கஜேந்திரகுமார் எம்.பி இன்று காலை கொழும்பில் அவரது வீட்டில் கைது

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இன்று காலை 5 மணியளவில் அவரது கொழும்பு இல்லத்தில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். மருதங்கேணியில் பொலிஸாருடன் ஏற்பட்ட முரண்பாடு தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டார் என்று பொலிஸார் தெரிவித்தனர். கடமையில் இருந்த பொலிஸாரைத் தாக்கி, அவர்களைக் கடமையைச் செய்யவிடாது நடந்துகொண்டார் என்பதனால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டது.

நேற்று அவரது வீட்டிற்குச் சென்ற பொலிஸார், மருதங்கேணிப் பொலிஸ் நிலையத்தில் இந்தச் சம்பவம் தொடர்பாக அவர் வாக்குமூலம் வழங்கும் வரையில் நாட்டைவிட்டு வெளியேறக் கூடாது என்று கிளிநொச்சி நீதிமன்றம் வழங்கிய உத்தரவை வாசித்துக் காட்டியிருந்தனர். அதன் பின்னர் இன்று காலை அவர் கைது செய்யப்பட்டார். அவரது கைதுக்கு முன்பாக சபாநாயகரின் அனுமதி பொலிஸாரினால் பெறப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.