கூட்டமைப்பின் தலையீட்டினால் பறாளாய் அரச மரத்தை விஞ்ஞானபூர்வ பரிசோதனைக்கு உட்படுத்துமாறு ஜனாதிபதி உத்தரவு

பறாளாய் முருகன் கோயிலின் தலா விருட்சமான அரச மரத்தின் ஆயுட்காலத்தை தீர்மானிக்க விஞ்ஞானரீதியில் ஆராய்ச்சி செய்து, முறையற்ற விதமான வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை மீளப்பெற நடவடிக்கையெடுப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, தமிழ் தேசிய கூட்டமைப்பிடம் வாக்குறுதியளித்துள்ளார்.

அத்துடன், விஞ்ஞானபூர்வமான ஆராய்ச்சிகள் மேற்கொள்ளாமல் எப்படி வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டது என தொல்லியல் திணைக்களத்தினரிடம் விசாரணை நடத்தவும் உத்தரவிட்டார்.

இன்று (9) நாடாளுமன்ற வளாகத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளின் தலைவர்களான த.சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து, பறாளாய் முருகன் கோயில் விடயமாக பேச்சு நடத்தினார்கள்.

இன்று, இந்த விவகாரம் பற்றி இருவரும் தனது கவனத்திற்கு கொண்டு வருவதற்கு முன்னர், இப்படியொரு பிரச்சினை நீடிப்பது தனது கவனத்துக்கு யாராலும் கொண்டு வரப்படவில்லையென ரணில் தெரிவித்தார்.

பறாளாய் முருகன் கோயிலின் வரலாறு சுமார் 300 ஆண்டுகளிற்கு உட்பட்டது என குறிப்பிட்டு, சம்பவத்தின் பின்னணியையும், வரலாற்று சுருக்கத்தையும் த.சித்தார்த்தன் விளக்கமளித்தார்.

இந்த விவகாரத்தில் 2 உண்மைகளில் ஒன்றை ஏற்றுக்கொள்ள வேண்டுமென தமிழ் தேசிய கூட்டமைப்பினர் குறிப்பிட்டனர். இந்த மரம் 300 வருடங்கள் பழமையானது என்பதால், சங்கமித்தை இலங்கைக்கு 300 வருடங்களின் முன்னரே வந்தார், பௌத்தம் 300 வருடங்கள் மாத்திரமே பழமையானது என்பதை நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். அல்லது, இந்த மரம் சங்கமித்தை நாட்டிய மரமல்ல என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டுமென குறிப்பிட்டனர்.

பறாளாய் முருகன் கோயிலின் தல விருட்சமான அரச மரம், சங்கமித்தை நாட்டிய மரமாக இருக்காது என்பதே தனது அபிப்ராயம் என குறிப்பிட்ட ஜனாதிபதி, போர்த்துக்கேயர் இலங்கையை ஆண்டபோது நாட்டிலிருந்த அரசமரங்களையெல்லாம் தறித்து விட்டதாக தெரிவித்தார். அப்படியானால் வர்த்தமானியை மீளப்பெறுமாறு கூட்டமைப்பினர் வலியுறுத்தினர்.

மரத்தின் ஆயுட்காலத்தை அளவிடும் பரிசோதனை மேற்கொள்ள உத்தரவிடுவதாக ஜனாதிபதி குறிப்பிட்டார். அந்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட பின்னரா அது வர்த்தமானியிடப்பட்டது என கூட்டமைப்பினர் கேள்வியெழுப்பினர்.

அப்படியான பரிசோதனையெதுவும் மேற்கொள்ளாமல், இது சங்கமித்தை நாட்டிய மரம் என்ற முடிவிற்கு எப்படி தொல்லியல் திணைக்களம் வந்தது என கூட்டமைப்பினர் கேள்வியெழுப்பினர்.

இதன்மூலம், அந்த வர்த்தமானி இனவாத நோக்கமுடைய, சட்டபூர்வமற்ற வர்த்தமானியென்பது புலப்படுகிறது என்பதையும் சுட்டிக்காட்டினர்.

இதனை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி, தொல்லியல் திணைக்களம் முறையற்ற விதமாக செயற்பட்டுள்ளது என்பதை ஏற்றுக்கொண்டதுடன், அவர்கள் எந்த விஞ்ஞானபூர்வ நடைமுறைகளையும் கடைப்பிடிக்காமல் எப்படி வர்த்தமானியிட்டார்கள் என்பது தொடர்பில் உடனடி விசாரணை நடத்தி அறிக்கையிட, தனது செயலாளர் சமன் ஏக்கநாயக்கவை பணித்தார்.

உடனடியாக வர்த்தமானியை மீளப்பெறுவது, தென்னிலங்கை தரப்பில் எதிர்ப்பை ஏற்படுத்தி, தனக்கு சிக்கலை ஏற்படுத்தும் என்பதால், உடனடியாக மரத்தின் ஆயுட்காலத்தை கண்டறியும் சோதனை நடத்தி, வர்த்தமானியை மீளப்பெற நடவடிக்கையெடுப்பதாக ஜனாதிபதி உறுதியளித்தார்.

இராணுவத்தினரின் தகவலுக்கமையவே தொல்லியல் திணைக்களத்தினர் இந்த வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டார்கள் என்ற தகவலையும் கூட்டமைப்பினர் சுட்டிக்காட்டியிருந்தனர்.