின் நிலைமைகளைக் கருத்திற் கொண்டு முன்னாள் ஆளுநரால் கொண்டுவரப்பட்ட இப்பாதைப் போக்குவரத்திற்கு கட்டணம் அறவிடுகின்ற விடயத்தை நிறுத்தி முன்னர் இடம்பெற்றது போன்றே இலவச சேவையினை வழங்க வேண்டும் என்று பாரளுமன்ற உறுப்பினர் தெரிவித்ததற்கமைவாக இவ்விடயத்திற்குக் கொள்கை அளவில் ஆளுநரால் இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்விடயமானது வீதி அபிவிருத்தித் திணைக்கள மாகாணப் பணிப்பாளர் முன்நிறுத்தி கலந்துரையாடப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது