சீனாவின் உரங்களுக்கு 6.9 மில்லியன் டொலர்கள் – தலைவிரித்தாடும் ஊழல் மோசடிகள்

நாட்டு மக்கள் இக்கட்டான நிலையில் தத்தளிக்கும் போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வெளிநாடுகளுக்கு சென்று உரை நிகழ்த்திக்கொண்டிருப்பதாக ஜக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் குற்றம் சுமத்தியுள்ளார்.

உலகை எப்படி ஆள்வது, சுற்றுச்சூழலை எவ்வாறு பாதுகாப்பது என்று உலகத் தலைவர்களுக்குப் பல்வேறு உபதேசங்கள் வழங்கப்படுகின்றன.

உலகத் தலைவர்களுக்கு உபதேசம் செய்யும் ஜனாதிபதி தனது அரசாங்கத்தின் அமைச்சர்களுக்கு உபதேசம் செய்ய முடியவில்லை ஏனெனில் இந்த அரசாங்கத்தில் உள்ள மோசடிகள், ஊழல்கள் மட்டுமன்றி அரசாங்கத்தின் கையாலாகாத்தனம், தோல்விகள் இவையனைத்தும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்ற போதிலும் ஜனாதிபதி இவற்றையெல்லாம் கண்டுகொண்டதாகவே தெரியவில்லை.

சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட எருவுக்கு 6.9 மில்லியன் டொலர்கள் கொடுக்கப்பட்டமை தொடர்பில் அறிக்கை சமர்பிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த நாட்டில் மோசடிகளும் ஊழல்களும் தலைவிரித்தாடியுள்ளன.

ஆனால் அந்த அறிக்கை இன்னும் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவில்லை, வெளியிடப்படவில்லை.

மறுபுறம், அரசாங்கம் மோசடி மற்றும் ஊழல் சட்டமூலம் பற்றி பேசுகிறது. மோசடி, ஊழல் போன்ற சட்டமூலத்தை எடுத்துக்கொண்டாலும், மோசடி, ஊழல்கள் குறித்து வெளியாகியுள்ள அறிக்கைகளை அரசாங்கம் வெளியிடாது என்று கூறுகின்றனர்.

சீன உரங்களுக்கு 6.9 மில்லியன் டொலர்கள் செலுத்தப்பட்டமை தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.